ஆர்.பி.பாலா தயாரிக்க வி.ஆர்.துதிவாணன் இயக்க, கலையரசன், தீபா பாலு நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலைச் சேவல். ஆணவ கொலையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எழில் கொஞ்சும் பின்னணியில் வசிக்கிறார் கலையரசன். அவரது மனைவி தீபா பாலு ஒன்பது மாத கர்ப்பிணி. காதல் திருமணம் என்பதாலும், தீபா பாலு குடும்பத்தினர் மகளை ஏற்றுக் கொள்ளாத காரணத்தாலும் மனைவி மீது அதீத பிரியமும், அன்பும் செலுத்துகிறார் கலையரசன். குழந்தைக்கு தீபாவின் பெற்றோர் பெயரை வைக்கும் அளவுக்கு சுதந்திரம். கலையரசன் குடும்ப வழக்கப்படி காட்டுப்பகுதியில் குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட செல்கின்றனர். உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் முன்பே கோவிலுக்கு செல்ல இவர்கள் இருவரும் பைக்கில் கொஞ்ச நேரம் கழித்து செல்கிறார்கள். தீபா பாலுவிற்கு ஏதோ அசம்பாவிதம் ஏற்படப்போகிறது என்ற உள்ளுணர்வு ஏற்படுகிறது. ஆனாலும் குலதெய்வம் கோவிலுக்கு செல்கிறார்கள். தீபாவின் உள்ளுணர்வு சரியா? அவர்கள் என்ன செய்தார்கள்? என்பதே பதைபதைக்க வைக்கும் மீதிக்கதை.
நாயகன் கலையரசன். இந்த மாதிரியான யதார்த்த கதைக்கள்ங்கள் என்றாலே முதல் சாய்ஸ் இவர் தான். நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கலங்க வைக்கிறார். நாயகி தீபா பாலு, சின்னத்திரையில் கலகலப்பான, கலர்ஃபுல்லான களங்களில் நடித்து ரசிகர்களை வைத்திருக்கும் தீபா இப்படி ஒரு அழுத்தமான படத்தில் நல்ல சாய்ஸ். அந்த கிராமத்து பெண்ணாக, கர்ப்பிணி மனைவியாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
சமீப காலங்களில் வெளியாகும் படங்களில் எல்லாம் பால சரவணன் இருந்தார் என்றால் நம்பி படத்தில் உட்காரலாம். அப்படி இந்த படத்திலும் பல இடங்களில் அவரது கவுண்டர்கள் சிரிக்க வைக்கிறது. அதே சமயம் ஒரு முக்கியமான காட்சியில் நம் மனதில் நிற்கிறார். ஒரு வார்த்தை கூட பேசாத கஜராஜ், அவரது மைத்துனர், அவரது மகனாக வரும் சிறுவன் ஆகியோரும், கலையரசன் தாத்தா, பாட்டி, மச்சான் என அவர்களும் நல்ல ஒரு நடிப்பை தந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா படத்தின் ஆகப்பெரும் பலம். அந்த ட்ரோன் காட்சிகள் கலையரசன் வாழும் கிராமத்தின் அழகை தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறது. அந்த ஆள் நடமாட்டம் இல்லா காட்டுக்குள்ளும் காட்சிகளை மிக அழகாக படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சாந்தன் இசை இந்த மாதிரியான யதார்த்த படத்துக்கு ஏற்ற இசையையும், 3rd act-ல் வரும் காட்சிகளுக்கு ஏற்ற ஒரு பதைபதைக்க வைக்கும் இசையையும் தந்திருக்கிறது.
இயக்குனர் துதிவாணன் நமது சமூகத்தில் காலம் காலமாக நடந்து வரும் ஆணவக் கொலை என்ற ஒரு விஷயத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக படமாக்கியிருக்கிறார். ஆணவக் கொலை ஏன் நடக்கிறது என்பதை பல படங்களில் ஆழமாக காட்டியிருப்பதால், இந்த படத்தில் முடிந்தவரை சம்பவங்களை மட்டுமே எதார்த்தமாக காட்ட முயற்சித்துள்ளார். முதல் பாதி எல்லாம் ரொம்ப மெதுவாக இருக்கிறதே என எண்ணும் நேரத்தில், இரண்டாம் பாதியில் கொஞ்சம் வேகம் பிடிக்கிறது. கிளைமாக்ஸ் மனதை பாதிக்கிறது. இதற்கு இடையில் அந்த ஜோடியின் அழகான காதலை காட்டியதும் ஒரு ஆறுதல். இவ்வளவு மேம்பட்ட சமூகமாக மாறிய பின்னரும் சிறுவர்கள் உட்பட அந்த ஆதிக்கத்தில் இருந்து வெளிவராததையும் காட்டியிருக்கிறார். இன்றும் சாதாரணமாக நடக்கும் ஆணவக் கொலைகளை பற்றிப் பேசி சமூகத்தின் முகத்தை கோர தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

