ஆழி – விமர்சனம்!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆழி’. ஜாஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார். பெரும்பாலும் கடலில் நடக்கும் கதை என்பதால் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, படகு மெக்கானிக் சரத்குமார் போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து நல்ல செல்வாக்குடன் வலம் வருகிறார். அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ் கல்லூரியில் படிக்கிறார். அவருடன் படிக்கும் ஏழை மாணவன் இந்திரஜித்தை காதலிக்கிறார். இந்த காதல் விஷயம் சரத்குமாருக்கு தெரிய வர, தன் மகளின் காதலன் இந்திரஜித்தை கடத்தி ஆழ்கடலுக்கு தன்னுடைய படகில் கொண்டு செல்கிறார். நடுக்கடலில் கொலை செய்து கடலுக்குள் வீச திட்டமிடுகிறார். சரத்குமாரின் திட்டம் என்ன ஆனது? சரத்குமாரிடம் இருந்து இந்திரஜித் தப்பித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் சரத்குமார். பல பிரமாண்ட படங்களில், அதிரடியான மாஸ் படங்களில் அசத்தியவரை இந்த சிம்பிளான கதையில் பார்க்க முடியவில்லை. அவருக்கு தீனி போடும் அளவுக்கான கதை இல்லை. ஆனாலும் அவருக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்து காட்டியிருக்கிறார். அந்த கெட்டப்பில், மகள் மீது அன்பு கொண்ட, அவரது காதலுக்கு எதிராக நிற்கின்ற ஒரு தந்தையாக நல்ல நடிப்பையே வழங்கியிருக்கிறார்.

இந்திரஜித் தமிழில் அறிமுகப்படம் போல தெரிகிறது. நீளமான முடியுடன் கொஞ்சம் வித்தியாசமான தோற்றத்தில் அப்பாவியான ஒரு நடிப்பை தந்திருக்கிறார். சரத்குமார், இந்திரஜித் மோதல் தான் படமே. அதை உணர்ந்து அவரால் ஆன நடிப்பை தந்திருக்கிறார். சரத்குமார் மகளாக தேவிகா சதீஷ். கியூட்டான, இளம்பெண்ணாக அழகாக வந்து போகிறார். முதல் பாதியில் சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார், ஆனாலும் மனதில் பதிகிறார். வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், பிக் பாஸ் தாமரை என மற்ற நடிகர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

ஆனந்த் என்.நாயர் ஒளிப்பதிவில் பெரிதாக குறை சொல்லும்படி எதுவும் இல்ல. ஆரம்பத்தில் சில காட்சிகள் தவிர மொத்த படமும் ஒரே இடத்தில் நடந்தாலும் முடிந்தவரை அதை ரசிக்கும்படி கொடுக்க ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார். ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. வில்லியம் பிரான்சிஸ் பின்னணி இசையும் சுமார் ரகம். முழுக்க கடல், படகில் நடக்கும் கதை என்பதால் துல்லியமான ஒலிப்பதிவை தர ரசூல் பூங்குட்டி பெரும் பங்காற்றி இருக்கிறார். ஆனாலும் படத்தில் அதற்கான தேவை பெரிதாக இல்லை. நமக்கும் பெரிதாக எந்தவித உணர்வையும் தரவில்லை.

இயக்குநர் மாதவ் ராமதாசன், ஒரு மீன்பிடி படகு, இரண்டு எதிர் எதிர் கதாபாத்திரங்கள் அவர்களுக்கு இடையேயான மோதல், போராட்டங்களை வைத்து ஒரு படத்தை தர முயற்சி செய்திருக்கிறார். படத்தின் மைய நோக்கம், அதற்கான காரணமும் அழுத்தமாக இல்லாதது பெரிய அளவில் ஈர்ப்பை தர தவறியது நமக்கு படத்தின் மீதான பிடிப்பை தளர்த்துகிறது. இந்த மாதிரி ஒரே இடத்தில் நடக்கும் கதைகளுக்கு திரைக்கதை மிக வலுவாக இருக்க வேண்டும். ஆனால் சரத்குமாரே ஒரு சூழலில் நம்மை காப்பாற்ற யார் வருவார் என இருப்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தருகிறது. தந்தை மகள் அன்பு பெரிதா? காதலன் காதலி உறவு பெரிதா? என இருவரும் காட்டிக் கொள்ளும் அந்த காட்சி நன்றாகவே இருந்தது. மொத்தத்தில் எந்த லாஜிக்கும் பார்க்காமல் ஒரு தடவை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *