Fourth Floor – விமர்சனம்!

MANO CREATION சார்பில் A.ராஜா தயாரிக்க, LR சுந்தர பாண்டி இயக்கத்தில் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. நெடுஞ்சாலை போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து பெயர் பெற்ற ஆரி அர்ஜூனன் இந்த படத்தில் வெற்றி பெற்றாரா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஐ.டி. துறையில் பணி புரிகிறார் இளைஞர் ஆரி அர்ஜூனன். அவருடைய முன்னாள் காதலியிடமிருந்து திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வர, அவருக்காக சென்னைக்கு வருகிறார் ஆரி. கம்பெனியின் கெஸ்ட் அபார்ட்மென்டில் தங்குகிறார். அங்கு அவ்வப்போது நிகழும் அமானுஷ்ய சம்பவங்கள் அவருக்கு அதிர்ச்சியை தருவதோடு, தன் காதலி ஏதோ சொல்ல வருகிறார் என்பதை உணர்கிறார். அத்துடன் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கி இருப்பதும் தெரிய வருகிறது. அந்த பிரச்சினை என்ன? ஆரி சென்னை வந்த காரணம் என்ன? அந்த பிரச்சினையை தீர்த்தாரா? அவரது காதலி என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஆரி அர்ஜூனன். வழக்கம் போல அனைவரையும் கவரும் தோற்றத்தோடும், இயல்பான நடிப்பாலும் நம்மை கவர்கிறார். அவரை சுற்றி நிகழும் பிரச்சினைகளுக்கு மத்தியில் அவரது மன நிலையை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார். எமோஷன் காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். திகில் படத்துக்கு ஏற்ற பதட்டத்தையும் அவரது முகத்தில் வெளிப்படுத்துகிறார். ஆரியின் காதலியாக வரும் பவித்ரா, கொஞ்ச நேரமே வந்தாலும் கதையில் மையக் கதாபாத்திரமாக மனதில் ஆழமாக பதிகிறார்.

நாயகி தீப்ஷிகா, முக்கியமான கதாபாத்திரம் இல்லை என்றாலும், குறைந்த நேரமே வந்தாலும் கதைக்கு தேவையான ஒரு துணைக் கதாபாத்திரமாக நிற்கிறார். காதல், பாடல்கள் என எதுவும் இல்லையென்றாலும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு பாராட்டுக்கள். வில்லனாக இயக்குனர் சுப்பிரமணிய சிவா, அவரது தோற்றத்தாலே மிரட்டுகிறார். தலைவாசல் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வந்து வலு சேர்க்கிறார். ஆதித்யா கதிர் முதல் பாதியில் கொஞ்சம் சிரிக்க வைத்து இரண்டாம் பாதியில் காணாமல் போகிறார்.

லக்ஷ்மண் ஒளிப்பதிவு அந்த தனித்து விடப்பட்ட அபார்ட்மென்ட்டை மிக திகிலுடன் காட்சிப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இரவுக் காட்சிகளில் நம்மை கதி கலங்க வைக்கிறது. தரண் குமார் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை படத்தின் திரில்லர் மூடை, ஒருவித பதட்டத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.

இயக்குனர் சுந்தர பாண்டி. தீர்க்கதரிசி என்ற படத்தை இயக்கியவர். அவரின் அடுத்த படம். ஒரு ஹாரர் திரில்லர் படத்தை தர முயற்சித்து அதன் பின்னணியில் ஒரு கிரைம் விஷயத்தை சொல்லிய விதமும் நன்று. சிலரின் சுய லாபத்துக்காக அப்பாவி மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார். இதற்கு நடுவில் காதல், குடும்பம், அப்பா மகள் செண்டிமெண்ட் என அத்தனையும் சொல்லி ஸ்கோர் செய்கிறார். தாராளமாக குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு படமாகவே அமைந்திருக்கிறது இந்த ‘4த் ஃப்ளோர்’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *