நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் “மாமரம்”. தலைப்பே இப்படி வித்தியாசமாக இருக்க, படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைக்கும் இந்த மாமரத்துக்குமே சம்பந்தம் உண்டு என்று சொல்லலாம். காதலர்கள் சாப்பிட்டு விட்டுப்போட்ட ஒரு மாங்கொட்டை எப்படி வளரத் தொடங்கி கிளைத்து எழுகிறதோ, அந்த மாதிரியே நாயகன் ஜெய் ஆகாஷின் காதலும் முளை விட்டு எழுந்து பின் வெட்டப்பட்டு கடைசியில் எப்படி துளிர்த்து மரமாகிறது என்பதை சொல்லும் ஒரு கதையே மாமரம்.
நாம் பல ஆண்டுகளாக திரையில் பார்த்து வரும் ஜெய் ஆகாஷ் இந்த படத்திலும் அதே இளமையோடு அழகாக நடித்திருக்கிறார். இளமையான தோற்றம், உடல் பருத்த தோற்றம், மனநலம் பாதிக்கப்பட்ட தோற்றம் என்று மூன்று விதமான தோற்றங்களில் நடித்து நம்மை வியக்க வைக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மீனாட்சி மற்றும் சந்தியா. இருவருக்கும் நடிக்க வாய்ப்புகள் அதிகம். அதையும் தாண்டி கவர்ச்சியிலும் நம்மை கிறங்கடிக்கிறார்கள்.
ஜெய் ஆகாஷூடன் வரும் காதல் சுகுமார் நல்ல சாய்ஸ். கே.பி.ஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாச்சலம், மதுரை சக்திவேல், பிரம்மானந்தம், பாஷா, சத்யம் ராஜேஷ், ரம்யா மற்றும் பலர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பவுல் பாண்டி ஒளிப்பதிவு படத்துக்கு பலம். இசையமைப்பாளர் நந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஜெய் ஹரிஷாந்தின் பின்னணி இசையும் கதையின் தன்மைக்கேற்ப நேர்த்தியாக இருக்கிறது.
நாயகனாக நடித்ததோடு படத்தை எழுதி இயக்கியும் இருக்கிறார் ஜெய் ஆகாஷ். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இப்படி ஒரு காதல் கதையில் நடித்ததற்கே துணிச்சல் வேண்டும். நடிப்பில் ஸ்கோர் செய்தது போலவே இயக்குனராகவும் தன் பங்கை கொஞ்சம் சிறப்பாகவே செய்திருக்கிறார். இன்னும் பல படங்களை அவரிடம் இருந்து தாராளமாக எதிர்பார்க்கலாம்.

