கண்ணப்பா – விமர்சனம்!

இந்திய சினிமாவில் சமீக காலமாக பல புராணப் படங்களும், வரலாற்றுப் படங்களும் வாழ்க்கைப் படங்களும் நிறைய வெளிவந்து பல படங்கள் பெருவெற்றியையும் பெற்று வருகின்றன. குறிப்பாக நிறைய பக்திப் படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்து சிவனுக்காக தன் கண்களை தந்த சிவ பக்தர் கண்ணப்ப நாயனார் கதையை பற்றிய படமாக உருவாகியிருக்கும் படமே கண்ணப்பா. மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு நடிக்க உருவாகியிருக்கிறது. பல இந்திய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, இரண்டாம் நூற்றாண்டில் உடுமூர் காட்டுப்பகுதியில் வசிக்கும் ஐந்து குடிகளில் ஒன்றில் சரத்குமார் தலைவராக இருக்குறார். அவருடைய மகன் விஷ்ணு மஞ்சு (தின்னா), அவர் சிறு வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாமல் வளருகிறார். அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தான் வாயுலிங்கம் இருக்கிறது. யாரும் காணமுடியாத வகையில்  மோகன் பாபு அந்த லிங்கத்துக்கு பூஜை செய்து வருகிறார். காளாமுகி என்ற அரக்க கூட்டத்தின் தலைவர் அந்த லிங்கத்தை அபகரிக்க நினைத்து படைகளை அனுப்புகிறார். அதன் விளைவாக ஒரு போர் மூள்கிறது. ஒரு கட்டத்தில் தாய் இல்லாத தின்னா, காளாமுகர்களால் தந்தையை இழக்க நேரிடுகிறது. அதற்கு தின்னா பழிவாங்கினாரா? கடவுள் நம்பிக்கையே இல்லாத தின்னா எப்படி சிவபக்தர்களிலேயே முதன்மையானவர் ஆனார்? என்பதை பக்தி பரவசத்துடன் சொல்வதே படத்தின் மீதிக்கதை.

தின்னா / கண்ணப்பா கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சு மிக தத்ரூபமாக நடித்திருக்கிறார். நாத்திகராக, போர் வீரனாக, காதலில் விழுந்த இளைஞனாக, சிவனின் தீவிர பக்தனாக என அத்தனை பரிமாணங்களிலும் ஜொலிக்கிறார். குறிப்பாக கடைசி அரை மணி நேரத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம் மனதில் குடி கொள்கிறார். நாயகியாக வரும் பிரீத்தி முகுந்தன். நடிக்க வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் அதுவும் படம் முழுக்க வரும் கதாபாத்திரம் அமைந்தது எல்லாம் மிகப்பெரிய விஷயம். ரசிகர்களை கவர்கிறார். தின்னாவுடனான காதல் காட்சிகளாகட்டும், சிவ பக்தையாக வருவதாகட்டும் நல்ல ஒரு நடிப்பு.

பிரபாஸ் ருத்ராவாக ஒரு 30 நிமிடங்கள் வருகிறார். அவர் வந்த பின் படம் வேற லெவலில் பயணிக்கிறது. பிரபாஸ் தோற்றமே ரசிக்க வைக்கிறது. அவரது இமேஜூக்கேற்ற ஒரு கதாபாத்திரம், படத்தை தூக்கி நிறுத்துகிறார். மோகன் லால் ஒரு காட்சியில் வந்தாலும் மாஸான காட்சி. கெத்தாக வந்து மாஸ் காட்டுகிறார். அக்ஷய் குமார், காஜல் அகர்வால் சிவன் பார்வதியாக நடித்திருக்கிறார்கள். எந்த ஒரு குறையும் இல்லாத நடிப்பு. வாயுலிங்கத்துக்கு பூஜை செய்யும் சாஸ்திரியாக மோகன்பாபு. அவரது தோற்றமே மிக கம்பீரம். கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். குடிகளின் தலைவர்களாக வரும் சரத்குமார், மதுபாலா மற்றும் மற்ற நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ஷெல்டன் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். நியூஸிலாந்தில் படமாகப்பட்ட காட்சிகள் எல்லாமே அவ்வளவு அழகாக இருக்கின்றன. வாயுலிங்கம் அமைந்திருக்கும் அந்த இடமே அப்படி ஒரு அழகு. அதுவும் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது போல அந்த அருவி அமைந்திருப்பதும் அத்தனை அழகு. மோகன் லால் வரும் காட்சியின் லொகேஷனும் ஒளிப்பதிவும் அற்புதம்.

பெரிதாக ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாத ஸ்டீபன் தேவஸ்ஸி என்ற மலையாளப் படங்களுக்கு இசையமைத்தவர் இசை அமைத்திருக்கிறார். இவ்வளவு பெரிய படத்துக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை மிகச்சிறப்பாக தந்திருக்கிறார். சிவன் பாடல்கள் ஒரு புறம் பக்தி பரவசத்தை ஊட்டுகிறது. இன்னொரு புறம் காதல் பாடலையும் மிக நன்றாகவே தந்திருக்கிறார்.

இயக்குனராக மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் பொருத்தமான தேர்வு. முதல் பாதி முழுக்க பாகுபலி படத்தை நினைவுபடுத்தும் வகையில் சிவன் நிறைந்திருக்க, அத்துடன் விஷ்ணுவின் காதல் காட்சிகள், குடிகள் இடையே நடக்கும் மோதல், ஒரு எதிரி கூட்டத்துடனான போர் என வரலாற்றுப் படம் பாணியில் பயணிக்கிறது. இரண்டாம் பாதியில் குறிப்பாக கடைசி 45 நிமிடங்கள் முழுக்க பக்திப் பாதையில் பயணிக்கிறது. விஷ்ணு சிவனை உணரும் காட்சிகள் எல்லாம் திரையில் காட்சிகளாக காட்டிய விதம் பரவசம். குறிப்பாக பிரபாஸ் கதைக்குள் வந்த பின் படத்தை விட்டு விலகாமல் படத்துக்குள் கூட்டிச் செல்கிறார். கிளைமாக்ஸ் காட்சி உண்மையில் நம்மை கலங்க வைக்கிறது, பரவசமூட்டுகிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் சென்று பார்க்கக் கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது இந்த கண்ணப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *