80, 90களில் வில்லனாக நம்மை எல்லாம் மிரட்டிக் கொண்டிருந்த பலரும் தற்போது அப்படியே ரூட்டை மாற்றி காமெடி அவதாரம் எடுத்தும் 90’ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என அனைவரையும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பல படங்களின் வெற்றிக்கே இவர்களின் பங்களிப்பும் அலாதியானது. அந்த வகையில் ஆனந்தராஜ் நடிக்கும் படங்கள் எல்லாமே காமெடியில் அதகளம் தான். அப்படி ஆனந்தராஜ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள ஒரு படம் தான் “மதராஸ் மாஃபியா கம்பெனி”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையின் ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒருவரை நியமித்து அதன் மூலம் எல்லா விதமான குற்றங்களையும்செய்து வருகிறார் தாதா ஆனந்தராஜ். அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார் காவல்துறை அதிகாரி சம்யுக்தா. அதே நேரத்தில் தொழில் போட்டி, பதவி போன்ற காரணங்களுக்காக சிலர் ஆனந்தராஜை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். இந்த கைது நடவடிக்கை, கொலை முயற்சி போன்ற சிக்கல்களில் இருந்து ஆனந்தராஜ் தப்பித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
கடந்த 10, 15 ஆண்டுகளாக ஆனந்தராஜ் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றாலே கண்ணை மூடிக் கொண்டு அந்த படத்துக்கு செல்லலாம், அவரின் காமெடி எப்படியும் நம்மை சிரிக்க வைக்கும் என்பதற்கு அவரே கேரண்டி. இந்த படத்திலும் காமெடியோடு கொஞ்சம் வில்லத்தனமான நடிப்பு மூலம் மிரட்டவும் செய்கிறார். அவர் பேசும் வசனங்களும் ரசிக்க வைக்கின்றன. போலீஸ் அதிகாரியாக சக்யுக்தா, காக்கிச் சட்டை கம்பீரத்தை விட, அவரது அழகு நம்மை ரசிக்க வைக்கிறது. அவருக்கென சில ஆக்ஷன் காட்சிகளும் உண்டு, அதிலும் சிரத்தை எடுத்து அசத்துகிறார்.
ஆனந்தராஜின் மனைவியாக தீபா வழக்கம் போல தன் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார். படம் முழுக்க பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் இன்னொரு நடிகர் நம்ம முனீஷ்காந்த் தான். அவர் ஏற்ற ரவுடி கதாபாத்திரமும் சிரிப்புக்கு கேரண்டி. ஆராத்யா அளவான நடிப்பு மற்றும் ரசிக்க வைக்கும் அழகு. மற்ற நடிகர்களும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
நீண்ட நாளைக்கு பிறகு ஸ்ரீகாந்த் தேவாவின் இசை ஓரளவு ரசிக்க வைத்திருக்கிறது. மெலடி பாடலும் பலம். பின்னணி இசையும் ஓகே ரகம். அசோக் ராஜ் ஒளிப்பதிவு காமெடி படத்துக்கு ஏற்ப கலர்ஃபுல்.
இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் சீரியஸான ஒரு கருத்தை கொஞ்சம் கமர்ஷியல் அம்சங்கள் கலந்து கலகலப்பான ஒரு காமெடி படமாக தர முயற்சித்திருக்கிறார். அதில் ஆனந்தராஜ் போன்ற ஒரு தேர்ந்த நடிகரை கதையின் நாயகனாக தேற்ந்தெடுத்தைலேயே வெற்றி பெறுகிறார். நடிகர்கள் தேர்வு, காமெடி காட்சிகள் எழுதிய விதம் என நம்மை படத்தில் ஒன்றி ரசிக்க வைக்கிறார். கலகலப்பான ஒரு படமாக ரசிகளுக்கு படைத்திருக்கிறார். குடும்பத்துடன் பார்க்க்கலாம்.

