தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நல்ல நல்ல புதுப்புது கான்செப்டுகளில் படங்களை தந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு புதுவிதமான ஐடியாவை எடுத்துக் கொண்டு ஒரு காதல் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜ். தலைப்பே கதையை சொல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது. விஜே பப்பு நாயகனாகவும், அனுபமா நாயகியாகவும் நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் பப்பு அதே அலுவலகத்தில் மேனேஜராக வேலை செய்யும் நாயகி அனுபமாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால் அனுபமா வேறு ஒருவரை காதலிக்கிறார் என்பதால் அந்த காதலை மறைத்து விடுகிறார். பின் ஒரு நாள் அனுபமா வீட்டிற்கு பெண் பார்க்க பப்புவின் பெற்றோர் அவரை அழைத்துச் சொல்கிறார்கள். பப்புவை பார்த்த நாயகி தனியாக அழைத்து பேசுகிறார். அத்துடன் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை, திருமணத்தை நிறுத்தி விடலாம் என சொல்கிறார் அனுபமா. பப்பு நாம் திருமணம் செய்து ஒரே வீட்டில் 6 மாதம் ரூம் மேட்ஸ் போல இருக்கலாம், பின் விவாகரத்து செய்து கொள்ளலாம் என சொல்ல, நாயகியும் சம்மதம் சொல்ல இருவருக்கும் திருமணம் நடக்கிறது. எப்படியும் அந்த ஆறு மாதத்திற்குள் அனுபமாவுக்கு தன் மீது காதல் வர வைத்து விடலாம் என நம்புகிறார் பப்பு. ஒரு கட்டத்தில் இருவரும் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே பிரியும் சூழல் உருவாகிறது. அந்த பிரிவில் இருந்து இருவரும் சேர்ந்தார்களா? பப்பு, அனுபமா மீது வைத்திருக்கும் காதல் அனுபமாவிற்கு தெரிந்ததா? என்பதே மீதிக்கதை.
சின்னத்திரையிலும், ஒரு சில படங்களில் பார்த்து பரிச்சயமான முகமான விஜே பப்பு நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படமே நல்ல ஒரு கதையில் நடித்திருக்கிறார். நடிப்பிலும் நல்ல ஒரு மெச்சூரிட்டி. பல இடங்களில் சிவகார்த்திகேயனை நினைவுபடுத்துகிறார் நடிப்பிலும் சரி, சில இடங்களில் சிவகார்த்திகேயன் போலவே இருக்கிறார் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அப்படியே சிவகார்த்திகேயனை போலவே இருக்கிறார். கண்ணை மூடி கேட்டால் குரலும் சிவகார்த்திகேயன் போலவே இருக்கிறது. காமெடி, காதல், எமோஷனல் என எல்லாவிதமான நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
நாயகி அனுபமா, அழகாக இருக்கிறார். நடிப்பிலும் நாயகனை தூக்கி சாப்பிடுகிறார். குறிப்பாக டால் “பொம்மை” போல இருக்கும் காட்சிகளிலும் அழகான பொம்மை போலவே இருக்கிறார். நல்ல இயல்பான தமிழ் நடிகைகளுக்கு இருக்கும் பற்றாக்குறையை போக்குகிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் இவரின் நடிப்பு இன்னும் பிரமாதம். நாயகனின் நண்பனாக கதையின் திருப்புமுனை கதாபாத்திரமாக வரும் KPY ராஜவேலு ஈர்க்கிறார். ராஜவேலுவின் குழந்தையாக நடித்துள்ள பேபி தீக்ஷிதா அழகு. ராஜவேலுவின் மனைவியாக சுதா, பப்புவின் அம்மாவாக ஆஷா, அனுபமாவின் தோழியாக தாரா, அனுபமாவின் முன்னாள் காதலராக டொமினிக் என என ஒவ்வொருவருமே அவர்கள் பங்கை முடிந்தவரை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பாசில் இசை படத்துக்கு முடிந்தவரை பக்கபலமாகவே அமைந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வைரல் பாடலான, பல இளைஞர்களின் ரிங்டோனாக இருந்த “உயிரை தொலைத்தேன்” பாடலை படத்தில் முக்கியமான இடத்தில் கொண்டு வந்தது மாஸ்டர் ஸ்ட்ரோக். அந்த பாடலை படத்தில் கேட்டதுமே ஒரு நோஸ்டல்ஜியா. ஒளிப்பதிவாளர் பாலாஜி சேகர், குறிப்பிட்ட லொகேஷன்கள் மற்றும் குறைவான பட்ஜெட்டிலும் முடிந்தவரை படத்தை ரசிக்க வைக்க கடுமையாக உழைத்திருக்கிறார்.
இயக்குனர் அரவிந்த் ராஜ். நல்ல ஒரு தனித்துவமான கதைக்களத்தில் அழகான காதல் கதையை சொல்ல முயற்சி எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே கதை நிகழ்ந்தாலும் அலுப்பு தட்டாத வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் காட்சியிலேயே நமக்கு ஆர்வத்தை தூண்டுகிறார். ராஜவேலு வீட்டு விருந்து காட்சியில் கதை இப்படி தான் போகும் போல என எண்ண வைத்து இரண்டாம் பாதியில் வேறு ரூட்டில் கதையை பயணிக்க வைக்கிறார். சில காட்சிகளில் நாயகன் செயல்கள் என்னடா இது என எண்ண வைக்கிறது. ஆனாலும் காதலுக்காக என அதை ஏற்றுக் கொள்ள வைக்கிறார். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் படத்தின் நீளம், சின்ன சின்ன மொமெண்ட்ஸ் என நம்மை கவர்கிறார் இயக்குனர். மொத்தத்தில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

