FMS மீடியாஸ் சார்பில் சக்திவேல் நாகப்பன் தயாரித்து இயக்கி நாயகனாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ராட்ட. லாப நோக்கத்திற்காக இன்றி நம் சமுதாயத்திற்காக, இன்றைய சமூகத்தை பற்றிய ஒரு பார்வையோடு விசைத்தறி தொழிலை மையமாக வைத்து ஒரு வாழ்வியல் திரைப்படத்தை காதலோடு தந்திருக்கிறார் இயக்குனர். முழுக்க முழுக்க குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிக இயல்பாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் சக்திவேல் விசைத்தறி தொழிலில் தேர்ந்து விளங்குகிறார். அவர் வேலை செய்யும் இடத்திலேயே அவர் தான் சிறந்த தொழிலாளி என பெயர் வாங்கும் அளவுக்கு உழைப்பவர். அவருக்கு திருமணம் ஆக வேண்டும் என அவரது அம்மா கோவில் கோவிலாக சென்று கடவுளை வேண்டுகிறார். ஒரு கட்டத்தில் அவர் வேலை பார்க்கும் இடத்திலேயே வேலைக்கு சேரும் நாயகி ஹெலன், சக்திவேல் வீட்டுக்கு அருகிலேயே குடியேறுகிறார். ஒருவரை ஒருவர் காதலித்தாலும் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் அந்த தறி பட்டறையின் முதலாளி “சித்தா” தர்ஷன் நாயகியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவரிடம் அவர் விருப்பத்தை தெரிவிக்க நாயகி அதை மறுக்கிறார். நாயகனுடன் அவசர அவசரமாக திருமணத்தை முடிக்கிறார். திருமணத்திற்கு முன் சேமிப்பு பழக்கம் இல்லாத நாயகன், திருமணத்திற்கு பின் அத்தியாவசிய தேவைக்கே கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகிறார். இந்த சூழலில் இருந்து நாயகன் நாயகி எப்படி வெளியே வருகிறார்கள்? உழைத்து வாழ்வில் உயர்ந்தார்களா? சமூகத்தில் நல்ல ஒரு இடத்தை அடைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் டைட்டில் போடும் முன்பே ராட்ட என்ற டைட்டிலை அந்த சவுண்ட் மூலமே புரிய வைக்கிறார் இயக்குனர். படத்தில் டப்பிங் செய்திருந்தாலும் சிங்க் சவுண்ட் முறைப்படி படமாக்கிய உணர்வு படம் பார்க்கும்போது எழுகிறது. அத்தோடு முழுக்க முழுக்க நேச்சுரல் லைட்டிங் மற்றும் தங்களிடம் இருக்கும் உபகரணங்களை வைத்தே படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி. அந்த கிராமத்தின் அழகை அழகாக காட்டியிருக்கும் கழுகுப் பார்வை காட்சிகளும் கண்களுக்கு விருந்து. எடிட்டர் லோகேஷ் பங்கும் அளப்பரியது. ஆனாலும் படத்தின் நீளத்தை ஒரு 15 நிமிடங்கள் குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
மணி கிருஷ்ணன் இசை படத்தை ஒரு படி தூக்கி நிறுத்துகிறது. வான் முகில் என்ற நாயக அறிமுகப் பாடல், செவ்வழகி என்ற காதல் பாடல், வாடாமல்லி என்ற முதலிரவுப் பாடல் என அத்தனையுமே எந்தவித இரைச்சலும் இன்றி கேட்க இனிமையாகவே உள்ளது. பின்னணி இசையும் கச்சிதம். இந்த படத்தை திட்டமிட்டபடி முடிக்க நிர்வாக தயாரிப்பாளர் டாக்டர் மூதுரை பொய்யாமொழியின் பங்கு இன்றியமையாததாக இருக்கும் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. விசைத்தறி கூடம், பொருட்காட்சி என படம் பிடிக்கப்பட்ட இடங்களும் அதற்கு சாட்சி. படத்தில் எங்கு செலவு செய்ய வேண்டும், எங்கு பட்ஜெட்டை குறைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.
நாயகன் சக்திவேல் நாகப்பன். கிராமத்து எளிய மனிதராக, துடிப்பான இளைஞராக, துவண்டு போகும் கணவனாக என பல்வேறு குணாதிசயங்களை தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். சிலம்பம் சுற்றும் காட்சிகளில் அசத்துகிறார். நாயகி ஹெலன், காதல் காட்சிகளாகட்டும், குடும்பத் தலைவியாக மாறிய பின் கணவரை தேற்றும் காட்சிகளில், வாழ்க்கையின் யதார்த்ததை மிக அழகாக சொல்வதாகட்டும் என ஸ்கோர் செய்கிறார். அந்த தேர் கதையில் கைதட்டல் வாங்குகிறார்.
சித்தா படத்தில் வில்லனாக மிரட்டிய சித்தா தர்ஷன். இந்த படத்தில் புல்லட்டில் வந்து இறங்கும் முதலாளியாக கம்பீரம் காட்டுகிறார். இவர் நல்லவரா? கெட்டவரா? என நம்மை குழப்பத்திலேயே வைத்திருக்கிறார். ஆனாலும் இறுதியில் நெகிழ வைத்து நம் மனதில் பதிகிறார். சாப்ளின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி, கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ, ரத்னா, செல்லம்மா என மற்றவர்கள், அவர்களை நடிகர்கள் என்று சொல்வதை விட இயல்பான அந்த கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
இயக்குனர் சக்திவேல் நாகப்பன். இன்றைய பரபரப்பான உலகில் மிக அமைதியான தெளிந்த நீரோடை போன்ற ஒரு படத்தை பார்த்த உணர்வை தருகிறார். இன்றைய டாக்ஸிக் சமுதாயத்தில் முழுக்க முழுக்க நல்ல மனிதர்களையே கதாபாத்திரங்களாக மாற்றி ஒரு புத்துணர்வான அனுபவத்தை தந்திருக்கிறார். வில்லன், வன்முறை, வெட்டு குத்து, ஆபாசம் என எதுவும் இல்லாமல் மனதை வருடிச் செல்கிறது படம். படத்தில் ஒரு இடத்தில் கூட மனிதர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செல்ஃபோனை காட்டவில்லை. ஆடம்பரமான கார், பைக் என பந்தாவாக எதையும் காட்டவில்லை. வாய்க்கால், வரப்பு, பம்பு செட் என கிராமத்து வாழ்வியலை குடும்பத்தோடு சென்று கண்டுகளித்து விட்டு வரலாம்.

