மலையாளத்தில் Falimy என்ற ஃபீல் குட் குடும்ப படத்தை இயக்கிய இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படம் நாம் இவ்வளவு நாளாக பார்க்க ஏங்கிய SMS ஜீவாவை நமக்கு திருப்பி தரும் என்பது ட்ரைலரை பார்க்கும்போதே தெளிவாகிறது. கண்ணன் ரவி இந்த படத்தை தயாரித்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஊர்த்தலைவராக இருக்கும் ஜீவா அடுத்து வரும் தேர்தலிலும் எப்படியாவது தானே ஜெயிக்க வேண்டும் என உழைத்து வருகிறார். ஊரில் நடக்கும் எந்த பிரச்சினை, கல்யாணம், காது குத்து, துக்கம், அடிதடி பஞ்சாயத்து என எல்லாவற்றிலும் அவர் தான் முன்னிலையில் நின்று செய்து வைப்பவர். இளவரசு மகள் பிராத்தனா நாதன் திருமண வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. ஜீவாவும் ஊர்த்தலைவராக எல்லா உதவிகளையும் செய்து வருகிறார். அதே நேரம் பக்கத்து வீட்டுக்காரர் தம்பி ராமையாவுக்கும் இளவரசுக்கும் பல வருட பகை. இந்த திருமணம் நடக்கும் நேரத்தில் தம்பி ராமையாவின் அப்பா இறந்து போகிறார். ஒரு வீட்டில் திருமணம், பக்கத்து வீட்டில் துக்கம், இவற்றுக்கு நடுவே ஈகோ சண்டை என இருக்க, இந்த இரண்டையும் சமாளித்து இரண்டையும் எப்படி நடத்தினார் ஊர்த் தலைவர் ஜீவா? அந்த பல வருட பகைக்கு காரணம் என்ன? என்பதை 2 மணி நேரத்தில் சொல்லும் கலகலப்பான காமெடி படமே இந்த “தலைவர் தம்பி தலைமையில்”.
நாயகன் ஜீவா. 10 வருடங்களுக்கு முன்பு வரை நாம் மிகவும் ரசித்த ஜீவா மீண்டும் அதே போல ஒரு ரசிக்கும்படியான கதாபாத்திரத்தில் நம்மை சிரிக்க வைக்கிறார். இந்த மீட்டரில் காமெடி செய்யும் நாயகர்களே குறைவு, அதில் ஜீவா தனித்துவமானவர். இந்த இரண்டு வீட்டுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். கிளைமாக்ஸில் அவரது எக்ஸ்பிரஷன்ஸூம், பேசும் வசனங்களும் தியேட்டரில் சிரிப்பு மழை. நீண்ட நாளைக்கு பிறகு SMS, கச்சேரி, சிங்கம் புலி படங்களில் எல்லாம் பார்த்த ரகளையான ஜீவா ரசிக்க வைக்கிறார்.
நாயகியாக பிராத்தனா நாதன். மணப்பெண்ணாக அவ்வளவு அழகு. நிச்சயம் தியேட்டரில் படம் பார்க்கும் 90’s kids, 2k kids ரசிகர்களை இப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய மாட்டோமா என ஏங்க வைப்பார். இளவரசு மணப்பெண்ணின் தந்தையாக திருமணத்தை நடத்தும் பாரத்துடன் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதம். தம்பி ராமையா பக்கத்து வீட்டுக்காரராக பழைய பகையோடு அவர் தந்தை இறுதிச் சடங்கை நடத்தியே தீருவேன் என அவர் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாமே ரகளை. இளவரசு, தம்பி ராமையா மோதல் தான் கதையின் மையமே. அதை உணர்ந்து இருவருமே அதகளப்படுத்தியுள்ளனர்.
ஜென்சன் திவாகர் ஜீவாவுக்கு எதிராக தேர்தலில் ஜெயிக்க ஊர் மக்கள் வாக்குகளை வாங்க செய்யும் முயற்சிகள் எல்லாமே கதையை நகர்த்துவதோடு நம்மையும் குலுங்கி சிரிக்க வைத்து சீட்டை விட்டு நகர்த்துகிறது. ஜெய்வந்த், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் என மற்ற நடிகர்களும் அவர்கள் பங்கை சிறப்பாக செய்து காமெடிக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
பப்லு அஜு ஒளிப்பதிவு அந்த கதையின் எளிமையை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. இரவுக் காட்சிகளிலும் நன்றாகவே இருக்கிறது. விஷ்ணு விஜய் இசையில் திருமண பாடல் ஓகே ரகம், ஆனால் கிளைமாக்ஸில் வரும் பாடல் படத்துக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் நன்று,
இயக்குனர் நிதிஷ் சஹாதேவ் மற்றும் எழுத்தாளர்கள் எடுத்துக் கொண்ட கதைக்களத்துக்கு உண்மையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. சின்ன சின்ன கதாபாத்திரமும் கதையில் முக்கியமான அம்சமாக இருப்பது படத்தை மேலும் ரசிக்க வைக்கிறது. அந்த தண்ணீர் தொட்டியை கூட கதையில் ஒரு கதாபாத்திரமாக மாற்றிய விதமும் அருமை. காமெடி படமாக இருந்தாலும் மெல்லிய இழையோடும் ஒரு எமோஷனும் படத்துக்கு ஜீவனாக அமைந்திருக்கிறது. அதே நேரம் திருமண ஜோடியை காட்டிய விதமும் அவ்வளவு இயல்பு, அழகு. ஜீவாவை மிகச் சரியாக உபயோகித்த இயக்குனர்கள் எப்போதும் வெற்றியே பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் குடும்பத்தோடு சென்று சிரித்து மகிழ்ந்து விட்டு வர மிகச் சரியாக படமாக இந்த பொங்கலுக்கு அமைந்திருக்கிறது இந்த “தலைவர் தம்பி தலைமையில்”.

