சிறை – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் உண்மைக்கு நெருக்கமான கதைகள் அவ்வப்போது வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெறும். காலத்துக்கும் பேசப்படும் தலை சிறந்த படங்களாக மாறும். அப்படி ஒரு படமாக மாறும் அத்தனை சாத்தியங்களும் சிறை ட்ரைலரை பார்க்கும்போதே தெரிந்தது. டாணாக்காரன்  இயக்குநர் தமிழ் அவர் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை வைத்து கதை எழுத, அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கு? என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஆயுதப்படை காவலராக இருக்கும் விக்ரம் பிரபுவுக்கு சிறைக் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் பணி வழங்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் கொலைக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அக்ஷய் குமாரை சிவகங்கை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்கிறார் விக்ரம் பிரபு. அவருடன் இரண்டு காவலர்கள் உட்பட 4 பேர் வேலூரில் இருந்து இரவு முழுக்க பயணிக்கிறார்கள். விக்ரம் பிரபு பொறுப்பில் விடப்பட்ட அக்ஷ்ய குமாரை முறையாக கவனமாக அழைத்து சென்று திரும்ப அழைத்து வந்தாரா? அக்ஷய் குமார் யாரை கொலை செய்தார்? எதற்காக சிறையில் இருக்கிறார்? அந்த ஒரு நாள் Escort duty-யில் விக்ரம் பிரபுவுக்கும், அக்ஷய் குமாருக்குமான உறவு எப்படி இருந்தது? என்ன மாற்றங்கள் நிகழ்ந்தது? என்பதை மிக அழுத்தமாக, எமோஷன்ஸ் கலந்து தந்திருக்கும் ஒரு யதார்த்த படமே இந்த சிறை.

நாயகன் விக்ரம் பிரபு. ஏற்கனவே டாணாக்காரன் படத்தில் இதே போன்றதொரு ரியல் வேர்ல்ட் காவலராக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் இந்தப் படத்திலும் கதிரவன் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தின் மதிப்பு காட்சிகள் போகப்போக பன்மடங்கு அதிகரிக்கிறது. அவருக்கும் அவர் மனைவியாக வரும் ஆனந்த தம்பிராஜாவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகு. அவரும் அவரது கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நம் மனதில் பதிகிறார்.

விக்ரம் பிரபுக்கு இணையாக இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் LK அக்‌ஷய் குமாருக்கு மிகச் சிறந்த ஒரு அறிமுகப் படம். மிக மிக யதார்த்தமான, பார்த்தாலே அந்த கதாபாத்திரத்திற்கு நல்லதே நடக்கணும் என அவர் வலியை நம் வலியாக எண்ண வைக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். உணர்வுப் பூர்வமான காட்சிகளில் கலங்க வைக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில் குமார் தான் படத்தின் ஆன்மா. இருவருக்குமான அந்த கெமிஸ்ட்ரி அவ்வளவு அற்புதம். அந்த நீதிமன்ற காட்சியில் இந்த ஜோடியை பார்த்து கண் கலங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. மிக முக்கியமான காட்சியிலும் நம் மனதை பதைபதைக்க வைக்கிறார். இன்னும் பல படங்களில் அவரை எதிர்பார்க்கலாம். நிச்சயம் பல விருதுகளை வெல்வார் என நம்பலாம். பி.எல்.தேனப்பன் ஒரு காட்சியில் வந்தாலும் ஸ்கோர் செய்கிறார். நாயகியின் குடும்பத்தாராக நடித்த அத்தனை பேரும் அவ்வளவு ரியல் முகங்கள். காவலர்களாக வருபவர்கள் அனைவருமே நடிகர்கள் தானா அல்லது உண்மையான காவலர்களா என எண்ண வைக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் அனைத்துமே மனதுக்கு நெருக்கமாக, மிக மிக இதமாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. கலர் கிரேடிங்கும் படத்தின் டோனும் மிக அற்புதம். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு நான் லீனியர் எடிட்டிங்கிலும் கதையை குழப்பமில்லாமல் சொல்வதோடு படத்தின் எமோஷனை மிக அழகாக கடத்தியிருக்கிறது.

இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி, வெற்றிமாறன் பட்டறையில் இருந்து வந்தவர் என்பதை மிக அழுத்தமாக அவரது திரை மொழியிலும் கதை சொல்லலிலும் காட்சி அமைப்பிலும் நிரூபிக்கிறார். மைனா, டாணாக்காரன் போன்ற படங்களை ஆங்காங்கே நல்ல முறையில் நினைவுபடுத்தினாலும் கதைக்களத்தின் மூலம் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. யதார்த்த வாழ்வியலை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார். காவலர் பணியிடங்கள், நீதிமன்றம், Escort duty என உண்மைக்கு மிக நெருக்கமாக படத்தை தந்த விதத்தில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். படத்தின் ஆன்மாவான எமோஷனை மிகச்சிறப்பாக கையாண்ட விதத்தில் தான் ஒரு நல்ல இயக்குனர் என்பதை பறைசாற்றுகிறார். மொத்தத்தில்

சிறை – 2025-ன் மிகச்சிறந்த படம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *