தூள் பேட் போலீஸ் ஸ்டேஷன் – விமர்சனம்!

ஆஹா ஓடிடி தளம் என்பது பல மீடியம் பட்ஜெட்டில் நல்ல நல்ல திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை ரசிகர்களுக்கு தொடர்ந்து அளிக்கும் ஒரு ஓடிடி தளம். அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள இணைய தொடர் “தூள்பேட் போலீஸ் ஸ்டேஷன்”. ஜஸ்வினி இயக்கத்தில் அஸ்வின்குமார், குரு லக்ஷ்மண், பாடினி குமார் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒரு அல்லது இரண்டு எபிசோடுகள் வெளியாகும் இந்த தொடரில் இது வரை வெளியான எபிசோடுகள் எப்படி இருக்கு? என்பதை பார்க்கலாம்.

தொடரின் கதைப்படி, தசரா திருவிழா சமயம். தூள்பேட் பகுதியில் அமைந்திருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடக்கிறது. அந்த நேரத்தில் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு புது ACP வரப் போகிறார் என்ற தகவலை தருகிறார் கமிஷனர். இந்த ஸ்டேஷன் தான் வேண்டும் என விரும்பிக் கேட்டு வந்திருக்கிறார் ACP. அந்த ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக இருக்கும் பாடினி குமார், 3 தலைகள் உருளப் போகிறது என சொல்கிறார். அவர் சொன்ன மாதிரியே அந்த ஊரில் இருக்கும் ஒரு ரவுடியின் தலையை வெட்டி போலீஸில் சரண்டைகிறது எதிர் கோஷ்டி. இன்னொரு தலை அந்த ஊர் ஐஸ் ஃபேக்டரி ஓனரின் மகள். மூன்றாவதாக ஒரு பெண்ணின் தலை எரிந்த நிலையில் கிடைக்கிறது. அந்த மூன்று கொலைகளும் ஏன் நிகழ்ந்தது? அந்த கொலைகளின் பின்னணி என்ன? ACP அஸ்வின்குமார் ஏன் தூள்பேட் போலீஸ் ஸ்டேஷன் தான் வேண்டும் என கேட்டார்? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் சொல்வார்கள். அந்த எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு எபிசோடும் முடிகிறது.

கதையின் நாயகனாக அஸ்வின் குமார், ACP-யாக அந்த தோற்றத்தில் கச்சிதமாக வருகிறார். இதுவரை வந்த எபிசோடுகளில் அவர் கதாபாத்திரத்தின் முழு தன்மையும் வெளியாகவில்லை. அடுத்தடுத்த எபிசோடுகளுகளில் இன்னும் முக்கியத்துவம் இருக்கும் என்பது கதைப் போக்கில் தெரிகிறது. நாயகியாக பாடினி குமார். போலீஸ் கான்ஸ்டபிளாக, ஒரு இன்னொசன்ஸ் உடன் யதார்த்தமான நடிப்புடன் மனதில் பதிகிறார். குரு லக்ஷ்மண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அவரை நிரூபிக்கிறார். மற்ற வேடங்களில் நடித்தவர்களும் அவர்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

சதீஷ்குமார் ஒளிப்பதிவு படத்துக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் அதை விட தரமான ஒளிப்பதிவை தந்திருக்கிறார். தசரா பண்டிகை காட்சிகள் இருப்பது போல கொஞ்சம் காட்சிகள் காட்டியிருக்கிறார்கள். இனி வரும் எபிசோடுகளில் ஏதும் இருக்கிறதா என்பதை எதிர்பார்க்கலாம். சாம் படத்தொகுப்பில் ஒவ்வொரு எபிசோடும் கச்சிதம். அஸ்வத் இசை படத்தின் கதைக்களத்தின் நேட்டிவிட்டியை அழகாக பிரதிபலிக்கிறது.

ரமண கிரிவாசன் திரைக்கதை வசனம் எழுத, இயக்கியுள்ளார் ஜஸ்வினி. இந்த கதையை அழகாக ஒவ்வொரு எபிசோடாக, கச்சிதமாக எடுத்திருக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து தேவையற்ற காட்சிகள் இல்லாமல் கிரிஸ்ப்பாக எடுத்திருக்கிறார். எடுத்தவுடன் கதைக்குள் இழுத்துச் செல்லும் இயக்குனர், அடுத்தடுத்த காட்சிகளில் மூன்று கொலைகள், அவர்கள் பின்னணி, அதனூடே காதல் போர்ஷன் என அழகாக பிணைத்துள்ளார். இனி வரும் எபிசோடுகளுக்கான எதிர்பார்ப்பையும் ஏற்றியிருக்கிறார். தமிழில் வெளிவந்த விலங்கு போன்ற தொடர்களை போல நல்ல ஒரு சீரீஸாக வந்து கொண்டிருக்கிறது. நிச்சயம் பார்க்கத் துவங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *