யாரு போட்ட கோடு – விமர்சனம்!

டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. தமிழகம் முழுவதும் ஃப்ரைடே பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் அஜய் வெளியிடுகிறார். சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படத்தில் குழந்தைகளின் பங்களிப்பும் மிக அதிகம். இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஆசிரியராக நாயகன் பிரபாகரன், பள்ளி மாணவர்களுக்கு வெறும் ஆசிரியராக மட்டுமல்லாமல் எல்லாமுமாய் இருந்து அவர்கள் வாழ்க்கையில் குருவாக இருக்கிறார். மாணவர்களுக்கு மட்டுமின்றி அந்த ஊர் முழுக்கவே எல்லாருக்கும் உதவியாக இருக்கிறார். சாதிய அடக்குமுறை, தீண்டாமை போன்றவற்றுக்கு எதிராக இருக்கிறார். அவரின் மாணவர்களில் ஒருவர் தான் துகின் சேகுவேரா. இந்த பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து போராடி ஒயின் ஷாப்பையே மூட வைக்கிறார்கள். துகின் சேகுவேராவின் அப்பா லெனின் வடமலை, அந்த ஊரின் பிரசிடெண்ட். அடுத்து எம்.எல்.ஏ. ஆகும் முயற்சியிலும் இருக்கிறார். அவர் ஜாதி வெறி ஊறிப் போனவர். பிரபாகரனின் செயல்களால் கடுப்பான பிரசிடெண்ட் லெனின் வடமலை என்ன செய்கிறார்? பிரபாகரனுக்கும் லெனின் வடமலைக்கும் இடையே ஏற்படும் மோதல் என்ன ஆகிறது? பிரபாகரன் செயல்கள் மாணவர்களிடமும், அந்த ஊர் மக்களிடமும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே மீதிக்கதை.

நாயகன் பிரபாகரன். கருப்பான கலையான ரசிகர்களை ஈர்த்த நம்ம பல ஹீரோக்களை நினைவுபடுத்துகிறார். குறிப்பாக சிவந்த கண்களோடு இளவயது கேப்டனை நினைவுபடுத்துகிறார். வசன உச்சரிப்பில் ரசிக்க வைக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் குறைவில்லை. காதல் காட்சிகளில் நாயகியுடன் நல்ல கெமிஸ்ட்ரி. நாயகியாக மேகாலி மீனாட்சி. நடிக்க கொஞ்சம் வாய்ப்பு குறைவு தான் என்றாலும் அவர் பங்கை அழகாகவே செய்திருக்கிறார். அச்சச்சோ பாடலில் அழகு.

வில்லனாக லெனின் வடமலை. ஜாதி வெறி, ஏற்றத் தாழ்வு பார்க்கும் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். தன் தொழிலுக்கும், கொள்கைகளுக்கும் எதிராக இருக்கும் நாயகனை பழி வாங்கத் துடிப்பது என தன் பார்வையாலேயே தன் பாதி வேலையை முடித்து விடுகிறார். தன் மகன் உயிரையும் விட ஜாதி தான் முக்கியம் என வாழும் ஒரு கொடூரமான வில்லனாக பதைபதைக்க வைக்கிறார். குழந்தை நட்சத்திரமாக வரும் துகின் சேகுவேரா நல்ல கனீர் குரல் வளத்துடன் எந்த வித கேமரா பயமும் இல்லாமல் துணிச்சலாக நடித்துள்ளார். மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

செளந்தர்யன் மற்றும் ஜெய்குமார் இசையில் பாடல்கள் எல்லாமே ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக அச்சச்சோ பாடல் நம்மை சொக்க வைக்கிறது. ஜெய் குமார் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு கிருஷ்ணகிரியின் கிராமப் பகுதிகளை நன்றாகவே காட்சிப்படுத்தியிருக்கிறது. பாடல் காட்சிகளையும் கலர்ஃபுல்லாக காட்டியிருக்கிறார். ஸ்ரீராம் 2 மணி நேரத்துக்கு கச்சிதமாக படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

இயக்குனர் லெனின் வடமலை சமூகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகளை அவற்றின் விளைவுகளையும் மிக துணிச்சலாக பேசியிருக்கிறார். அதை ஒரு ஆசிரியர் கதாபாத்திரம் மூலமும், ஒரு பள்ளி மாணவன் கதாபாத்திரம் மூலமும் பேசி பாராட்டை பெறுகிறார். பள்ளி மாணவர்களும் சமூகப் பிரச்சினைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். குறிப்பாக தீண்டாமைக்கு எதிராக சாட்டையை சுழற்றியிருக்கிறார். படத்தின் வசனங்களும் நச்சென்று பதிகிற வகையில் ஒவ்வொன்றும் அருமை. மொத்தத்தில் அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு படம். குறிப்பாக அந்த முதலிரவு பாடல் காட்சி மற்றும் பார்ட்டி பாடல் காட்சியையும் நீக்கி விட்டு பள்ளி மாணவர்களுக்கே திரையிட்டு காட்டலாம். நல்ல ஒரு முயற்சி இந்த ‘யாரு போட்ட கோடு’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *