இரவின் விழிகள் – விமர்சனம்!

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில், இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “இரவின் விழிகள்”. சமூக வலைத்தளங்கள் இன்றைய சமூகத்தில் நிகழ்த்தியிருக்கும் மோசமான விளைவுகளை தோலுரித்துக் காட்டும் முயற்சியாக, ஒரு சைக்கோ திரில்லர் ஜானர் படமாக உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, காட்டுப் பகுதியில் சிலர் ஒரு மர்ம மனிதனால் கடத்தி கொலை செய்யப்படுகிறார்கள். போகப் போக தான் தெரிகிறது அவர்கள் சமூக வலைத்தள பிரபலங்கள் என்பது. அதே நேரத்தில் சமூக வலைத்தளத்தில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கடந்த பிரபலங்களான மகேந்திரா, நீமா ரே ஜோடி, ஒரு கடை திறப்பு விழாவுக்காக அந்த காட்டுப் பகுதியை கடந்து செல்ல, அந்த நேரத்தில் அந்த மர்ம மனிதன் அவர்கள் காரை விபத்துக்குள்ளாக்குகிறான். யார் அந்த மர்ம நபர்? எதற்காக இவர்களை எல்லாம் கொலை செய்கிறான்? மகேந்திரா, நீமா ரே அவனிடம் இருந்து தப்பித்தனரா? என்பதே மீதிக்கதை.

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் நடிகர்களில் சிக்கல் ராஜேஷ் ஸ்கோர் செய்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் எல்லாமே நன்றாக இருக்கிறது, ஒரு நடிகராகவும் முடிந்த வரை நல்ல நடிப்பை தந்திருக்கிறார். அவரது தங்கையாக வரும் நடிகை ஆன்சியும் நல்ல அழுத்தமான நடிப்பை தந்துள்ளார். இணைய பிரபலங்களாக நடித்திருக்கும் மகேந்திரா, நீமா ரே இன்றைய Influencers-ஐ அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள். நீமா ரே கவர்ச்சிக்கும் குறை வைக்கவில்லை.

முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி, காவல்துறை அதிகாரிகளாக சேரன் ராஜ், சிசர் மனோகர் ஜோடி, ஒரு குத்துப் பாட்டுக்கு மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் என மற்ற நடிகர்களும் ஓரளவு நடிப்பை தந்திருக்கிறார்.

ஏ.எம் அசார் இசையில் குத்துப்பாட்டு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையிலும் ஓகே ரகம். பாஸ்கர் ஒளிப்பதிவில் காடு சம்பந்தப்பட்ட காட்சிகளும், இரவு காட்சிகளும் கொஞ்சம் திகிலை தருகிறது. ஆர்.இராமர் படத்தொகுப்பு 2 மணி நேரத்துக்கு படத்தை நீட்டாக கட் செய்திருக்கிறார்.

இயக்குனர் சிக்கல் ராஜேஷ், எளிதாக காசு சம்பாதிக்கும் நோக்கில் சமூகத்தை பற்றி கவலையே இன்றி எதையும் செய்ய துணிந்தவர்களை பற்றி மிக துணிச்சலாக பேசுகிறார். அதோடு போகிற போக்கில் சரக்கு சந்தர், ரவுடி பேபி போன்ற கதாபாத்திரங்களையும் வைத்து கதையில் ஒன்ற வைக்கிறார். திகில் படமாக தரவும் முயற்சி செய்திருக்கிறார். சமூக ஊடகங்களின் மோசமான விளைவுகளையும் ஆழமாக அலசியிருக்கிறார். ஃபிளாஷ்பேக் காட்சிகள் தான் படத்தின் ஆன்மா. மற்ற பகுதிகளை விட ஃபிளாஷ்பேக் நம் மனதில் நிற்கிறது. மேக்கிங் மற்றும் நடிப்பை வாங்குவதில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நல்ல படமாக வந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *