மெஸன்ஜர் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஆயிரம் காதல் கதைகள் வெளிவந்திருக்கின்றன. எத்தனையோ புதுமையான கோணங்களில் காதல் படங்கள் வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலிலும் புதுமையான ஒரு காதல் கதையை ஒரு படமாக தர முடியுமா? என்ற கேள்விக்கு ஆம், முடியும் என்று ஒரு புதுமையான காதல் கதையை தந்திருக்கிறார் மெஸன்ஜர் படத்தின் இயக்குனர் ரமேஷ் இளங்காமணி. அப்படி என்ன புதுமையை செய்திருக்கிறார்? என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, தன் காதலி தன்னை பிரேக் செய்ய, அந்த காதல் தோல்வியில் உழன்று கொண்டிருக்கும் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரின் ஃபேஸ்புக் மெஸன்ஜரில் அனிதா என்ற பெண் “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள், அவர்களுக்காக வாழுங்கள்” என மெசேஜ் செய்கிறார். அப்போது தற்கொலை எண்ணத்தை கைவிடும் நாயகன், அவரைப் பற்றி விசாரிக்க துவங்க அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே சாலை விபத்தில் இறந்து விட்டேன், இந்த மெஸன்ஜர் வழியாக தான் உங்களை தொடர்பு கொள்கிறேன், உங்கள் அருகில் தான் இருக்கிறேன் என சொல்ல, அதிர்ச்சி அடைகிறார் நாயகன். இறந்தவர் எப்படி தனக்கு மெசேஜ் அனுப்பு முடியும், உண்மையில் அவர் யார்? அவர் இறந்து விட்டாரா? அவர் ஏன் தன்னை வாழ வைக்க நினைக்கிறார்? என ஸ்ரீராம் கார்த்திக் தேடிக் கண்டறிய எடுக்கும் நடவடிக்கைகளே மீதிக்கதை. படத்தின் இரண்டாம் பாதி தான் இந்த படத்தின் தனித்துவமான அம்சமே.

நாயகன் ஸ்ரீராம் கார்த்திக். காதல் தோல்வியில் உழலும் ஒரு கதாபாத்திரத்தில் சோகத்துடன் சுற்றும் ஒரு கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை தந்திருக்கிறார். படத்தின் பிற்பாதியில் கற்பனையில் மட்டுமே நடிக்க முடிகின்ற ஒரு கதாபாத்திரத்தில் இயல்பாக தன்னை பொருத்திக் கொள்கிறார். இரண்டு நாயகிகளில் முதல் காதலியாக வரும் மனிஷாஸ்ரீ காதல் மற்றும் காமெடி என இரண்டிலும் தன் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார். கதையின் மையக்கதாபாத்திரமான இன்னொரு நாயகி பாத்திமா கிராமத்து பெண்ணாக, செல்ஃபோனில் ரீல்ஸ் போடுவதில் ஆரம்பித்து காதலில் ஏங்குவது, பின் படத்தின் ஆன்மாவாக இருப்பது என படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.

கிராமத்து பெண்ணாக நாயகியின் தோழியாக வரும் வைஷாலி ரவிச்சந்திரன் நல்ல ஒரு துரு துரு கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். நாயகியின் தந்தையாக ஜீவா ரவி, காவல் துறை அதிகாரியாக லிவிங்ஸ்டன், நாயகியின் அம்மாவாக கவண் பிரியதர்ஷினி, நண்பராக பிரஷாந்த் என மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

அபுபக்கர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் முடிந்த வரை படத்தின் உணர்வை கடத்த முயற்சித்திருக்கிறார். பால கணேசன் ஒளிப்பதிவு நகரம், கிராமம் என காட்சிகளை மிக அழகாக பிரித்து, எளிமையாகவும் அதே சமயம் கலர்ஃபுல்லாகவும் படமாக்கி இருக்கிறார்.

இயக்குநர் ரமேஷ் இளங்காமணி இந்த புதுமையான முயற்சியிலேயே பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். பின் தன் கதை சொல்லல் மற்றும் படமாக்கலிலும் ஸ்கோர் செய்கிறார். இந்த மாதிரி ஒரு காதல் கதையை கையாள்வதற்கே தனி தைரியம் வேண்டும், அதுவும் இரண்டாம் பாதி எல்லாம் அசட்டு தைரியம். திரில்லர் போல துவங்கி பின் மென்மையான காதல் கதையாக மாறும் இடத்தில் ரசிகர்கள் ஆன்மாவை தொடுகிறார். கோடி கோடிகளை கொட்டி ஃபேண்டஸி படங்களை எடுக்கும் இந்த காலகட்டத்தில் மிக எளிமையான, சின்ன பட்ஜெட்டில் நல்ல ஒரு படத்தை தந்து நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார். மொத்தத்தில் ’மெஸன்ஜர்’ அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய, நம் ஆன்மாவை தொடும் ஒரு உன்னத முயற்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *