போட்டோகிராபர் – விமர்சனம்!

நல்ல கதையம்சம் திரைப்படங்கள், தனித்துவமான முயற்சிகள் என தமிழ் சினிமா என்றைக்கும் தனி ரூட்டில் வெற்றி நடை போட்டே வந்திருக்கிறது. அப்படி சின்ன சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் அடேங்கப்பா என நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தான் ‘போட்டோகிராபர்’ (Photographer). ஒரு சைக்கலாஜிக்கல் மிஸ்டரி திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஷ்ரப் அலி நாயகனாக நடித்துள்ளார். இத்துடன் அவரே எழுதி இயக்கியுள்ளார். இந்த படம் எப்படி இருக்கு? என்பதை இங்க்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் அஷ்ரப். அவரது தந்தை நரேன் அவர்களது பிஸினஸை பார்த்துக் கொள்ள சொல்லி வறுபுறுத்துகிறார். ஆனால் அஷ்ரப் எனக்கு பிடித்த ஃபோட்டோகிராபியில் சாதிக்கணும் என சொல்லி கடைசியாக ஒரு முறை ஒரு 6 மாதம் நேரத்தை வாங்குகிறார். பிடிவாத குணமுடைய அஷ்ரப் ஒரு வைல்ட் லைஃப் போட்டோகிராபர் என்பதால் கொடைக்கானலுக்கு மர்மங்கள் நிறைந்த ‘மதிகெட்டான் சோலை’ என்ற அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார். அங்கு உள்ளே செல்பவர்கள் எவரும் திரும்பி வந்ததே இல்லை என பலரும் எச்சரிக்கிறார்கள். ஆனாலும் கேமரா, கூகுள் மேப் துணையுடன் உள்ளே நுழையும் அவர் திரும்பி வந்தாரா? அந்த இடத்தின் ரகசியம் என்ன? அவர் ஏன் அந்த வைல்ட் லைஃப் விஷயத்தை பிடிவாதமாக செய்கிறார்? என்பதே மீதிக்கதை.

நாயகன் அஷ்ரப். கதையின் நாயகனாக நடித்ததோடு எழுதி இயக்கியிருப்பதால் தனக்கு என்ன வரும், எப்படி தன்னை காட்ட வேண்டும் என கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். சீரியஸான இந்த படத்தை அந்த தன்மையோடு அணுகி நடிப்பிலும் குறையில்லாமல் பங்களிப்பு செய்திருக்கிறார். அவரது நண்பனாக வரும் கருணாகரன், சில காட்சிகள் வந்தாலும் படத்துக்கு வலு சேர்க்கிறார்.

நாயகி ஜனனி சமாதானம், நடிக்க பெரிய அளவில் வாய்ப்பு இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்தியிருக்கிறார். நாயகனின் தந்தையாக வரும் நரேன் ஒரு அப்பாவாக நல்ல அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார். படத்தின் ஆன்மாவாக, ஆணிவேராக வரும் முக்கிய கதாபாத்திரத்தில் தேவி மகேஷ் நம்மை நெகிழ வைக்கிறார். வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, வெற்றிவேல் ராஜா என மற்ற நடிகர்களும் சிறப்பு.

ராஜ்குமார் சந்திரசேகரின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். காட்டில் நடக்கும் பெரும்பாலான காட்சிகளை மிரட்டலாக காட்டிய ரயீஸ் அஹ்மது ஒளிப்பதிவுமே படத்தின் முக்கியமான அம்சம்.

இயக்குனர் அஷ்ரப் எடுத்துக் கொண்ட கதைக்களம் நல்ல ஆர்வத்தை தூண்டும் ஒன்றாகவே இருக்கிறது. அதை திரைக்கதையிலும் நன்றாகவே பிணைத்திருக்கிறார். வெறும் திரில்லர் படமாக மட்டும் கொடுக்காமல் ஒரு எமோஷனை கதையில் கொண்டு வந்தது மிகச்சிறப்பு. திரைக்கதையின் முதல் பாதி முழுக்க மிஸ்டரி திரில்லர் பாணியில் நகர்ந்து ஓரளவு உட்கார வைக்கிறது. இரண்டாம் பாதியில் திரில்லரை தாண்டி மெல்லிய உணர்வுடன் வரும் காட்சிகள் நம்மை கொஞ்சம் ஒன்ற வைக்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். மதிகெட்டான் சோலை பற்றிய விஷயங்களையும் கொஞ்சம் அப்படியே பாதியில் விட்டு விட்டு போன உணர்வு. மொத்தத்தில் ஃபேண்டஸி கலந்த சைக்காலஜிக்கல் கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு ‘போட்டோகிராபர்’ ஒரு நல்ல ஒரு த்ரில்லர் அனுபவமாக இருக்கும். நிச்சயன் ஒரு முறை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *