எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்த 50 ஹீரோயின்கள் – நடிகர் பாலா!

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரிப்பில், ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கத்தில் KPY பாலா நாயகனாக நடித்துள்ள படம் “காந்தி கண்ணாடி”. நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடிக்க, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, அமுதவாணன், மனோஜ், மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார். இதனாலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் காந்தி கண்ணாடி படக்குழுவினர் மற்றும் வினியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்போது பேசிய நாயகன் பாலா, “எனக்கும் இயக்குனர் ஷெரீப்புக்கும் நீண்ட கால பழக்கம். நிறைய சினிமா பற்றி பேசுவோம். அவர் இயக்கும் படத்தில் நாயகனின் நண்பன் கதாபாத்திரம் இருந்தால் சொல்லுங்க என்றெல்லாம் கேட்டிருக்கிறேன். ஒரு நாள் பாலா நீ ஹீரோவா நடிக்கிறாய் என்றார். எனக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி. அப்படி தொடங்கப்பட்ட படம் தான் காந்தி கண்ணாடி. எல்லா கட்டத்திலும் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் ஜெய் கிரணுக்கு நன்றி.

இப்படத்துக்கான ஹீரோயின் தேர்வு எனக்கு மிகப்பெரிய அனுபவம். இயக்குனர் அலுவலகத்தில் பல நடிகைகள் கதை கேட்பார்கள். நான் ஹாலில் காத்திருப்பேன். கதை நன்றாக இருக்கிறது. யார் ஹீரோ? என்று கேட்பார்கள். பாலா என்று சொன்னதும் நான் பிறகு சொல்கிறேன் என்று சொல்லி விட்டு சென்று விடுவார்கள். இதனால் அவர்கள் மீது எனக்கு வருத்தமோ, கோபமோ கிடையாது. அது அவர்களின் தவறு கிடையாது. அவர்கள் தரப்பில் அது தான் நியாயம். இப்படியே 50 பேர் எனக்கு ஜோடியாக நடிப்பதை மறுத்து புறக்கணித்தனர். 51வது ஆளாக கதை கேட்டவர் தான் நமிதா கிருஷ்ணமூர்த்தி. கதையை கேட்ட பிறகு பாலா தான் ஹீரோ என சொன்ன பிறகும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கண்டிப்பாக நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னார். அவருக்கு நிச்சயம் நான் நன்றி சொல்லியே தீர வேண்டும். பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா அம்மா போன்ற அனுபவம் வாய்ந்த லெஜன்ட்ஸ் உடன் நடித்தது எனக்கு கிடைத்த பாக்கியம்” என்றார்.

இதை பற்றிப் பேசிய நாயகி நமிதா கிருஷ்ணமூர்த்தி, “50 பேர் நடிக்க மறுத்ததை நான் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த 50 புறக்கணிப்பும் எனக்கு கிடைத்த 50 ஆசீர்வாதங்களாகவே எடுத்துக் கொள்கிறேன். அதனால் தான் எனக்கு இந்த மாதிரி ஒரு நல்ல படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பும் அமைந்தது. இந்த படம் நிச்சயம் பேசப்படும். பாலா இன்னும் பெரிய உயரங்களை அடைவார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *