நடிகர் ரவி மோகன் அவரது திரை வாழ்வில் புதிய அத்தியாயமாக “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியிருக்கிறார். இந்திய திரையுலகை சார்ந்த பல நட்சத்திரங்களின் முன்னணியில் கோலாகலமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்வில் அவர் தயாரிக்கும் முதல் இரண்டு படங்களின் அறிவிப்பு மற்றும் ப்ரோமோவையும் வெளியிட்டார்.
முதல் படம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் “BRO CODE”. இரண்டாவது திரைப்படம் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, ஜெயம் ரவி இயக்குனர் அவதாரம் எடுக்கும் “The ordinary man” திரைப்படம்.
விழாவின் நாயகன் இயக்குனர், தயாரிப்பாளர் & நடிகர் ரவி மோகன் பேசும்போது, “நான் இயக்குனர் ஆகி விட்டேன். நான் இயக்குனர் ஆகினால் யோகி வைத்ததால் படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதற்கான புரோமோவும் எடுத்து விட்டேன். இன்று என்னுடைய இரண்டு படங்களின் பூஜையும் ஒரே நேரத்தில் நடப்பதில் மிகவும் மகிழ்ச்சி. கார்த்தியும் நானும் ஆடம்பரத்தை விரும்பாதவர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தாய்லாந்தில் சாலையில் அவ்வப்போது பேசிக்கொண்டே நடந்து போவோம். அப்போது எங்களுடைய மீசை, தாடி, உடைகளை பார்த்து இருவரும் அண்ணன் தம்பிகளா என்று பலர் கேட்டிருக்கிறார்கள். அந்த ப்ரோ கோட்-ம் அன்பும் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சினிமா… கோடிக்கணக்கான மக்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சி. திரையரங்கில், யாரோ ஒருவரின் வசனமும் நடிப்பும் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும், கண்ணீர் சிந்தவும் செய்கிறது. பலரின் உழைப்பால் தான் ஒரு படம் உருவாகிறது. அந்தப் படங்களில் மக்களால் விரும்பப்பட்டவை வெற்றியை அடைகின்றன. பல நல்ல படங்கள் மக்களால் காலங்கள் கடந்தும் இன்னமும் கொண்டாடப்படுகின்றன. ஒரு சாதாரண நபரை கூட, உலகம் கொண்டாடும் ஒரு பிரபல நட்சத்திரமாக மாற்றும் சக்தி சினிமாவுக்கே உண்டு. அதில் நானும் ஒருவன் தான். எனக்கு இந்த உலகத்தில் மிகவும் பிடித்தது என் ரசிகர்கள். அவர்கள் எனக்குக் கொடுத்த பரிசு – இந்த சினிமா. நடிப்பதைக் கடந்து, சினிமாவில் நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவது நிறைய இருக்கிறது. அது, நான் நீண்ட நாட்களாகக் கனவு காண்பதும்கூட.
அதில் ஒன்று தான் ரவி மோகன் ஸ்டுடியோஸ் – என் சொந்த தயாரிப்பு நிறுவனம். என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படியாக, என் மனசுக்கு பிடித்த இரண்டு முக்கிய விஷயங்களை வைத்திருக்கிறேன்.
ஒன்று – இயக்குநர் கார்த்திக் யோகியின் இயக்கத்தில் நான் நடிக்கும் ப்ரோ கோட் படம். இன்னொன்று – நம்ம யோகிபாபுவை வைத்து, நான் முதன்முறையாக இயக்கவிருக்கும் மற்றொரு படம்.
முக்கியமாக உங்களிடம் சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் இருக்கு. ரவி மோகன் ஸ்டுடியோஸ் தொடங்கப்பட்டது, என்னுடைய படங்களை தயாரிப்பதற்காக மட்டுமல்ல. பலரின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கத்தான்.
அதில், முதல் முறையாக திரைப்படம் இயக்கவிருக்கும் புதிய இயக்குநர்கள், இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, முன்தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதோடு, ஓடிடி தளங்களில் கற்பனை மற்றும் ஆவணப்படத் தொடர்கள் என பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மேலும், சரியான முறையில், நல்ல உள்ளடக்கத்துடன் உருவாக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களுக்கு ஆதரவளிக்க எப்போதும் ஒரு துணைக் கை இருக்கும். நல்ல கைத்திறமைகளுக்கு, திரை கதவுகள் திறக்கப்படும்! புது புது பாடல்களை உருவாக்கும் சுயாதீன இசைத் திறமையாளர்களுக்கு அடையாளம் கொடுக்கவும் இதே நிறுவனம் பங்கெடுக்கிறது.
சினிமா துறையில் ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் நடிகர்களாகவும், இயக்குநர்களாகவும். அவர்களில் பலர் ஏற்கனவே ரவி மோகன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர். இன்னும் பல நண்பர்களுடன் சேர்ந்து நல்ல படங்கள் செய்ய வேண்டும். இதுவே எங்களின் முக்கிய நோக்கம். இது ஒரு நீண்ட பயணம். தனி ஒருவரின் உழைப்பையும் கனவையும் தாண்டி வெற்றியை அடைவதற்கு, இதில் பயணிக்கப்போகும் உங்களின் 200% பங்களிப்பும் உறுதியும் இருக்கும் என்பதே நம்பிக்கை. அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லாரும் பயன் அடைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
சிவராஜ் அண்ணா எனக்காக இங்கு வந்து இந்த அளவிற்கு பேசுவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி அண்ணா. நான் உங்க வீட்டிற்கு வந்தேன் நீங்கள் சாப்பாடு போட்டீர்கள் உங்கள் வீட்டு உப்பை சாப்பிட்டு இருக்கிறேன் அந்த நன்றி எனக்கு எப்போதும் இருக்கும்.
கன்னடத்தில் சிவா அண்ணன் படம் தான் சூப்பர் ஹிட் ஆகும் அவருடைய படங்களை எனது தந்தை வாங்கி தெலுங்கில் வெளியிடுவார் அப்போது இருந்தே நான் சிவா அண்ணனை பார்த்து தான் வளர்ந்தேன் அவருடன் ஒரு காட்சியில் நடித்தாலும் எனக்கு சந்தோஷம்தான். ரவி மோகன் ஸ்டுடியோஸ் நன்றாக வளர்ந்த பிறகு நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு அவர் விருப்பப்படி வாய்ப்பு கிடைக்கும்.
இன்று இன்னொரு இன்ப அதிர்ச்சி, நான் இயக்குனராக முடியும், தயாரிப்பாளராக முடியும் என்று நம்பிக்கையோடு உன்னால் பாடலாசிரியராகவும் ஆக முடியும் என்று கெனிஷா நம்பிக்கை கொடுத்தார். அந்த நம்பிக்கையில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். அவர் அம்மாவை பற்றி எழுத சொன்னார். ஆனால், நான் என் அம்மாவை மனதில் நினைத்து எழுதினேன். அம்மா என்பது உறவு அல்ல, உணர்வு என்று அப்போதுதான் புரிந்தது. நான் எழுதிய பாடல் வரிகளுக்கு கெனிஷாவே இசையமைத்து பாடியுள்ளார்” என்றார்.
நடிகர் கார்த்தி பேசும் போது, “என் நண்பன் ரவி தயாரிப்பாளராக ஆகும்போது ஒரு நண்பனாக நான் சில விஷயங்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு வந்து பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் தயாரிப்பு நிறுவனத்தை இவ்ளோ பெரிய விழாவாக நடத்தியதில்லை. அதுமட்டுமில்லாமல், அவர் ஏன் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் என்று கூறிய போது மிகவும் பெருமையாக இருந்தது. இப்போது தன்னை கை கொடுத்து தூக்கி விட மாட்டார்களா என்று பல திறமையான இயக்குனர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரவிக்கு அப்பா இருந்தார், அண்ணன் இருந்தார். ஆனால், அனைவருக்கும் நான் இருக்கிறேன் என்று ரவி கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், எனக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. ப்ரோ கோட் என்பதை கேட்கும் போது புதுசாக இருக்கிறது. ஆர்வமாக இருக்கிறது. ரவியை நான் முதன்முதலாக பார்த்தது எப்போது என்று கூற ஆசைப்படுகிறேன். நான் சினிமாவுக்கு வரும்போது சண்டை பயிற்சி வகுப்பிற்கு சென்றேன் அங்கு தான் ரவி அண்ணனை சந்தித்தேன். சாதாரணமாக நாங்கள் மூன்று அடியில் குதித்தால் ரவி அண்ணன் 10 அடியில் குதிப்பார். ஐயையோ! சினிமா என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று பயந்தேன். பிறகு எங்களை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுப்பார். காசு கொடுத்தால், நீங்க எல்லாம் சின்ன பசங்க காசு குடுக்க கூடாது என்று அவரே கொடுப்பார். சிறிது காலத்திற்கு பிறகு தான் அவர் என்னைவிட சின்ன பையன் என்று தெரிந்தது. அதன் பிறகு அண்ணா என்று கூப்பிட்டால் அடி விழும் என்று ரவி என்று கூப்பிட ஆரம்பித்தேன். பிறகு அவருடைய முதல் படத்தை பார்த்த பிறகு அவருடைய உடைகள் போன்று எல்லா விஷயங்களையும் பேசுவோம். அப்படித்தான் எங்களுடைய நட்பு ஆரம்பித்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் ரவியை பார்த்து நான் மிகவும் மகிழ்ந்தேன். ஏனென்றால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலேயே ராஜாவாக நடிக்கப் போவது யார் என்ற ஒரு கேள்வி இருந்தது. தாய்லாந்தில் படப்பிடிப்பில் அவர் ராஜாவாக உக்காந்திருந்ததை பார்த்தபோது ராஜாவுக்கு உரிய அனைத்து லட்சணங்களும் அவரிடம் இருந்தது. அதைவிட அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்றால் மனதால் கூட யாருக்கும் கெடுதல் நினைக்காதவர் ரவி. அதை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.
இரவு உனது நேரத்தில் எனக்கு ஒரு கதையை சொன்னார். அதை கேட்டதும் ஜிம் கேரி அளவிற்கு இருந்தது அவருடைய ஒரு பக்கம் மட்டும் தான் நமக்கு தெரியும். ராஜா அண்ணா கூட திரையில் இன்னும் அதை காட்ட வில்லை, யோகி பாபுவை வைத்து இயக்கும் படத்தில் அதை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ரவி எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார் என்று தான் நம் எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவருக்குள் சீரியஸ் ஆன ஒரு மனிதர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. உலக சினிமா அனைத்தையும் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு படத்தொகுப்பும் மிக நன்றாக தெரியும். அதாவது ஒருவன் படிக்காதது போன்று இருக்கும். ஆனால், நல்ல மார்க் எடுப்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா?! அது போல் தான் ரவியும், என்றார்.
இயக்குனர் மோகன் ராஜா பேசும்போது, “ரவியுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு 17 வயது இருக்கும் போது அவனுக்கு 11 வயது அப்போது பரதநாட்டியம் 5 மணி நேரம் தொடர்ச்சியாக அரங்கேற்றம் செய்தான். அப்போது இவ்வளவு வருடமாக மிரட்டி உருட்டி கொண்டிருந்து அவனை அண்ணார்ந்து பார்த்தேன். அதேபோல் இன்றும் அண்ணார்ந்து பார்க்கிறேன். புதுப்பேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் அது போல, இவ்வளவு திறமைகளையும் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை வருடம் நடித்துக் கொண்டிருந்தாயா?! என்று தான் கேட்கத் தோன்றுகிறது. முதல் படத்தில் இருந்து எப்போது வரை நான் சொன்னதை கேட்டு இயக்குனரின் நடிகராக இருந்திருக்கிறான். இப்போது இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது. இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் ரவி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் மனதார நினைக்கிறார்கள். இவ்வளவு பேரை அவன் சம்பாதித்து வைத்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
பாடகி கெனிஷா பேசும் போது, “நான் ஒரு பாடகி, இசை தயாரிப்பாளர், ஆன்மீக சிகிச்சையாளர் தற்போது “ரவி மோகன் ஸ்டுடியோஸ்”-ன் பங்குதாரர். இந்த வாய்ப்பை வழங்கிய திரு.ரவி மோகன் அவர்களுக்கு நன்றி. கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் நன்றி. அம்மா, அப்பா மற்றும் ராஜா அண்ணா அவர்களுக்கு நன்றி. நான் நீண்ட காலமாக தனிமையில் இருந்தேன். இப்போது ரவி அவர்களின் மூலம் இப்படி அழகான மனிதர்கள் கிடைத்துள்ளார்கள்.
நான் மிகவும் கடினமான சூழலில் இருந்து வந்த ஒருவர், ரவி அவர்கள் மிகவும் சிறப்பான ஒரு சூழலில் இருந்து வந்தவர். நாங்கள் இருவரும் இணைந்து, ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை பெரிய அளவில் பிரபலமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளோம். எங்களின் கனவும் அது தான். எங்களுடைய குழு இல்லாமல் இன்றைய நாள் சாத்தியம் ஆகிருக்காது.
ரவி அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் வாழ்கையில் மிகவும் கடினமான சூழ்நிலையை கடந்து வந்து இருக்கிறார். அவருக்கு என்ன சோகம் இருந்தாலும், வலி இருந்தாலும் வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல் மற்றவரிடம் பழகுவார். அது சரி தான். ஆனால், நீங்கள் யார் உங்களிடம் வந்தாலும், அவர் இருளில் இருந்தாலும் நீங்கள் அவர் வாழ்கையை வெளிச்சமாக மாற்றி விடுகிறீர்கள். இப்போது என்னிடம் 7 முழு ஸ்கிரிப்ட் உள்ளது. அவ்வளவு திறமையான நீங்கள், உங்களின் அனைத்து திறமைகளையும் இந்த உலகம் பார்க வேண்டும். எனக்கு மிகப் பெரும் பேராசை உள்ளது. என்னவென்றால், இந்த உலகத்திலுள்ள அத்தனை மனிதரும் உங்களுள் இருக்கும் கடவுளை பார்க வேண்டும். அந்த கடவுளை நான் பார்த்து விட்டேன். வெற்றிக்கான நாட்கள் குறைவாக தான் உள்ளது. அதற்காக நீங்கள் அதிக உழைப்பை கொடுத்துள்ளீர்கள்.
நீங்கள் ஒருநாள் வரலக்ஷ்மி அம்மாவுடன் இருந்தால் தெரியும், ரவி மோகன் அவர்கள் என் இவ்வளவு சிறந்த மனிதராக இருக்கிறார் என்று. இப்படி பட்ட ஒருவரை கொடுத்ததற்கு நன்றி அம்மா. இங்கு வருகை தந்திருக்கும் அனைவர்க்கும் நன்றி, என்றார்.

