ஃப்ரீடம் – விமர்சனம்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படம் “ஃப்ரீடம்”. விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில் கழுகு இயக்குனர் சத்யசிவா இயக்கியுள்ள இந்த படம் 1995-ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. அயோத்தி, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை பெற்றாரா சசிகுமார்? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 1991-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் பலியானதும், அதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதும், அந்த வழக்கு எவ்வளவு தூரம் பயணித்து என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். அந்த வழக்குக்கு பின்னால் நடந்த ஒரு சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்த ஃப்ரீடம். இலங்கை அகதிகளாக ராமேஸ்வரம் மண்டபம் முகாமுக்கு வரும் நாயகன் சசிகுமார் மற்றும் பல இலங்கைத் தமிழர்கள் முன்னாள் பிரதமர் கொலை வழக்கு விசாரணைக்காக வேலூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வேலூர் கோட்டையில் அடைத்து வைத்து விசாரிக்கிறது காவல் துறை. 1991-ல் ஆரம்பித்த அந்த விசாரணை சில ஆண்டுகள் நீள்கிறது. அவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுதலை செய்யக் கோரி பல முயற்சிகள் எடுத்தும் எதுவும் எடுபடவில்லை. இந்த நிலையில் அந்த வேலூர் கோட்டையில் இருந்து 43 பேர் எப்படி தப்பித்து சென்றனர்? அவர்களை போலீஸ் பிடித்ததா? திட்டமிட்டபடி தப்பித்து குடும்பத்துடன் சென்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் சசிகுமார். முந்தைய படத்தை போலவே இந்த படத்திலும் ஒரு இலங்கை தமிழராக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கோபக்கார இளைஞராக பொங்கி எழும்போதும், விசாரணை முகாமில் இருக்கும்போது நாம் எந்த தவறும் செய்யவில்லை, தப்பிக்கக் கூடாது, நியாயமான வழியில் செல்லும்போதும், பின் அவரே அந்த திட்டத்தை கையில் எடுத்து செயல்படுத்தும்போதும் என நாயகனாக ஸ்கோர் செய்கிறார். காலங்கள் உருண்டோடுவதை அவரின் தோற்றத்தில் காட்டிய விதமும் சிறப்பு.

சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் படங்களின் மூலம் மிகச்சிறந்த நடிகை எனப் பெயர் பெற்ற லிஜோமோல்  ஜோஸ் இந்த படத்தில் குறைந்த காட்சிகளே வந்தாலும் தன்னுடைய ஜீவனுள்ள நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இன்னும் கொஞ்சம் வலுவான கதாபாத்திரம் தந்திருக்கலாம். பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் கொடூரமான விசாரணை அதிகாரியாக வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். தமிழர்களுக்காக அவர்கள் புறம் நின்று அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத் தர போராடும் கதாபாத்திரத்தில் மாளவிகா அவினாஷ் மனதில் உயர்ந்து நிற்கிறார். பாய்ஸ் மணிகண்டன், மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, போஸ் வெங்கட், மு.ராமசாமி, ரமேஷ் கண்ணா, மணிகண்ட ராஜன் என மற்ற நடிகர்களும் அந்தந்த கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் படத்திற்கு தகுந்தவாறு, படத்தின் தன்மைக்கேற்ப கொடுத்திருக்கிறார். NS உதயகுமார் ஒளிப்பதிவு படத்துக்கு என்ன தேவையோ அதை தந்திருக்கிறது. அதிகமான இரவுக் காட்சிகள், அதை அத்தனையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார். கலை இயக்குனர் C உதயகுமார் அரங்க அமைப்பு படத்துக்கு உதவியிருக்கிறது. குறிப்பாக அந்த ஜெயில் பிரேக் காட்சிகளில்.

சத்யசிவா கொஞ்சம் கனமான, அழுத்தமான கதைகளையே படமாக கொடுத்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். விசாரணைக் கைதிகள் என்ற பெயரில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்ட 43 பேர் தப்பிச் சென்ற விஷயத்தை பின்னணியாக கொண்டு கொஞ்சம் கற்பனையும் கலந்து தந்திருக்கிறார். அதனூடே ஈழத்தமிழர்களின் கஷ்டங்களையும், அவர்கள் அனுபவித்த வலிகளையும் இன்றும் பல நாடுகளில் அகதிகளாக வாழும் அவர்களின் கொடுமையையும் பல இடங்களில் வசனங்களால் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். முதல் பாதி முழுக்க மையக் கதைக்கு செல்ல நேரம் எடுத்துக் கொள்கிறார். இரண்டாம் பாதியில் தான் கதையே ஆரம்பிக்கிறது. சில எமோஷன் காட்சிகள் நிச்சயம் நம்மை கலங்க வைக்கிறது. இரண்டாம் பாதி பர பர திரைக்கதையை போலவே முதல் பாதியிலும் கொஞ்சம் திரைக்கதையின் வேகத்தை கூட்டியிருக்கலாம். மொத்தத்தில் வரலாற்றின் பக்கங்களை அசை போட நினைப்பவர்களும், அந்த வேலூர் சம்பவம் என்ன என்பதை தெரியாதவர்களும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *