தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கு என்றுமே தனி மவுசு. அதிலும் குடும்பத்துக்காக ஹீரோ ஆக்ஷனில் இறங்கும் படங்களை மக்கள் என்றுமே கொண்டாடத் தவறியதில்லை. அந்த வகையில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்துக்கு ஒரு பிரச்சினை வர அதில் இருந்து வெளி வர ஆக்ஷனை கையில் எடுக்கும் ஒரு குடும்பம் என்ற இந்த ஒன்லைனே ஹிட் மெட்டீரியல் தான். அப்படி ஆக்ஷன் கிங் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி நடிக்க, அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் “பிளாஸ்ட்”. என்றுமே நல்ல கதையம்சம் உள்ள படங்களை கொடுப்பதில் பெயர் பெற்ற ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படம் எப்படி இருக்கு என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கராத்தே மாஸ்டர் அர்ஜுன் தன் மகளுக்கு தற்காப்புக்காக சிறு வயதில் இருந்தே கராத்தே கற்றுக்கொடுத்து வளர்த்து வருகிறார். அத்துடன் ஒரு பெண் எப்போதும் துணிச்சலாகவும் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் செய்ய வேண்டும் எனவும் சொல்லி வளர்க்கிறார். வளர்ந்த பின்பும் தவறு நடந்தால் அவர்களை ஒரு கை பார்க்கிறார் அர்ஜூன் மகளும், நாயகியுமான ப்ரீத்தி முகுந்தன். ப்ரீத்தியின் அம்மா அபிராமிக்கு வழக்கமான அம்மாக்களின் கவலை. மகள் ஏதாவது பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்வாளோ என கவலைப்படுகிறார் அபிராமி.
மறுபுறம் கார்பரேட் தொழிலதிபர் ஜான் கொக்கென் கனிமங்களை எடுக்க, ஒரு கிராமத்தையே அழிக்க திட்டமிடுகிறார். அதற்கு அனுமதி கொடுக்க அமைச்சர் 1,000 கோடி லஞ்சமாக கேட்க, அதை ட்ரான்ஸ்ஃபர் செய்யும் பொறுப்பை அண்டர்கிரவுண்ட் கிரிமினல் அர்ஜூன் சிதம்பரத்திடம் ஒப்படைக்கிறார். லோக்கல் ரவுடிகள் துணையோடு அதை செய்து முடிக்க கிளம்பும் அர்ஜூன் சிதம்பரம் மற்றும் ரவுடிகள் அர்ஜூன் குடும்பத்துடன் உரசல் ஏற்படுகிறது. பலம் வாய்ந்த தொழிலதிபர், ரவுடிகள் கும்பலிடம் இருந்து அர்ஜூன் குடும்பம் எப்படி தங்களை தற்காத்துக் கொண்டது? என்பதை அனல் பறக்க அதிரடி ஆக்ஷன் படமாக கொடுத்திருப்பதே இந்த பிளாஸ்ட்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன். ஆக்ஷன் ஹீரோ என்றாலே நினைவுக்கு வரும் முதல் பெயர். 60 வயதை கடந்தாலும் ஆக்ஷன் ஹீரோவாக பட்டைய கிளப்புகிறார். கராத்தே மாஸ்டராக, அதற்கேற்ற சண்டைக் காட்சிகளில் மிக இயல்பாக ஸ்கோர் செய்கிறார். படம் முழுக்கவே அவர் அதிரடியை இன்றைய தலைமுறையினருக்கு காட்டியிருக்கிறார். அபிராமி பெறும் ஹீரோவின் மனைவி, இளம் பெண்ணுக்கு அம்மா என வந்து போகாமல் கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் அடித்து நொறுக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் புடவை கட்டிக் கொண்டு செய்யும் சண்டை எல்லாம் ஃபயர் மேக்ஸ்.
கதையின் நாயகியாக இளம் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன். அர்ஜுன் படத்திலேயே ஆக்ஷனில் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். அர்ஜூனுக்கு இணையாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார் ப்ரீத்தி முகுந்தன். இதுவரை ரொமான்ஸூடன் அவரை பார்த்த ரசிகர்கள் இன்னொரு பரிமாணத்தில் இந்த படத்தில் பார்க்கலாம். ரியல் ஆக்ஷனை பார்த்த உணர்வை தந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளுக்கு ரொம்பவே மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் என்பது படத்தை பார்க்கும்போதே தெரிகிறது.
பொன்னியின் செல்வன், நேர்கொண்ட பார்வை படங்களில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த அர்ஜுன் சிதம்பரம் இந்த படத்தில் ஒரு மாஸான வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். ஜான் கெக்கென் ஒரு பில்லியனர் தொழிலதிபராக, அந்த நடை, உடை, உடல்மொழி என அப்படியே நிற்கிறார். விவேக் பிரசன்னா கதாபாத்திரமும் மிக முக்கியமான காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். திலீபன், பவன், வினோத் சாகர் என மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கேஜிஎஃப் ரவி பஸ்ரூர் பின்னணி இசையில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். ஆங்கில வரிகளில் வரும் பாடலை பின்னணியில் அழகாக ஒலிக்க விட்டிருக்கிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். சண்டைக் காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் அருமை. படத்தில் இயக்குனருக்கு இணையாக ஸ்பெஷல் பாராட்டு ஸ்டண்ட் மாஸ்டர் ஃபீனிக்ஸ் பிரபுவுக்கு தான். ஒவ்வொரு சண்டைக் காட்சியையும் அவ்வளவு சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். நாயகிகளை ஆக்ஷன் குயின்ஸாக மாற்றி ரசிக்கவும் வைத்திருக்கிறார். பிரதீப் ராகவ் எடிட்டிங்கும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ். லோகேஷ் கனகராஜ் இரண்டாவது படத்தில் செய்ததை முதல் படத்திலேயே அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறார். ஒரு நல்ல ஃபேமிலி ஆக்ஷன் ட்ராமா படத்தை சிறப்பாக வழங்கியிருக்கிறார். முதல் பாதியில் கதைக்கான செட் அப்பை அழகாக உருவாக்கி, இரண்டாம் பாதி ஆக்ஷனில் வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டார். ஒரு தேர்ந்த ஆக்ஷன் படத்தை உருவாக்க முடியும் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்தும் விட்டார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து மிக நேர்த்தியாக, விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷனை தாண்டி பெண்களுக்கு கொடுத்திருக்கும் விழிப்புணர்வும் படத்தின் மிகப்பெரிய ஹைலைட், தற்காப்பு என்பது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும் அவசியம் என்பதை உணர்த்தியிருக்கிறது. ஒரு நல்ல கமெர்சியல் படத்தையும், ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்தையும் படைத்திருக்கிறார் இயக்குனர் சுபாஷ் கே ராஜ். ஒரு நல்ல ஆக்ஷன் இயக்குனர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கிறார். வாழ்ந்த்துக்கள்.

