நல்ல கண்டெண்ட் படங்கள் என்றாலே மலையாள சினிமா பக்கம் தான் கையை காட்டுவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்களும் பான் இந்தியா படங்களை கொடுக்கும் நோக்கில் இறங்கி மசாலா படங்களிலும் இறங்கி அடிக்கிறார்கள். சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றதால் தொடர்ந்து அதை குறி வைத்து பிரமாண்ட பொருட்செலவில் பல படங்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு பான் இந்தியா படம் தான் பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் வெளிவந்துள்ள காட்டாளன். இந்த படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சுனில் இளம் பயதில் இருந்தே காட்டு யானைகளை வேட்டையாடி அதன் தந்தங்களை ஏற்றுமதி செய்யும் தாதாவாக வலம் வருகிறார். ஆனைகொல்லி என்ற மலை கிராமத்தில் அந்த மக்களை அதற்கு உபயோகிக்கிறார், ஆனாலும் அவர்களை பயமுறுத்தி அடிமையாகவே வைத்திருக்கிறார். ரொம்பவே பலமான கேங்காக வலம் வரும் சுனிலை வீழ்த்தி அந்த தொழிலை கைப்பற்ற இன்னொரு கும்பல் தலைவன் கபிர் துஹான் சிங் முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் இந்த கடத்தல் தொழிலில் சுனில் கேங்கில் இணைகிறார் நாயகன் ஆண்டனி வர்கீஸ். சுனிலிடம் அடிமைப்பட்டு கிடந்த அந்த மக்கள் அதிலிருந்து மீண்டார்களா? நாயகன் ஆண்டனி யார்? அவர் ஏன் இங்கு வந்து சேர்ந்தர்? எதிரி கேங் என்ன ஆனது? இந்த கடத்தல் நெட்வொர்க் எப்படிப்பட்டது என்பதே மீதிக்கதை.
நாயகன் ஆண்டனி வர்கீஸ். அதிகம் அலட்டிக் கொள்ளாத ராக்கி பாய் போன்ற ஒரு கதாபாத்திரம். ஆக்ஷனில் எத்தனை பேர் வந்தாலும் ஒத்தையாக சமாளிக்கும் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டுகிறார். ஆஜானுபாகுவான உடலமைப்பு, காட்டுக்குள் யானை வந்தாலும் சரி, எத்தனை பேர் வந்தாலும் சரி அதை சமாளிப்பார் என நம்பும் ஒரு ஆளுமை. சுனில் தந்தம் கடத்தும் கார்டெல் தலைவனாக, கொடூர வில்லனாக மிரட்டுகிறார். மக்களை தன் சுயநலத்துக்காக ரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் ஒரு கதாபாத்திரம். அசால்ட்டாக செய்து முடித்திருக்கிறார்.
கபிர் துஹான் சிங் இன்னொரு வில்லனாக அவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். துஷாரா விஜயன். இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வந்தாலும் ஆக்ஷன் அவதாரம் எடுத்து அழுத்தமாக பதிகிறார் ரசிகர்கள் மனதில். ஜகதீஷ், ஆன்சன் பால், தெலுங்கு நடிகர் ராஜ் என மற்ற நடிகர்களும் கச்சிதம்.
டெக்னிக்கல் அம்சங்கள் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. ஒளிப்பதிவு மிகவும் சவாலான ஒன்று. அதை அருமையாக செய்திருக்கிறார். ரவி பஸ்ரூர் கேஜிஎஃப் படத்தை நூறு மடங்கு தூக்கி நிறுத்தியவர். இந்த படத்திலும் அவரது இசை அதிர வைக்கிறது. படத்தின் மிகப்பெரிய ஹைலைட் ஆக்ஷன் காட்சிகள் தான். கேச்சா அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். யானை, பாம்பு என விலங்குகளை படத்தில் பயன்படுத்திய விதமும், அதை படமாக்கிய விதமும் அருமை.
இயக்குனர் பால் ஜார்ஜ். 2 மணி நேரத்தில் விறுவிறுப்பாக ஒரு படத்தை கொடுக்க முயற்சி எடுத்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் கதை எதை நோக்கி நகர்கிறது என தெரியாததால் சுவாரஸ்யமாகவே நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மட்டுமே அதிகம் நம்பியிருக்கிறார்கள். நிறைய ஸ்லோ மோஷன் காட்சிகள் வருவது ஒரு கட்டத்திற்கு பின் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. எமோஷன் காட்சிகள் நினைத்த உணர்வை அழுத்தமாக தராதது நம்மை உணர்ச்சியோடு ஒன்ற விடாமல் செய்கிறது. படம் முடியும்போது வரும் சில end credit scenes-ஐ தவற விடாமல் பாருங்கள், சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. மொத்தத்தில் ஆக்ஷன் விரும்பிகள் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

