எளிய மக்கள் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள், சமுதாயமும், ஆளும் வர்க்கமும் அவர்களை எப்படி பார்க்கிறது என்பதை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வரும் ராஜூ முருகன் ஏற்கனவே குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர். தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ‘மை லார்ட்’. கடைக்கோடி எளிய மனிதர்கள் மீதான அதிகார அத்துமீறலை அரசியல் நையாண்டி கலந்து தந்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஆதரவற்ற சிறுவனாக வந்த சசிகுமாருக்கு ஆதரவு கொடுத்து வளர்க்கிறார் நாயகியின் தந்தை. வள்ளலார் வழியில் அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற தத்துவத்தை பின்பற்றி வாழ்பவர். அவர் இறக்கும் தருவாயில் தன் மகளை காப்பகத்தில் சேர்த்து அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்க சொல்லி சசிகுமார் கையில் ஒப்படைக்கிறார். திருமண வயது வந்த பின் நாயகி சைத்ரா யாரோ ஒருவனை எல்லாம் திருமணம் செய்து கொண்டு செல்ல மாட்டேன். உன்னையே திருமணம் செய்து ரேஷன் கார்டு வாங்கி வாழ்க்கையை தொடங்கலாம் என சொல்லி சசிகுமாரை திருமணமும் செய்கிறார். திருமணத்துக்கு பின் சைத்ராவின் உடல்நல பிரச்சினைக்காக, அவரது மருத்துவ செலவுக்காக ஒரு மோசமான ஆளிடம் கடன் வாங்கி சிக்கிக் கொள்கிறார் சசிகுமார். வாங்கிய கடனுக்கு 2 பேரும் ஆளுக்கு ஒரு கிட்னி தரணும் என மிரட்டுகிறான் அந்த ரவுடி. அவனிடம் இருந்து தப்பி திருப்பூர் செல்ல, பின் வேறு ஒரு பிரச்சினை வருகிறது. அந்த பிரச்சினையில் இருக்கும்போதே சசிகுமார் கிட்னியை கேட்டு அரசாங்கத்தில் உச்சத்தில் உள்ள ஒருவரது ஆட்கள் வருகிறார்கள். இந்த பிரச்சினைகள் என்ன ஆனது? மருத்துவ மோசடிகள் எளிய மனிதர்கள் வாழ்வில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? என்பது போன்ற சில முக்கியமான சமூகப் பிரச்சினைகளை பற்றி பேசுவதே இந்த ‘மை லார்ட்’.
நாயகன் சசிகுமார். அயோத்திக்கு பின் இரண்டாம் இன்னிங்க்ஸில் அவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றுமே முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகவே அமைந்து வருகிறது. டூரிஸ்ட் ஃபேமிலி போல பிளாக்பஸ்டர் வெற்றி, ஒன்னொரு புறம் அயோத்து, நந்தன், தற்போது மை லார்ட் என தனித்துவமான படங்களையே தேர்வு செய்து ஸ்கோர் செய்கிறார். நந்தன் மோடில் தான் இந்த படத்திலும் அவரது நடிப்பு அமைந்திருக்கிறது. அடித்தட்டில் இருக்கும் எளிய மனிதராகவே மாறி அப்பாவித்தனமாக நிற்கும்போது நம்மை கலங்க வைக்கிறார். மனித நேயத்தை விதைக்கும் மாமனிதராக உயர்ந்து நிற்கிறார்.
நாயகி சைத்ரா ஆச்சார், நடிப்பு ராட்சஸி. படத்துக்கு படம் எப்படி இந்த மாதிரி மாற முடியும் என நம்மை வியக்க வைக்கும் நடிப்பு. சசிகுமார் மனைவியாக எளிமையாக பெண்மணியாக மனதில் பதிகிறார். அப்பாவின் ஆவி இறங்கும்போது பீடி பிடித்துக் கொண்டே பேசும் காட்சிகளில் அதகளம். குரு சோமசுந்தரம் ஜோக்கர் படத்தின் ஒரு நீட்சி போல ஒரு கதாபாத்திரம். வழக்கம் போல நடிப்பில் மிளிர்கிறார். எளிய மனிதர்களுக்கு துணை நிற்கும் சமுதாயத்தின் நான்காவது தூணாக கச்சிதம். அவருக்கு பக்கபலமாக சில காட்சிகளே வந்தாலும் இயக்குனர் கோபி நயினார் மனதில் பதிகிறார்.
ஆஷா சரத். படத்தின் மையக் கதாபாத்திரத்தில் அலட்டல் இல்லாமல் அவரது முக பாவனைகள் மூலமே மிரட்டுகிறார். சக்தி வாய்ந்த பெண்மணி என நிச்சயம் சொல்லலாம், அந்தளவுக்கு நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார். ஜெயபிரகாஷ் ஒரு காட்சியில் வந்தாலும் அவர் பேசும் வசனங்கள் நெத்தியடி. மற்ற நடிகர்களும் செவ்வனே அவர்கள் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்கள்.
ராஜூ முருகன் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவா என ஆச்சர்யப்பட்டாலும் படத்தில் ராஜூ முருகன் படத்துக்கு ஏற்ற யதார்த்தமான ஒளிப்பதிவையே தந்திருக்கிறார். ஷான் ரோல்டன் வழக்கம் போல இசையில் படத்தின் ஆன்மாவை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். பின்னணி இசையிலும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.
இயக்குனர் ராஜூ முருகன். ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான சமூகப் பிரச்சினைகளை அலசுபவர் இந்த படத்திலும் அப்படி ஒரு மிக முக்கியமான விஷயத்தை பேசியிருக்கிறார். சமீபத்தில் தமிழ் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவத்தின் பின்னணியில் இந்த கதையை எழுதியிருக்கிறார். ஆனால் வேறொரு கோணத்தில். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை யார் யார் எல்லாம் எப்படி எப்படி எல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், பணம் இருப்பவர்களுக்கும் மட்டும் எப்படி Queue என்ற ஒன்று இல்லாமல் நேரடியாக VIP எண்ட்ரி என்ற ஒன்று கிடைக்கிறது என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். மொத்தத்தில் ராஜூ முருகன் தன்னுடைய கோட்டையில் கொடியை மிக அழுத்தமாக நாட்டியிருக்கிறார்.
மை லார்ட் – ராஜூ முருகனின் இன்னொரு ஜோக்கர்.

