ஸ்டுடியோகிரீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ரிபெல். சமீபத்திய மலையாள சென்சேஷன் மமிதா பைஜூ தமிழில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இதனாலேயே தமிழ் இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
படத்தின் கதைப்படி, 1980களில் மூணார் நெற்றிக்குடியில் வசிக்கும் இளைஞராக ஜிவி பிரகாஷ் குமார். அவரது குடும்பம் அங்கிருக்கும் எஸ்டேட்டை நம்பியும் சிறு சிறு தொழில்களை நம்பியே பிழைத்திருக்கிறது. அது போன்று பல குடும்பங்கள் இதே வறுமை பின்னணியில் வாழ்கிறது. அவர்களின் வாழ்வை மாற்றும் ஒரே நம்பிக்கையாக இருப்பது கல்வி தான். வறுமையின் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு பாலக்காடு சித்தூர் கல்லூரியில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரிசர்வேஷன் கோட்டாவில் சில தமிழ் மாணவர்களும், ஜி வி பிரகாஷ் குமாரும் அவரது நண்பரும் சேருகின்றனர்.
அங்கு கேரள மாணவர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றனர். அந்த கல்லூரியில் இரண்டு கேரள மாணவ சங்கங்கள் இருக்கிறது. அச்சங்கங்கள் வைக்கும் சட்டம் தான் கல்லூரியை ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது. இவர்களால் அக்கல்லூரியில் படிக்கும் பிற தமிழ் மாணவர்களுக்கு பிரச்சனையும், வலிகளும் மட்டுமே மிச்சம். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார் ஜி வி பிரகாஷ் குமார். இறுதியில் இந்த போராட்டத்தில் அவர் வென்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ரிபெல் கல்லூரரி மாணவராக ஜிவி பிரகாஷ், கல்லூர் மாணவராக பொருந்துகிறார். ஒரு தொழிலாளியின் மகன் என்கிற அளவிலும் அச்ச அசலாகப் பொருந்துகிறார். ஆனால் கோபக்கார இளைஞராக சில இடங்களில் பொருந்தவில்லை.
நாயகி மமிதா பைஜூவுக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லை, என்றாலும் தன் அழகால் ரசிகர்களை கட்டிப் போடுகிறார். ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆண்டனி ஆகியோர் சக மாணவர்களாக நன்றாகவே நடித்திருக்கிறார்கள். கல்லூரிப் பேராசிரியராக வரும் கருணாஸ், தமிழக மாணவர்களின் நலனுக்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பாராட்ட வைக்கிறது.
அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எண்பதுகளின் காலகட்டத்தை நம்பகத் தன்மையுடன் படம் பிடித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் விதத்திலும், பின்னணி இசை நேர்த்தியுடனும் ஒலிக்கிறது. கதை ஓரளவு அழுத்தமானதாக இருந்தாலும், திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் ஜிவி பிரகாஷ் கேரியரில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் இந்த ரிபெல்.