பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் பார்வதி திருவோத்து படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணியில் நிசாம் பஷீர் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரில்லர் படம் தான் “ஐ, நோபடி”. ஒரு வங்கி கொள்ளை பின்னணியில் இன்றைய சமூகத்தின் அவலங்களை சொல்லியிருக்கும் படம். படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஒரு சாதாரண நாளில் ஒரு வங்கிக்குள் செல்லும் பிரித்விராஜ், அங்கு நடக்கும் கொள்ளைச் சம்பவத்தில் பிணைக் கைதியாக சிக்கிக் கொள்கிறார். அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி இறந்தும் விடுகிறார்கள். அந்த கொள்ளையடிக்கப்பட்ட பணமும் காணாமல் போகிறது. இதனால் அந்த கொள்ளையில் பிரித்வியை சந்தேகக் கண்ணோடு காவல்துறை பார்க்கிறது, அவரை சுற்றி உள்ளவர்களும், அந்த நகர மக்களும் பிரித்வியிடம் தான் 17 கோடி ரூபாய் இருக்கிறது என நினைத்து அவரை குறி வைத்து துரத்துகிறார்கள். சாதாரண வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது அந்த குடும்பத்துக்கு. அதில் இருந்து மீண்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் பிரித்விராஜ், ஒரு சாதாரண மனிதனின் இயலாமையையும், மனப்போராட்டத்தையும் மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். குழந்தைகளுக்கு அப்பாவாக, திருமண வாழ்வில் மனைவியுடன் விரிசல் என சாதாரண மனிதனை பிரதிபலிக்கிறார். பார்வதி, கணவருடன் முரண்படும் மனைவியாகத் தனது கதாபாத்திரத்தை சரியாகச் செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் அதிரடி காட்டுகிறார். அவர்களின் மகள்களாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் அபாரமான நடிப்பை தந்திருக்கிறார்கள்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை வழக்கம் போல அடிபொலி. திரில்லர் படத்துக்கேற்ப விறுவிறுப்பான இசையை தந்துள்ளார். சவுண்ட் டிசைனும் படத்துக்கு பக்க பலம். படத்தின் நீளம் ஒரு பலவீனம் தான். இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு கதையோடு ஒன்றிப் பயணிக்கிறது. ஆரம்ப ஹைவே காட்சிகளில் தொடங்கி, கிளைமாக்ஸூக்கு முன் வரும் துரத்தல் காட்சிகள் என அசத்துகிறார்.
இயக்குநர் நிசாம் பஷீர் முந்தைய படங்களில் வேறு வேறு களங்களில் கொடுத்தவர், இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு சமூக அவலத்தை அழகாக சொல்லியிருக்கிறார். ஒரு சிக்கலான சூழலில் சிக்கிய ஒரு ‘சாதாரண மனிதன்’, அதில் இருந்து எப்படி மீள்கிறான் என்பதை சொல்லும் படம் முதல் பாதியில் யதார்த்தமாக பயணிக்கிறது, ஆனால் ஒரு கட்டத்தில் மொத்த ஊர் உலகமே எதிராக மாறும் காட்சிகள் நம்மையே டயர்ட் ஆக்குகிறது. எழுத்தாளர் சமீர் அப்துல் சுவாரஸ்யமான கதைக்கரு இருந்தும், நீளூம் திரைக்கதை மற்றும் இயக்கம் மூலம் அதை கொஞ்சம் சுமாரான அனுபவமாகவே மாற்றுகிறது. டெக்னிக்கலாக சிறப்பாக வந்திருக்கும் படம், திரைக்கதையால் கொஞ்சம் நீர்த்துப் போக வைக்கிறது. ஆனாலும் திரில்லர் ரசிகர்கள் நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

