இதயம் முரளி – விமர்சனம்!

ஒரு தலைக் காதல் என்ற படம் வேண்டுமானால் டி.ராஜேந்தர் எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு தலைக்காதல் என்றால் உடனே நினைவுக்கு வருவது நடிகர் முரளி. பல படங்களில் காதலை சொல்லாமல் மனதுக்குள் வைத்து தவிக்கும் கதாபாத்திரங்கள் இன்றும் நம் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றது. 1991-ல் வெளியான ‘இதயம்’ முரளியின் ஒருதலைக் காதல் வலியை மிகப்பெரிய அளவில் அழுத்தமாக பதிய வைத்த படம். அந்த இதயம் முரளி பெயரிலேயே அவரது மகன் அதர்வா நடிக்க அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, பள்ளியில் படிக்கும்போது டீச்சர் மீது சிறுவர்களுக்கு வரும் ஒரு கிரஷ் வருகிறது. பின் 11,12 படிக்கும்போது பிரீத்தி முகுந்தனை காதலிக்கிறார். அதை சொல்ல முயற்சி செய்யும்போது சொல்ல முடியாமல் அந்த காதல் காற்றில் பறக்கிறது. பின் கல்லூரி காலங்களில் அதர்வா மருத்துவக் கல்லூரி மாணவி காயடுவை சந்திக்க அந்த காதலையும் சொல்லத் தயங்கி தவற விடுகிறார். பின் மீண்டும் பிரீத்தியை சந்திக்க நேரம் கிடைத்தும் அவரிடம் காதலை சொல்ல முடியாமல் போகிறது. இதற்கிடையில் தாய்மாமா நட்டி பார்க்கும் பெண்ணை (அவர் கூட ஒரு முன்னணி ஹீரோயின் தான்) திருமணம் செய்து கொள்ள ஓகே சொல்லி, நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த சூழலில் திருமணத்துக்கு முன்பே தன் காதலை சொல்லியே தீர வேண்டும் என நண்பர்களுடன் பிரீத்தியை தேடி அமெரிக்கா பயணிக்கிறார். அப்படி காதலை சொன்னாரா? நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் திருமணம் நடந்ததா? என்பதை கிட்டத்தட்ட 3 மணி நேர சினிமாவாக திரையில் வடித்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன்.

நாயகன் அதர்வா ரொம்ப நாளைக்கு பிறகு காதல் கதையில் இளமை துள்ளலுடன் ரொம்பவே ஃப்ரெஷாக இருக்கிறார். இதுவரை இல்லாத புதிய ஸ்டைலிஷ் லுக்கில் கவர்கிறார். காதலனாகவும், குழப்பமான இளைஞனாகவும் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார். நாயகிகளாக எத்தனஒ பேரை லிஸ்ட் போடுவது என்று நமக்கே குழப்பம் வரும் அளவுக்கு அத்தனை பெண்கள். பிரீத்தி முகுந்தன், காயடு லோகர் இருவருவே அவர்கள் கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார்கள். இன்றைய இளைஞர்களை கவர சரியான கேஸ்டிங்.

ஃபகத் பாசில் கேமியோ என்று சொல்வதா? ஒரு கேரக்டர் என்று சொல்வதா என குழப்பம் வரும் அளவுக்கு படம் முழுக்க அவர் வியாபித்திருக்கிறார். அதுவும் கிளைமாக்ஸ் முன்பாக வரும் காட்சிகளில் எல்லாம் அடிபொலி.  நட்டி வழக்கமான போலீஸ் கெட்டப் இல்லாமல், நாயகனின் தாய்மாமாவாக மிக யதார்த்தமான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார்.

இசையமைப்பாளர் தமன், ரக்ஷன், ஜோனிட்டா காந்தி, நிஹாரிகா, ஏஞ்சலின், ட்ராவிட் செல்வம், பரிதாபங்கள் சுதாகர், பெப்ஸி விஜயன், ராம்கி, ஒரு சீனுக்கு வந்து செல்லும் சின்னி ஜெயந்த் என இப்படி லிஸ்ட் ரொம்பவே பெருசு. இதில் பல முன்னணி பிரபல நடிகர்களை சேர்க்கவில்லை, தியேட்டரில் சர்ப்ரைஸாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படத்தின் முதுகெலும்பே மனோஜ் பரமஹம்சா, சாய் ஆஅகியோரின் ஒளிப்பதிவு தான். திருச்சி, சென்னை, அமெரிக்கா என ஒவ்வொரு காட்சியும் ஒரு ஓவியத்தைப் போல மிக அழகாக இருக்கிறது. தமனின் இசை தற்போதைய டிரெண்டிற்கு இருந்தாலும், இதயா பாடலை தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் ஓரளவிற்கு உதவி புரிந்திருக்கிறது. ரமண கிரி வாசனின் வசனங்கள் ஓகே.

இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் காதல் கதை மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ராஜீவ் மேனன், கதிர், ஜீவா, அஹமது போன்ற இயக்குனர்களுக்கு பிறகு காதல் கதையை பிரமாண்டமான ஸ்கேலில் சொல்லியிருக்கும் இயக்குனர். இதற்காகவே நிச்சயம் தியேட்டரில் சென்று பார்க்கலாம். ஒரு மென்மையாக கதை சொல்ல முயற்சி செய்திருந்தாலும், திரைக்கதை சற்று நீளமாக இருப்பது தொய்வைத் தருகிறது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், கதையிலும் வசனத்திலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவுக்காகவே இந்தப் படத்தை ஒரு முறை தாராளமாக ரசிக்கலாம். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் நிச்சயம் ரசிகர்களை கவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *