ஆரம்ப காலகட்டங்களில் மௌனப்படங்களாக இருந்த சினிமா இந்தியாவில் ஆலம் அரா, தமிழில் காளிதாஸ் படங்களுக்குப் பிறகு பேசும் படங்களாக வெளிவர ஆரம்பித்தது. அதற்கு பிறகு மௌனப்படங்களுக்கு ஒரு Tribute-ஆக கமல்ஹாசனின் பேசும் படம் 1987-ல் வெளியானது. பின் 2018-ல் கார்த்திக் சுப்பாராஜ் மெர்குரி என்ற படத்தை எடுத்தார். அதை தொடர்ந்து 2026-ல் வெளியாகியிருக்கும் மௌனப்படம் தான் “காந்தி டாக்ஸ்”. விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி நடித்திருக்கும் இந்த படம் பணம் மனிதர்களை எந்த எல்லைக்கு போக வைக்கிறது? எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது? என்பதை பற்றி பேசுகிறது. படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மும்பை தாராவி பகுதியில் வசிக்கும் விஜய் சேதுபதி, சாப்பாட்டுக்கே வழியின்றி வேலை தேடி அலைபவர். படுத்த படுக்கையான அவரது அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டும், எதிர் விட்டில் வசிக்கும் அதிதி ராவ் ஹைதரியுடன் காதல், அவரை கரம் பிடிக்க வேண்டும். வறுமை வாட்டி வதைக்கிறது. வேலை தேடிப் போன இடங்களில் லஞ்சம், சிபாரிசு என வேலை கிடைக்காமல் போகிறது. பெரும் பணக்காரரான அரவிந்த்சாமி விமான விபத்தில் மனைவி குழந்தைகளை இழக்கிறார். உடல் நிலை சரியில்லாத தாயை இழக்கிறார். அவரது தொழிலிலும் தோல்வி என அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வரும் சூழல். இந்த இருவரும் இணையும் புள்ளியில் விஜய் சேதுபதி, அர்விந்த்சாமி இருவருக்குள்ளும் ஏற்படும் மாற்றங்கள் என்ன? வாழ்க்கையில் பணத்தின் முக்கியத்துவம் என்ன? மனிதர்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள்? என்பதை சொல்வதே இந்த காந்தி டாக்ஸ்.
விஜய் சேதுபதி. எளிய இளைஞராக, சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலையில் உள்ள ஒரு இளைஞராக அவரது அப்பாவித்தனமான நடிப்பால் நம் மனதில் பதிகிறார். வேலை கிடைக்காத விரக்தி, அம்மாவிற்கு சாப்பாடு கொடுக்க முடியாத இயலாமை, திருட செல்வது, திருந்தி நிற்பது, குற்ற உணர்வில் தடுமாறி நிற்பது என அந்த கதாபாத்திரத்தில் பொருந்து நிற்கிறார்.
அரவிந்த்சாமி. பெரும் பணக்காரராக இருந்து எல்லாவற்றையும் இழந்து வாழ்க்கையில் வெறுமையை உணரும் கதாபாத்திரத்தில் அவ்வளவு கச்சிதமாக, மிக இயல்பாக நடித்திருக்கிறார். என்ன செய்யப்போகிறார் என்ன திட்டம் போடுகிறார் என எதிர்பார்க்க வைத்து நம்மை உட்கார வைக்கிறார்.
அதிதி ராவ் ஹைதரி விஜய் சேதுபதியின் காதலியாக மிக அழகாக, உணர்வுப் பூர்வமான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். மிக அழகாக அந்த காதல் உணர்வை தன் நடிப்பால் வெளிப்படுத்துகிறார். விஜய் சேதுபதியின் குணத்தை மாறாமல் காக்கும் ஒரு கதாபாத்திரமாக மனதில் நிற்கிறார். திருடனாக வரும் சித்தார்த் ஜாதவ் தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அதிதி ராவ் அம்மா, விஜய் சேதுபதியின் அம்மா, பக்கத்து வீட்டுக்காரர், வாட்ச் மேன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் நல்ல தேர்வு. நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள்.
கரண் ராவத் ஒளிப்பதிவு மும்பையின் பணக்கார வீடுகள், மற்றும் ஏழைகளின் குடியிருப்புகள் என இருவேறு வர்க்க வேறுபாட்டை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. வசனம் இல்லா இந்த திரைப்படத்தை திரையில் ஒரு கவிதையாக கொடுக்க பெரும் பங்கை ஆற்றியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் நன்றாகவே இருக்கின்றன, ஆனாலும் மௌனப்படத்தில் பாடல்கள் எப்படி? என்ற கேள்வியை எழுப்புகிறது. இசையே வசனமாக மாறி கதை சொல்லலை இன்னும் மேம்படுத்துகிறது. காதலின் மௌனம், குற்றம் செய்யும் பதற்றம், சொல்ல முடியாத எண்ணங்களை உணர்ச்சிப்பூர்வமாக ரஹ்மானின் இசை நமக்கு தருகிறது.
இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் மௌனப்படத்துக்கு ஒரு tribute-ஆக இந்த படத்தை தந்திருக்கிறார். வசனங்கள் இல்லாமல் சினிமாவின் இலக்கணத்தை, மரபுகளை உடைத்து துணிச்சலான கதை சொல்லல் மூலம் இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். வசனங்கள் இல்லையென்றாலும் ஒலி, இசை, எழுத்துக்கள் ஆகியவற்றால் நிரப்பி காந்தி டாக்ஸ் சொல்ல வந்த கருத்தை ஆழமாக மனதில் பதிய வைக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் தேர்வு தான் படத்தின் ஆணிவேர். அவர்களின் நுணுக்கமான நடிப்பு மட்டுமே படத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துகிறது. சினிமா கலைக்கு ஒரு Tribute இந்த காந்தி டாக்ஸ். அனைவரும் நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

