வாழ்ந்து மறைந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பலரின் வாழ்க்கைக் கதைகளை திரையில் பயோபிக் சினிமாவாக பார்ப்பது அலாதியான அனுபவம். அப்படி சினிமாவாக ஆக்க முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் அதை ஆவணப்படுத்தினால் அடுத்தடுத்த தலைமுறைகள் அதை பார்த்து தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். அப்படி மறைந்த ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு ஆவணப்படம் தான் “RMV THE KINGMAKER”.
அருளாளர் என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் வரலாறு, வாழ்க்கைப் பயணம், சினிமா மற்றும் அரசியல் பயணத்தை பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம். அவரது வாரிசான தங்கராஜ் வீரப்பன் தயாரிக்க, பினு சுப்ரமணியம் இந்த ஆவணப் படத்தை இயக்கி தொகுத்து தந்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வல்லத்திராகோட்டை என்ற கிராமத்தில் பிறந்து தன் இளமைக் காலத்தில் தந்தை பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவருடன் பணியாற்றுகிறார். பெரியார் மட்டுமின்றி அறிஞர் அண்ணாவுடனும் பணியாற்றுகிறார். அவரது நேர்மை மற்றும் திறமையை பார்த்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவரை தன்னுடன் இணைத்துக் கொள்கிறார்.
திமுகவில் பணியாற்றிய காலம், அதிமுக ஆரம்பிக்க எவ்வளவு உறுதுணையாக இருந்தார், எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு அரசியல் முடிவுகளிலும், முக்கியமான காலகட்டங்களிலும் எப்படி எல்லாம் பங்காற்றினார் என்பதை இந்த ஆவணப்படம் மிக அழகாக எடுத்து சொல்லியிருக்கிறது. எம்ஜிஆர் மட்டுமின்றி புரட்சித் தலைவி ஜெயலலிதா அரசியலிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார் என்பதை இந்த தலைமுறைக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.
அரசியல் தாண்டி கலை உலகிலும் அதாவது தமிழ் சினிமா வளர்ச்சிக்கும், தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பையும் எடுத்து சொல்லியிருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் மகத்தான சேவையையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை வைத்தும் பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கிறார். இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கம்பன் கழகத்தை நிறுவி இலக்கிய சேவையையும் ஆற்றியிருக்கிறார்.
ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் உயரத்தைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் இந்த ஆவணப் படத்தில் அவரைப் பற்றி பேசிய ஆளுமைகளை வைத்து பார்த்தாலே புரியும்.
தமிழ்நாடு முதலைமச்சர் திரு. மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த், திரு. ஆர். கண்ணன், திரு. ஆர். சரத்குமார், திரு. சத்யராஜ், கவிஞர் திரு. வைரமுத்து, ISRO விஞ்ஞானி திரு. நம்பி நாராயணன் என பல ஆளுமைகளும் இந்த ஆவணப்படத்தில் பேசியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் தமிழகத்தில் அரசியல், சினிமா, இலக்கியம், இந்து சமயம் என பல துறைகளிலும் ஆளுமை செலுத்திய வியத்தகு மனிதருக்கு செலுத்தும் ஒரு அன்புக் காணிக்கை தான் இந்த ஆவணப்படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நிச்சயம் இந்த தலைமுறையினரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

