நல்ல சினிமாக்களை இயக்குவதோடு தனியாக ஸ்டோன் பெஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனம் துவக்கி நல்ல சினிமாக்களை தயாரித்து, பல நல்ல படங்களை வாங்கி தொடர்ச்சியாக வெளியிட்டு வருபவர் கார்த்திக் சுப்பாராஜ். அப்படி தற்போது அவரின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் வெளியாகும் படம் “அங்கம்மாள்”. புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த ‘அங்கம்மாள்’ எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, அங்கம்மாள் என்ற கதாபாத்திரத்தில் வரும் கீதா கைலாசம் கொஞ்சம் பிடிவாதமான, தீர்க்கமான குணாதிசயங்களை உடையவர். பரணி, சரண் என இருவரையும் வளர்த்து ஆளாக்கியவர். பெரிதாக படிக்காத பரணி விவசாயம் பார்த்து வருகிறார். இளைய மகன் சரண் மருத்துவம் படித்தவர். ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். காதலியின் தந்தை மிகப்பெரிய பணக்காரர். அவரும் திருமணத்துக்கு சம்மதிக்கிறார். இந்த நிலையில் ஜாக்கெட் அணியும் பழக்கமே இல்லாத தன் அம்மா கீதா கைலாசத்தை ஜாக்கெட் அணிய சொல்கிறார்கள் சரணும், அவரது அண்ணி தென்றலும். அதில் விருப்பம் காட்டாமல் வெறுப்போடு இருக்கிறார் கீதா கைலாசம். அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, என் அப்பா, அம்மா ஜட்ஜ் செய்ய மாட்டாங்க எனவும் சரணிடம் சொல்கிறார் நாயகி முல்லையரசி. கீதா கைலாசம் தன்னுடைய சுயத்தை விட்டுக் கொடுத்தாரா? இந்த சூழலை எப்படி கையாண்டார்கள்? மனிதர்கள் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதே மீதிக்கதை.
அங்கம்மாள் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இதுவரை நாம் பார்க்காத மாதிரி ஒரு கீதா கைலாசம் படம் முழுக்க தெரிகிறார். ஜாக்கெட் அணியாமல், பச்சைக் குத்திக் கொண்டு, சுருட்டு பிடித்துக் கொண்டு, டிவிஎஸ் ஓட்டிக் கொண்டு, கெட்ட வார்த்தை பேசிக் கொண்டு முற்றிலும் புதிய பரிமாணத்தில் நடித்திருக்கிறார். அவரது இளைய மகனாக வடசென்னை சரண். படித்த இளைஞராக, நாகரீகத்தை விரும்பும் ஒரு நபராக, ஒரு வித டென்ஷனோடு சுற்றுபவராக நன்றாகவே இருக்கிறார்.
மூத்த மகனாக பரணி. பெரிதாக படிக்காத, அம்மாவுக்கு அடங்கிப் போன மகனாக இதுவரை பார்க்காத ஒரு தேர்ந்த நடிப்பை தந்திருக்கிறார். நாயகியாக முல்லையரசி. நம்ம ஊரு பொண்ணு, நல்ல அழகான கலையான தோற்றம், நடிப்பிலும் நம் மனதை கொள்ளை கொள்கிறார். நாயகனின் அண்ணியாக வரும் தென்றல் ரகுநாதன் அப்படியே கிராமத்து குடும்ப பெண்களை பிரதிபலித்திருக்கிறார். மற்ற நடிகர்களும், அந்த ஊரின் முகங்களாக படத்தின் உண்மைத் தன்மையையும் நேர்த்தியாக பதிவு செய்ய உதவியிருக்கிறார்கள்.
அஞ்சோய் சாமுவேல் ஒளிப்பதிவு படத்தை மிக அழகாக காட்டியிருக்கிறது. படத்தின் அழகியலுக்கும், நேட்டிவிட்டிக்கும் மிக மிக உதவியிருக்கிறது. பல லொகேஷன்கள் திரையில் மிக அழகாக காட்டியிருக்கிறார். முகமது மக்பூல் மன்சூரின் இசையும் படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளது. உச்சிக் காத்தே பாடலும் படத்தை மேலும் உணர்வுப்பூர்வமாக நம்முடன் இணைக்கிறது. படத்தின் ஒலி வடிவமைப்பும், ஒலிக்கலவையும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன், புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி, திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அந்த சிறுகதையை முழுமையாகப் புரிந்து கொண்டு படமாகக் கொண்டு வந்த இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. சிறுகதையை சினிமாவாக மாற்றும்போது இருக்கும் பல சிக்கல்களையும் அழகாக கையாண்டிருக்கிறார். ஒரு குறும்படத்திற்கான கதையை முழுநீள படமாக எடுத்திருப்பதே ஆச்சர்யம் தான். தன்னுடைய திரைமொழியாலும், நேர்த்தியான படமாக்கலாலும் நல்ல ஒரு படைப்பாக நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர். பல விருதுகளையும் வாங்கும் என உறுதியாக சொல்லலாம்.

