தமிழ் சினிமாவில் சமீப காலமாக ரீ-ரிலீஸ் கலாச்சாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. காலத்தால் மறக்க முடியாத சில கிளாசிக் படங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் ஒரு நல்ல முயற்சியாகவும் இது அமைகிறது. அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசனின் திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ‘நாயகன்’ படத்தை டிஜிட்டலில் மீள் உருவாக்கம் செய்து, கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். டிஜிட்டல் வெளியீட்டில் விஷூவல் மற்றும் ஆடியோ தரம் எப்படி இருந்தது? பார்க்கலாம்.
நாயகன் படத்தை பார்க்காத ரசிகர்களே இல்லை என சொல்லும் அளவுக்கு எல்லா தலைமுறை ரசிகர்களும் பார்த்து ரசித்த படம். எத்தனை முறை பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போலவே அப்படி ஒரு திரை அனுபவத்தை கொடுக்கிறது இந்த நாயகன். மும்பையில் வாழ்ந்த தமிழகத்தை சேர்ந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள இந்த படத்தின் ஆரம்ப காட்சி துவங்கி இறுதி காட்சி வரை அத்தனை உணர்வுகளையும் மிக அழகாக நமக்கு கடத்தியிருக்கிறது படம். பல காட்சிகள் நம்மை கண் கலங்க வைக்கிறது.
திரையுலகில் அறுபது ஆண்டுகளாக தனது நடிப்பால் கோலோச்சி நிற்கும் உலகநாயகன் கமல்ஹாசன், அவரின் 32வது வயதில் நடித்த படமா இது என்ற வியப்பு காட்சிக்கு காட்சி எழுகிறது. இளைஞராக, இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக, மகளின் மகனுக்கு தாத்தாவாக என இளைஞர் முதல் முதியவர் ஆவது வரையிலான கால மாற்றங்களையும் தன் அசாத்திய நடிப்பால் வேலு நாயக்கராகவே நம் மனதில் நிற்கிறார்.
சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி என நடிப்பு ஜாம்பவான்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம். ஒவ்வொருவருமே அந்தந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் 400வது படம் இந்த நாயகன். இசையில் ஒரு இசை ராஜாங்கத்தையே நிகழ்த்தியிருக்கிறார். ‛தென்பாண்டி சீமையில’ பாடல் ஒவ்வொரு முறை வரும்போதும் நாம் படத்துக்குள்ளே லயித்து கிடப்போம். ’நீ ஒரு காதல் சங்கீதம்’, நிலா அது வானத்து மேலே, அந்தி மழை மேகம், நான் சிரித்தால் தீபாவளி என அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு காலம் கடந்தும் இபப்டி ஒரு ஒளிப்பதிவை பார்க்க முடியவில்லையே என தோன்ற வைக்கும் அளவுக்கு சிறந்த ஒளிப்பதிவு. தோட்டா தரணியின் கலை இயக்கம் மும்பையை நம் முன் கண் முன் நிறுத்தியிருக்கிறது.
டிஜிட்டல் தொழில் நுட்ப மெருகேற்றலில் இன்றைய புதுப்படங்களுக்கு இணையாக மிக நேர்த்தியாக, தரமாக மெறுகேற்றப்பட்டிருக்கிறது. விஷூவல்ஸ், கலர் கிரேடிங் என மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. இசையும், சவுண்டும் மிக அழகாக ரீஸ்டோர் செய்யப்பட்டிருக்கிறது. பல முறை தொலைக்காட்சிகளில், ஓடிடியில் பார்த்து ரசித்தவர்களும் கூட நிச்சயம் திரையரங்கில் சென்று இந்த அனுபவத்தை தவற விடக் கூடாது என்பதே நாம் வைக்கும் வேண்டுகோள்.

