சென்ட்ரல் – விமர்சனம்!

ஸ்ரீரங்கநாதர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் வியாப்பியன் தேவராஜ், சதா குமரகுரு, தமிழ் சிவலிங்கம் தயாரித்துள்ள படம் “சென்ட்ரல்”. காக்கா முட்டை விக்னேஷ் கதையின் நாயாகனாக நடிக்க, நாயகியாக சோனேஸ்வரி நடித்துள்ளார். முதலாளித்துவத்துக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் எதிரான படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பாரதி சிவலிங்கம் இயக்கியுள்ளார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, +2 படிக்கும் மாணவர் விக்னேஷ். மிகவும் வறுமையான சூழலில் வளரும் விக்னேஷ் அவரது தந்தையை ஒரு நாள் கூட வீட்டில் பார்த்தது இல்லை. குடும்பத்திற்காக, ஊரை விட்டு சென்னையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக கால் நூற்றாண்டுகளை கழிக்கிறார் அவரது தந்தை. ஆனாலும் குடும்பத்தின் கடன், வறுமை எதுவும் தீர்ந்த பாடில்லை. அதனால் குடும்ப கஷ்டத்தை கொஞ்சம் தீர்க்கலாம் என பிளஸ் 2 விடுமுறையில் 2 மாதங்கள் சென்னையில் வேலை பார்க்கலாம் என கிளம்புகிறார். சென்னையில் பேரரசுவுக்கு சொந்தமான நூற்பாலையில் வேலைக்கு சேர்கிறார். எந்த சூழலிலும் வேலை பார்த்து விட வேண்டும் என்ற மன உறுதியோடு வரும் விக்னேஷூக்கு அங்கு சில நாட்களை கூட தாண்ட முடியவில்லை. பேரரசுவும், அவரது மேனேஜர் சித்தா தர்ஷனும் தொழிலாளர்களை அடிமையை விட மோசமாக நடத்துகிறார்கள். எதிர்த்து பேசுபவர்களை கொலை செய்து விடுகிறார்கள். இந்த கடுமையான சூழலை விக்னேஷ் எப்படி எதிர்கொண்டார், கல்வி தான் நம்மை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் என்பதை எப்போது உணர்ந்தார்? அந்த முதாலாளியிடம் இருந்தும், முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் இருந்தும் எப்படி வெளியே வந்தார்? என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகனாக விக்னேஷ். காக்கா முட்டையில் சின்ன பையனாக பார்த்தோம், இந்த படத்தில் நல்ல ஒரு இளைஞராக கதாபாத்திரத்தின் தன்மையை உனர்ந்து ஆர்ப்பாட்டம் இல்லாத நல்ல ஒரு நடிப்பை வழங்கியுள்ளார். இந்த வயது கேட்டகிரியில் ஹீரோக்கள் ரொம்பவே குறைவு, இவர் அந்த இடத்தை நிரப்பும் வாய்ப்பு பிரகாசம். நாயகியாக சோனேஷ்வரி. பள்ளி மாணவியாக சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். நடிக்க வாய்ப்பு குறைவு, ஆனாலும் நன்றாக நடித்திருக்கிறார்.

படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு சர்ப்ரைஸ் இயக்குனர் பேரரசு. கொடூரமான ஒரு முதலாளியாக நடித்திருக்கிறார். முதலில் ரிலாக்ஸா வேலை செய்யுங்க என சொல்வதும், அடுத்த காட்சியில் அறைக்குள் வைத்து வெளுப்பதும் வில்லத்தனத்தின் உச்சம். சித்தா படத்தில் வில்லனாக நடித்த தர்ஷன் இந்த படத்திலும் மிரட்டுகிறார். சித்தாவில் அதிகம் பேசாமல் சைலெண்டாக மிரட்டியவர், இந்த படத்தில் அடி, உதை, கத்தல் என உக்கிரம் அதிகம். ஆறு பாலா, மேதகு ராஜா, அன்பு ராணி, கவிநிலவன், ஓம் கணேஷ் என மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை முடிந்தவரை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

இலா ராதாகிருஷ்ணன் இசையில் பாடல்கள் இதம். மாரி செல்வராஜ் படங்களில் வருவதை போலவே ஒரு பாடல் இந்த படத்திலும். நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் தொழிலாளர்கள் கஷ்டப்படும்போது வரும் பாடலும் நம்மை வருடுகிறது. ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி ஒளிப்பதிவு படத்துக்கு பெரும்பலம். அடத்தியான சென்னையை காட்டிய விதமும், கிராமத்து அழகை கழுகுப்பார்வையில் காட்டிய விதமும் அருமை. நூற்பாலை, கோயம்பேடு மார்க்கெட், நெரிசலான சென்னையின் சாலைகளில் நடிகர்களை நடிக்க வைத்து காட்சிப்படுத்தியது என ஒளிப்பதிவில் ஜாலம் காட்டுகிறார்.

இயக்குனர் பாரதி சிவலிங்கம், அவரது சொந்தக் கதை தானோ என எண்ண வைக்கிறது நாயகன் மற்றும் அவரது தந்தை கதாபாத்திரத்தின் பெயர்கள். உழைப்பாளர்களுக்கு சாதி, மதம், மொழி, இனம் என எதுவும் கிடையாது. முதலாளிக்கு கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று தான் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். எந்த வித உழைப்பும் இன்றி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பெரும் பணக்காரர்களாகும் முதலாளிகளையும், அந்த முதலாளித்துவத்துக்கு எதிராக சாட்டையை… சாரி சாரி, கத்தியை சொருகியிருக்கிறார். அதிலும் படிக்காத, உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் தொழிலாளர்களின் அவல நிலையை மிக இயல்பாக பிரதிபலித்திருக்கிறார். நாயகன் நாயகனாக எதுவும் செய்யாமல் இந்த ஓநாய்களிடம் சிக்கி அதிலிருந்து தப்பிக்கப் போராடும் ஒரு மானாகவே இருக்கிறார். குறைகள் இருந்தாலும் அவற்றை மறந்து விட்டு நிச்சயம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *