கதை நல்லா இருந்தா குரங்கை வைத்து படம் எடுத்தாலும் ஓடும் – விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘மார்கன்’. படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் லியோ ஜான் பால் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜய் திஷான், சமுத்திரக்கனி, பிரிகிடா சகா, தீப்ஷிகா என பலரும் நடித்துள்ளனர்.  க்ரைம் திரில்லர் படமாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் சுசீந்திரன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவை பாராட்டிப் பேசினர்.

அப்போது பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “சினிமாவில் நான் பல வெற்றி, தோல்விகளை பார்த்து இருக்கிறேன். இந்த மார்கன் படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. ஏனென்றால் இந்த திரைப்படத்தில் என் மனத்திற்கு பிடித்த நெருக்கமான இரண்டு பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

ஒருவர் இயக்குனர் லியோ ஜான் பால். எந்த படம் வெற்றி பெற்றாலும் அது ஹீரோவால் மட்டும் இல்லை, இயக்குநரால் தான் என்பதை நம்புபவன் நான். கடவுளே கதாநாயகனாக நடித்தாலும் கூட டைரக்டரின் கதையும், டைரக்ஷனும் சரியாக இல்லை என்றால் அந்த படம் ஒரு நாள் கூட ஓடாது. அதே போல ஒரு குரங்கை வைத்து படம் எடுத்தாலும் ஓடும்.

இன்னொருவர் என்னுடைய சகோதரியின் மகன் அஜய் திஷான். அவரை நான் இந்த படத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அவரை அறிமுகப்படுத்துகிறோமே படம் நன்றாக வரவேண்டும் என்று பயம் இருந்தது. அந்த பயம் இப்போது என்னிடம் இல்லை. இந்த படத்தை தொடர்ந்து, பிச்சைக்காரன் படத்தை இயக்கிய சசி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இரண்டாவது படத்திலேயே ஒரு பெரிய இயக்குனருடன் அவர் இணைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக, அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நான் நடித்த சக்தித் திருமகன் படம் வெளியாக இருக்கிறது. படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். விரைவில் சக்தித் திருமகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். மார்கன் படத்தை வெற்றிப் படமாக்கிய ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *