தமிழில் எத்தனையோ வெப் சீரீஸ் எனும் இணையத் தொடர்கள் வெளிவந்திருந்தாலும் மிகச் சிறந்த தொடர் என்ற பெயரை சில தொடர்களே பெற்றிருக்கின்றன. சுழல், விலங்கு, அயலி என சில தொடர்கள் மிகப்பெரும் பெயரை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் விலங்கு தொடரின் இயக்குனர் மற்றும் ZEE 5 இணைந்து உருவாக்கியிருக்கும் மற்றொரு தொடர் தான் “வாரண்ட்”. விலங்கு தொடரைப் போலவே காவல்துறை பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் பிரசாந்த் பாண்டிராஜே நடித்திருக்கிறார். விக்னேஷ் நடராஜன் இயக்கியிருக்கிறார். தொடர் எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம்.
கதைப்படி, தலைமை ஆசிரியராக பணிபுரிந்த பாலாஜி சக்திவேல் தன் மகந் பிரசாந்த் பாண்டிராஜையும் ஒரு அரசுப் பணியில் சேர்க்க பல முயற்சிகள் எடுக்கிறார். தேர்வுகளில் தேர்வாகாமல் போக, ஒரு கட்டத்தில் தாய் மாமன் காளி வெங்கட் மூலம் காவலராகி விடுகிறார். ஆரம்பத்தில் காவல்துறை பணியை சரியாக செய்ய முடியாமல் திணறுகிறார். அத்துடன் ஒரு திருடனை தப்பிக்க விட்டு, கோட்டை கருப்புசாமி என்ற பெயரை கொட்டை என கூப்பிடும் அளவுக்கு, மற்றவர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிறார். பணியில் இருந்து விலகும் முடுவுக்கு போகும்போது அப்பா சொல்லும் அறிவுரைகள் அவரை யார் என நிரூபிக்க உத்வேகம் அளிக்கிறது. திணறிக் கொண்டு இருந்த அவரை அந்த காவல் நிலையமே பெருமையாக பார்க்கும் அளவுக்கு மாற கடுமையாக உழைக்கிறார். இதற்கிடையில் அவர் செய்யும் வேலையும், அதிரடியுமே அவருக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அது என்ன பிரச்சினை? அதில் இருந்து மீண்டாரா? அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
பிரசாந்த் பாண்டிராஜ், கதையின் நாயகனாக மையக் கதாபாத்திரத்தில் கதைக்கு ஏற்ற ஒரு முகமாக, அந்த மண்ணின் மைந்தனாக மொத்த கதையிலும் அவரது முத்திரையை பதிக்கிறார். இயல்பான நடை, உடை, பேச்சு வழக்கு என உண்மையான மனிதர்களை நாம் நேரில் பார்த்த உணர்வை தந்திருக்கிறார். அப்பாவியான இளைஞராகவும், ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்து அதிரடி காட்டுவதும் என ஸ்கோர் செய்கிறார். மொத்தத்தில் கதைக்கு பொருத்தமான முகமாக 200% பொருந்தியிருக்கிறார்.
நர்ஸாக வரும் நாயகி நர்மிதா.எம்.வி. அழகாகவும் ஆழமாகவும் மனதில் நிற்கிறார். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் சாயா தேவி அவரை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தையே மாற்றுகிறார். அன்போடு பார்க்க வைக்கிறார். அருள்ஜோதி, யுவிகா ராஜேந்திரன் ஆகியோரும் சில காட்சிகள் வந்தாலும் அவர்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
பிரசாந்த் பாண்டியராஜின் பெற்றோராக வரும் பாலாஜி சக்திவேல் மற்றும் கெளசல்யா இருவருமே கச்சிதம். ஒரே மகனுக்காகவே வாழும் ஜீவன்களாக மனதில் நிற்கிறார்கள். காவல் நிலையத்தை பொறுத்தவரை இன்ஸ்பெக்டற் அருள்தாஸ், காவலர் ஹலோ கந்தசாமி, மற்ற காவலர்கள் என ஒவ்வொருவருமே கச்சிதமாக உண்மையான போலீஸை பார்த்த உணர்வை தருகிறார்கள். திருடன் கொடைக்கானல் சரவணனாக வருபவர், துரை கதாபாத்திரம், இளம் நீதிபதியாக வருபவர் என அத்தனை கதாபாத்திரங்களுமே அவ்வளவு யதார்த்தம், சிறப்பான தேர்வு.
ஒளிப்பதிவாளர் அசோக் குமார் திருச்சியை மிக அழகாக, இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். காவல் நிலையத்திற்குள் நடக்கும் காட்சிகளையும் அவ்வளவு பரபரப்பாக காட்டியிருக்கிறார். சாம்.சி.எஸ் வழக்கம் போல பின்னணி இசையில் மிரட்டி எடுக்கிறார். அந்த டைட்டில் இசையே அதற்கு சான்று. மொத்த தொடருக்குமே ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான இசையை தந்திருக்கிறார். ராமரின் படத்தொகுப்பு எட்டு அத்தியாயத்தையும் மிக விறுவிறுப்பாக நமக்குள் கடத்துகிறது.
‘விலங்கு’ தொடரில் இதுவரை நாம் பார்க்காத ஒரு கோணத்தில் மிக இயல்பாக காவல்துறையை நமக்கு மிக நெருக்கமாக காட்டியிருந்தார் இயக்குனர் பிரசாந்த். இந்த தொடரிலும் அப்படி ஒரு முறையில் தான் கையாண்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் நடராஜன். சீரியல் கில்லர், சைக்கோ கில்லர் என ஒன்றை மட்டுமே வைத்து நூல் பிடித்தாற்போல செல்லும் கதைகளுக்கு மத்தியில் அப்படி ஒரு இலக்கணத்தை பின்பற்றாமல் காவலர் ஒருவரின் வாழ்க்கை பயணம் மற்றும் புரிதல் பின்னணியில் கொண்டு சென்ற்8உ, அதே நேரம் எட்டு பாகங்களிலும் ஆர்வம் குறையாமல் பார்க்க வைத்திருக்கும் வித்தை பாராட்டுக்குரியது. கடைசி இரண்டு பாகங்களில் வரும் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் தான் இந்த கடஹியின் அடிநாதமே. பரபரப்பான சம்பவங்கள், காவலரின் வாழ்க்கையின் உணர்வுப் பூர்வமான காட்சிகள், சிஸ்டம் செயல்படும் விதம் என அத்தனையும் கலந்த கலவையாக அமைந்திருக்கிறது இந்த தொடர். மொத்தத்தில் காவல்துறையின் இன்னொரு பக்கத்தை உண்மைக்கு நெருக்கமாக காட்டி, தவிர்க்க முடியாத ஒரு தொடராக மாற்றியிருக்கிறார்கள் பிரசாந்த் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன். நிச்சயம் தமிழில் வந்த சிறந்த தொடர்களில் மிக முக்கியமான தொடர் இந்த “வாரண்ட்”.

