நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான இந்திய ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கேமிங் கவுன்சில் (Indian Council for Media, Entertainment & Gaming – ICMEG) அமைப்பின் தமிழ்நாடு கிளை, சென்னையில் உள்ள ஐஐடிஎம் ரிசர்ச் பார்க்கில் (IITM Research Park) தொடங்கப்பட்டது. ஐசிஎம்ஈஜி சென்னை கிளை தொடக்க விழாவில், தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சங்கம் (Tamil Nadu AI Association – TNAIA) மற்றும் ஐசிஎம்ஈஜி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) கையெழுத்தானது.
இத்துறையின் மிக முக்கிய மையங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் உள்ள படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கான ஒரு முக்கிய மைல்கல்லாக இந்தத் தொடக்க விழா அமைந்தது. தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சங்கத்துடன் இணைந்து, முன்னணி நிறுவனங்களான புரொடியூசர்பஜார் (ProducerBazaar) மற்றும் ஐபி கிளைம்ப் (IP Climb) ஆகியவற்றின் ஆதரவோடு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொள்கைசார் ஆதரவு (Policy advocacy), அறிவுசார் சொத்துரிமை (IP) பாதுகாப்பு மற்றும் இத்துறையின் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இணைந்து செயல்படும் நோக்கில், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழலைத் தமிழ் தயாரிப்பாளர்களும் படைப்பாளிகளும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான ஆலோசனைகளை வழங்கும் நோக்கில், எதிர்காலம் சார்ந்த பல கலந்துரையாடல்கள் இந்நிகழ்வில் நடைபெற்றன. உள்ளடக்கத் தயாரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பங்கு, வெர்டிகல் மற்றும் குறு வடிவ (Short-form) உள்ளடக்கங்களின் வளர்ச்சி, அறிவுசார் சொத்துரிமை (IP Rights) & உரிமைகள் மேலாண்மை, மற்றும் புதிய வருவாய் ஈட்டும் வழிகள் (Monetisation pathways) ஆகிய முக்கியத் தலைப்புகளில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஊடகத் துறை நிபுணர்கள், நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் படைப்பாளிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஈநாடு டெலிவிஷன் பிரைவேட் லிமிடெட் துணைத் தலைவர் திரு. சாய் கிருஷ்ணா; சன் நெக்ஸ்ட் (SUN NXT) உள்ளடக்கத் தலைவர் திரு. சூர்யா என்; ஜீ புல்லட் நிர்வாகத் தயாரிப்பாளர் டாக்டர் அஃப்ரோஸ் பாத்திமா; ஃபாண்டம் மீடியா குரூப் முதன்மை வணிக அதிகாரி (CBO) திரு. ராஜன் எத்திராஜா; வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் ஊடக இயக்குநரும் தயாரிப்பாளருமான செல்வி. கவிதா பாண்டியன்; மற்றும் எம்எஃஐ (MFI) இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ஜே லட்சுமண் ஆகியோர் இதில் பங்கேற்றனர். தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சங்க நிறுவனர் திரு. வெங்கடேஷ் ராஜேந்திரன் மற்றும் ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் (FipChain Technology Pvt Ltd) நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. ஜிகே திருநாவுக்கரசு ஆகியோர் கலந்துரையாடல்களை நெறிப்படுத்தினர்.
ஐசிஎம்ஈஜி தமிழ்நாடு கிளையின் தொடக்க விழாவிற்கு முன்னணி ஊடக நிறுவனங்கள் தங்களது ஆதரவை வழங்கின. ஜீ புல்லட், சன் நெக்ஸ்ட், இடிவி வின் (ETV Win), இடிவி, ஃபாண்டம் எஃப்எக்ஸ் (PhantomFX) மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இம்முயற்சிக்கு ஆதரவளித்தன.
ஐசிஎம்ஈஜி அமைப்பின் தமிழ்நாடு கிளையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு சங்க (TNAIA) நிறுவனர் வெங்கடேஷ் ராஜேந்திரன் பேசுகையில், “இந்திய ஊடகத் துறையில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் திகழ்கிறது. உலகளாவிய சிறந்த நடைமுறைகள், வலுவான ஐபி (IP) பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் புதிய டிஜிட்டல் வருவாய் வழிகளை உருவாக்குவதற்கான ஒரு கூட்டுத் தளத்தைதமிழ் தயாரிப்பாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் வழங்க ஐசிஎம்ஈஜி தமிழ்நாடு கிளை உறுதி பூண்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
ஃபிப்செயின் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜிகே திருநாவுக்கரசு பேசுகையில்: “படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இடையேயான ஒரு வலுவான கூட்டுச் சூழலியலின் தொடக்கத்தை ஐசிஎம்ஈஜி தமிழ்நாடு கிளையின் தொடக்கம் குறிக்கிறது. ஊடகம், பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் ஏஐ சார்ந்த புத்தாக்கங்களை இணைப்பதன் மூலம், தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் அடுத்த தலைமுறை படைப்பாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களின் படைப்புரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களை மேம்படுத்தவும் இம்முயற்சி வழிவகுக்கும்,” என்று கூறினார்.
தமிழ் சினிமாவின் உலகளாவிய எல்லைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட எதிர்கால கூட்டுத் திட்டங்கள் குறித்து, தயாரிப்பாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இடையேயான பயனுள்ள கருத்து பரிமாற்றங்களுடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

