‘மண்டேலா’, டூலெட் போன்ற நல்ல படங்களில் நடித்த ஷீலா கதையின் நாயகியாக, அறிமுக நாயகன் ஆதவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கெவி’. ஜாக்குலின் லிடியா, சார்லஸ் வினோத், தர்மதுரை ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர். மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலை ஆழமாகவும், அழுத்தமாகவும் பேசியுள்ள உருவாகியுள்ள படம், எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளக் கெவி என்ற மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் சாலை வசதி, மருத்துவ, சுகாதார வசதி இன்றி வாழ்ந்தி வருகிறார்கள். அந்த ஊரில் வசிக்கும் மலையன் மற்றும் மந்தாரை என்ற தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். மந்தாரை நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கொடைக்கானலில் உள்ள மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். அந்த மருத்துவமனைக்கு செல்ல ஏழு கிலோமீட்டர் நடக்க வேண்டி இருக்கிறது. மலைப்பாதையில் நடக்க வேண்டும். வண்டி எதுவும் அந்த வழியில் செல்ல முடியாது. அப்படிப்பட்ட சூழலில் மந்தாரைக்கு பிரசவ வலி ஏற்பட, இரவு நேரத்தில் அவரை எப்படி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்? மருத்துவர் அவர்களுக்கு உதவினாரா? அதே நேரத்தில் அந்த பகுதி போலீசாரால் சித்திரவதை செய்யப்படுகிறார். மந்தாரை குழந்தையை பெற்றெடுத்தாரா? மலையன் போலீஸிடம் இருந்து தப்பினாரா? அந்த கிராம மக்களுக்கு உரிய வசதிகள் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகன் ஆதவன், மலையன் என்ற கதாபாத்திரத்தில் ஒரு மலைவாழ் மனிதராகவே மாறி நடித்துள்ளார். கோபக்கார இளைஞராக போலீஸிடம் மோதும் காட்சிகளாகட்டும், உயிருக்கு போராடி தவிக்கும் காட்சிகளாகட்டும், மனைவியின் நிலையறிந்து உடைந்து போகும் காட்சிகளாகட்டும் தன் நடிப்பால் நம்மை கனக்க வைக்கிறார். ஷீலா ராஜ்குமார் வழக்கம் போல உணர்வுப் பூர்வமான நடிப்பால் உண்மையான ஒரு மலைவாழ் பெண்மணியாகவே நம்மை கருத வைக்கிறார்.
ஜாக்குலின் லிடியா ஒரு இளம் மருத்துவராக வந்து நம் மனதில் பதிகிறார். அந்த மக்களுக்காக அவரும் ஜீவாவும் செய்யும் காரியம் நம்மை நெகிழ வைக்கிறது. கொடூரமான போலீஸ் அதிகாரியாக சார்லஸ் வினோத் மிரட்டுகிறார். மற்ற நடிகர்களும், அந்த கிராமத்து உண்மை மனிதர்களும் படத்தின் ஜீவனாக இருக்கிறார்கள்.
ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு அந்த மலைப்பகுதியை கழுகுப் பார்வையில் காட்டிய விதமும் மிக அழகு. இரவில் அந்த மலைப்பாதையில் நடக்கும் காட்சிகள் எல்லாமே அவ்வளவு உழைப்பு. மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்த டோலியை தூக்கிக் கொண்டு செல்வது, தீப்பந்தம், டார்ச் லைட் ஒளி என விஷூவலாக சிறப்பாக காட்டியிருக்கிறார்.
பாலசுப்பிரமணியன் ஜி, சா.ராஜா ரவிவர்மா இசையில் வைரமுத்து பாடல் வரிகள் அழகாக பொருந்திப் போயிருக்கிறது. பாடல் இசை மிகச்சிறப்பு, பின்னணி இசை அபாரம்.
மலைவாழ் மக்களின் வலிகளையும், அரசியல் மற்றும் மருத்துவ துறையின் அலட்சியங்களையும் இந்தப் படம் மிக சிறப்பாக காட்டியிருக்கிறது. தேர்தல் நேரங்களில் மட்டும் தான் இப்படி ஒரு கிராமம் இருப்பதே அரசுக்கு தெரியும் என்பதையும் மற்ற நேரங்களில் எந்த ஒரு வசதியையும் செய்து தர மாட்டார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் தமிழ் தயாளன். இப்படிப்பட்ட ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டதற்கே முதல் பாராட்டு. அதை மிகச்சிறப்பாக படமாக்கிய விதமும் படத்தை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.

