தமிழ் சினிமா வரலாற்றில் முதல் படத்திலேயே மிக பிரமாண்டமான அறிமுகம் கிடைத்த நாயகர்களில் மிக முக்கியமானவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கார்த்தி. அவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவே திரும்பிப் பார்த்த ஒரு அறிமுக நாயகன் விக்ரம் பிரபு. அந்த பெருமையை பெற்றுத் தந்த படம் “கும்கி”. இப்படி ஒரு ஃபிரெஷான கதைக்களத்தையும் தமிழ் சினிமாவுக்கு அளித்திருந்தார் இயக்குனர் பிரபு சாலமன். அந்த சிறப்பு வாய்ந்த கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன். முதல் பாகத்தை போலவே மிகப்பெரும் வெற்றியை பெற்றதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மலை கிராமத்தில் வசிக்கும் சாராய வியாபாரி அம்மாவுக்கு பிறந்த நாயகன், அன்புக்கு ஏங்குபவர். அந்த நேரத்தில் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றுகிறார். அதில் இருந்து அந்த குட்டி யானை நாயகனை சுற்றி வர, அதை தன்னுடனே வைத்து வளர்க்கிறார். மனிதர்கள் செய்யும் பல வேலைகளையும் கற்றுத் தருகிறார். திடீரென்று ஒரு நாள் யானை காணாமல் போகிறது. அந்த நினைவிலேயே சுற்றும் நாயகன், சில வருடங்கள் கழித்து யானை எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார். ஆனால் மிகப்பெரிய சதிவலையில் சிக்கி இருப்பது தெரிய வருகிறது. நாயகன் மதிக்கு அவரது யானை கிடைத்ததா? யானை எப்படி காணாமல் போனது? தற்போது சிக்கியிருக்கும் சிக்கல் என்ன? அதில் இருந்து யானையை நாயகன் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகன் மதி. முதல் படம் என்றாலும் குறை சொல்ல முடியாத அளவு ஒரு நல்ல நடிப்பையே தந்திருக்கிறார். தவிப்பை, ஏமாற்றத்தை, அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் நன்றாகவே நடித்திருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் ஜொலிக்க வாய்ப்பு அதிகம். நிச்சயம் நல்ல நடிகராக வலம் வருவார் என நம்பலாம்.
நாயகியாக ஷ்ரிதா ராவ், வழக்கமான நாயகி போல இல்லாமல் ஒரு சில காட்சிகளில் வந்து நாயகனுக்கு உதவி செய்து விட்டுப் போகிறார். ஒரு புத்திசாலி வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் மிரட்டலான நடிப்பு. நாயகனின் நண்பர் காலீஸ் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரூஸ் காமெடியில் ஸ்கோர் செய்ய முயற்சித்திருக்கிறார். ஆகாஷ், ஹரிஷ் பெராடி, சூசன் ஜார்ஜ் என மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
கும்கி படத்தில் இசை தான் மிகப் பிரதானம். ஆனால் இந்த படத்தில் நிவாஸ் கே.பிரசன்னா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓகே ரகம். முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் கொஞ்சம் குறைவு தான். எம்.சுகுமாரின் ஒளிப்பதிவில் ஆரம்பத்தில் வரும் மலை, அருவி, காடு என அத்தனையும் பிரமிப்பை தருகிறது. அதன் பிறகு வழக்கமான ஒளிப்பதிவு அனுபவத்தையே தருகிறது.
இயக்குநர் பிரபு சாலமன் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமான கும்கி படத்தின் பார்ட் 2 படத்தை எடுக்க துணிந்த அவரின் துணிச்சலை பாராட்டியே தீர வேண்டும். முதல் பாகத்தைப் போலவே நாயகனுக்கும், யானைக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பை இந்த படத்திலும் கொண்டு வந்து நெகிழ வைக்கிறார். இந்த யானை கதையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த அரசியலை நுழைத்த விதமும், அதை காட்டிய விதமும் நன்றாகவே இருந்தது. முதல் பாதியில் குட்டி யானை, சிறுவன் இடையேயான காட்சிகள் மிக அருமை. ஆனாலும் மையக் கதைக்கு செல்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் முதல் பாகத்தை ஒப்பிடாமல், தனியாக பார்த்தால் நிச்சயம் குழந்தைகளோடு சென்று பார்த்து ரசிக்கலாம்.

