லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார் லெஜண்ட் சரவணன். பிரமாண்ட உருவாக்கம், சூப்பர் ஹிட் பாடல்கள், நல்ல நடிகர்கள் பங்களிப்பு என இருந்தாலும் சில காரணங்களால் சறுக்கியது. ஆனாலும் அடுத்த கதை கேட்டு உறுதியோடு நின்று சரவணன் நடித்திருக்கும் இரண்டாவது படம் தான் லீடர். துரை செந்தில்குமார் இயக்கத்தில் பக்க கமெர்சியல் படமாக உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தூத்துக்குடி துறைமுகத்திற்கு சட்டத்திற்கு புறம்பான ஒரு கண்டெய்னரை அனுப்பி வைக்கிறார் வில்லன் சந்தோஷ் பிரதாப். அந்த துறைமுகத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாகுபலி பிரபாகர் போலீஸ், கஸ்டம்ஸ் என யாருமே அதை நெருங்க முடியாதவாறு பார்த்துக் கொள்கிறார். அந்த ஊரில் ஒரு மெக்கானிக் வேலை செய்து தன் மகளோடு வாழ்ந்து வரும் லெஜண்ட், தாய் இல்லா தன் மகள் மீது உயிராக இருக்கிறார். தன் மகளுக்கு பிரச்சினை என்றால் அவளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்பவர். மறுபுறம் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரியா லெஜண்ட் சரவணனை பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் அந்த கண்டெயினரை வெளியில் கொண்டு வருகிறார். அந்த கண்டெயினர் காணாமல் போனதால் வெளிநாட்டில் இருந்து வில்லன் சந்தோஷ் பிரதாப் தூத்துக்குடி கிளம்புகிறார். வில்லன் கும்பலுக்கும் எதிரியாகும் சரவணன் பின்னணியை விசாரிக்கிறார் ஆண்டிரியா மற்றும் போலீஸ் அதிகாரி ஷாம். உண்மையில் லெஜண்ட் சரவணன் யார்? அந்த கண்டெயினரில் என்ன இருந்தது? வில்லனின் திட்டம் என்ன? என்பது போல பல விஷயங்களை பரபரவென சுவாரஸ்யமாக சொல்வதே மீதிக்கதை.
நாயகன் லெஜண்ட் சரவணன். முதல் படத்தில் என்ன எல்லாம் கருத்துக்கள் வந்ததோ அதை எல்லாம் மாற்றிக் கொண்டு, அவரது நடிப்பிலும் மெறுகேறி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அலட்டல் இல்லாமல் அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை செவ்வனே செய்திருக்கிறார். நிச்சயம் படம் பார்க்கும் ரசிகர்கள் லெஜண்டை பாராட்டுவார்கள் என உறுதியாக சொல்லலாம். குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் எமோஷன் காட்சியிலும் நம்மை நெகிழ வைக்கிறார்.
ஆண்ட்ரியா மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றம் மற்றும் புத்திசாலித்தனத்தால் ரசிக்க வைக்கிறார். நாயகி பாயல் ராஜ்புத். இவருக்கும் மிக முக்கியமான கதாபாத்திரம். சரவணன் உடனான காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என எல்லாவிதமான நடிப்பையும் தந்திருக்கிறார்.
ஷாம் ஒரு காவல்துறை அதிகாரியாக அசத்துகிறார். மிக முக்கியமான ஒரு காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். வில்லன் சந்தோஷ் பிரதாப், உண்மையிலேயே அவர் கதாபாத்திரம் செம்ம சர்ப்ரைஸ். தியேட்டரில் முக்கியமான இடங்களில் எல்லாம் அட என நம்மை ஆச்சர்யப்படுத்தும் ஒரு கதாபாத்திரம். வில்லத்தனத்திலும், ஆக்ஷனிலும் மிரட்டுகிறார். பாகுபலி பிரபாகர், விடிவி கணேஷ், அம்ரிதா ஐயர், அறந்தாங்கி நிஷா, மரியம் ஜார்ஜ் என இன்னும் பல நடிகர்கள். எல்லோருமே அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் கதையுடன் பார்க்கும்போது ரசிக்க வைக்கிறது. ஆனாலும் பின்னணி இசையில் மனிதர் மிரட்டி எடுத்திருக்கிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவில் படத்தை மிக பிரமாண்டமாக காட்டியிருக்கிறார். தூத்துக்குடி, வட இந்தியா, வெளிநாடுகள் என எல்லா விதமான இடங்களையும் மிக நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார். ரயிலில்வரும் சண்டைக்காட்சியை வடிவமைத்த விதமும், படம் பிடித்த விதமும் சிறப்பு.
இயக்குனர் துரை செந்தில் குமார். நல்ல மாஸ் ஆக்ஷன் படங்களை கொடுத்து ரசிக்க வைத்தவர். சூரியின் பரிமாணத்தையே கருடன் மூலம் மாற்றியவர், இந்த படத்தில் லெஜண்ட் சரவணனையும் மிக சிறப்பாக கையாண்டு வேறு ஒருவராக மாற்றி தந்திருக்கிறார். கதையை பிரதானமாக எடுத்துக் கொண்டு வலுவான திரைக்கதையோடு, நல்ல நல்ல மாஸ் காட்சிகளையும் உருவாக்கி தியேட்டரில் நம்மை கட்டிப் போடுகிறார். கொஞ்சம் கூட போரடிக்காத வகையில் மிக அழகாக திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார், நடிகர்கள் தேர்விலும், உருவாக்கத்திலும் படத்தை தூக்கி நிறுத்துகிறார். எமோஷன், ஆக்ஷன், காதல் என அத்தனை அம்சங்களையும் கலந்த ஒரு பக்கா கமெர்சியல் பேக்கேஜாக தந்து லெஜண்ட் சரவணனுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படத்தையும், ரசிகர்களுக்கு ஒரு மெகா விருந்தையும் படைத்திருக்கிறார் துரை செந்தில்குமார். நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய கமெர்சியல் படம் இந்த லீடர்.

