தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒரு முத்திரையை பதித்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் வாழை திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து இயக்கியிருக்கும் படம் “பைசன் காளமாடன்”. கபடி பின்னணியில் தென் மாவட்டத்தின் சமூக சூழலை பிணைத்து உருவாகிருக்கும் இந்த படத்தில் அமீர், லால், பசுபதி ஆகிய மூவரும் மிக மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாரியின் முந்தைய படங்களை போலவே இந்த படமும் அழுத்தமான அரசியலை பேசியதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வனத்தி என்ற கிராமத்தில் வாழும் துருவ் விக்ரமுக்கு கபடி வீரனாக வேண்டும் என்பது ஆசை, கனவு, லட்சியம். ஆனால் அவரது அப்பா பசுபதி மகனை கபடிக் கனவை கைவிட சொல்லி சத்தியம் வாங்கிக் கொள்கிறார். கபடி வீரனானால் அந்த ஊரில் சமூக சூழலில் அவன் வாழ்க்கையே வீணாகி விடும் என அஞ்சுகிறார். இரு கட்டத்தில் துருவின் பள்ளி ஆசிரியர் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி, துருவை கபடி ஆட விடுமாறு கேட்கிறார். இதற்கிடையில் தென் மாவட்டத்தில் இரு பெரும் சமூகங்களின் முக்கிய புள்ளிகளான அமீர் மற்றும் லால் ஆகிய இருவரது கோஷ்டி மோதல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அந்த இருவரின் மோதலில் நாயகன் துருவ் எப்படி உள்ளே வந்தார்? அந்த ஊரின் சமூக சூழலுக்கு மத்தியில் அவரின் லட்சியமான கபடி வீரர் ஆகும் கனவு என்ன ஆனது? ஆசைப்பட்டபடி இந்தியாவுக்காக கபடி ஆடினாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் துருவ் விக்ரம். அவரே சொன்னது போல இது தான் துருவ் நடிகனாக அறிமுகமாகும் முதல் படம் என்றே சொல்லலாம். கதாபாத்திரத்துக்கு தேவையான அளவான தேர்ந்தெடுத்த நடிப்பு. மனதுக்குள் அடக்கி வைத்த கோபத்தை வெளிப்படுத்தும் போதாகட்டும், சமூகத்தில் அவரின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை எண்ணி மனச்சுழலில் உழலும் போதாகட்டும், காதலை கூட சாதாரணமாக வெளிப்படுத்த முடியாத சூழலாகட்டும், தான் விரும்பி கனவு காணும் கபடிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாகட்டும், லட்சியத்தை அடைய வெறியோடு உழைக்கும் போதாகட்டும் ஒரு மிகச்சிறந்த அறிமுக படமாகவே அமைந்திருக்கிறது. பள்ளி மாணவனாக ஒரு கொலையை நேரில் பார்த்து அஞ்சி நடுங்கும் காட்சியில் அப்படி ஒரு நடிப்பு. கபடி வீரனாகவே உருவாறி இருக்கிறார். துருவ் இன்னும் மிகப்பெரிய உயரங்களை தொடுவார் என்பதற்கு இந்த பைசன் படமே சாட்சி.
அமீர், லால் இருவரும் படத்தை தாங்கும் இரு பெரும் தூண்களாக, இரு சமூகங்களின் தலைவர்களாக படம் நெடுக நம் மனதில் நிறைந்திருக்கிறார்கள். இருவருக்குள்ளும் மோதல்போக்கு இருந்தாலும் அதை எங்கு காட்டுகிறார்கள் என்பதில் தான் படமே அழுத்தமாக நிற்கிறது. கொலை செய்யப் போன இடத்திலும் பள்ளி மாணவனை விட்டுப் போகும் அமீர், எந்த ஆளா இருந்தா எனக்கென்ன, அவன் கபடி எனக்கு பிடிச்சிருக்கு என சொல்லும் லால், மணமகளுக்கு திருமணம் பிடிக்கவில்லை என தெரிந்ததும் அதை நிறுத்தி புத்தி சொல்லும் அமீர் என படம் முழுக்க அவர்களின் கதாபாத்திரங்களும் வில்லனாக இல்லாமல், நம் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களாகவே படைத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
துருவ் விக்ரமின் தந்தையாக பசுபதி. அவரின் நடிப்பு வாழ்க்கையில் இன்னொரு மகுடமாக மாறியிருக்கிறது. மகனுக்காக எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் துணை நிற்கும் அப்பாவாக நம் மனதை கொள்ளை கொள்கிறார். வயதில் மூத்தவளாக இருந்தாலும் துருவை காதலிக்கும் நாயகி அனுபமா பரமேஸ்வரன் கதாபாத்திரம் ரொம்பவே ஃப்ரெஷ். நாயகனுக்கு அக்காவாக நடிக்க ஒப்புக் கொண்டதே ரஜிஷா விஜயனின் மிகப்பெரிய துணிச்சல். அவர் கதாபாத்திரமும் நம் மனதில் அப்படியே பதிகிறது. அழகம் பெருமாள், லெனின் பாரதி மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள், உண்மையான கபடி வீரர்கள் என எல்லோருமே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசை படத்தின் ஆன்மாவாக ஒலிக்கிறது. சந்தோஷ் நாராயணன், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருடன் வேலை செய்த மாரி செல்வராஜ் நிவாஸை தேர்ந்தெடுத்ததும் சரியான தேர்வே என நம்மை ஒப்புக் கொள்ள வைக்கிறது இசை. தீக்கொளுத்தி, ரெக்க ரெக்க என படத்தில் வரும் ஐந்து பாடல்களுமே தியேட்டரை விட்டு வெளியில் வந்த பிறகும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பின்னணி இசை படத்தை பல படிகள் தூக்கி நிறுத்துகிறது.
எழில் அரசு ஒளிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலம். கபடி காட்சிகளை படமாக்கிய விதம் கபடியை நேரில் கண்டு ரசித்த உணர்வை தருகிறது. அந்த கிராமத்தின் அழகை, விவசாய பூமியை காட்டியது, இரவில் பதைபதைக்க வைக்கும் காட்சிகளை படமாக்கியது என படத்துக்கான டெம்போவை மிக அழகாக காட்சிகளின் மூலம் தந்திருக்கிறார்.
மாரி செல்வராஜ். ஒவ்வொரு படத்திலும் தன் முத்திரையை பதிக்கத் தவறியதே இல்லை. அதே நேரம் எடுத்துக் கொள்ளும் கதைக்களத்தை பார்க்க தூண்டும் வித்தையை கற்றும் வைத்திருக்கிறார். இரு சமூக மோதல்களின் பின்னணியில் ஒரு கபடி வீரனின் வாழ்க்கையை மிக அழகாக, உணர்வுப்பூர்வமாக, ரத்தமும் சதையுமாக காட்டியிருக்கிறார். அதே நேரம் யாரையும் வில்லனாக சித்தரிக்காமல் நம்மை இப்படிப்பட்ட சூழலில் வைத்திருக்கும் ஆரம்ப புள்ளி எது என அந்தந்த கதாபாத்திரங்களையே கேள்வி கேட்கவும் வைத்து, அதனூடே இன்றும் சமூகத்தில் சாதாரணமாக நிலவும் சில வழக்கங்களை வசனங்களால் சாட்டையாஅல் அடித்தது போல பேசியிருக்கிறார். குறிப்பாக காரில் அமீர் பேசும் வசனங்கள் எல்லாமே அப்ளாஸை அள்ளுகிறது. கபடி விளையாட்டு படமாக பார்க்கையில் அங்கு நடக்கும் அரசியல், ஏற்றத் தாழ்வுகள் என அதையும் படத்தில் ஆழமாக பேசியிருக்கிறார். மொத்தத்தில் மாரி செல்வராஜ் திரை வாழ்க்கையில் இன்னுமொரு மகுடம் இந்த பைசன் காளமாடன்.

