பல தரமான வெப் சீரீஸை தமிழில் அளித்த ZEE5 ஓடிடி தளத்தின் அடுத்த தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்”. கண்ணா ரவி, சஞ்சீவ், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி நடிக்க, பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸை ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கிறார். பரபர திரில்லராக உருவாகியுள்ள இந்த சீரிஸ் அக்டோபர் 10 முதல் பிரீமியர் ஆகிறது. வேடுவன் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
இந்த தொடரின் கதைப்படி, சினிமா நடிகராக இருக்கும் கண்ணா ரவி, அவர் கேரியரில் கொஞ்சம் தடுமாற்றங்களையே சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவர் விரக்தியில் இருக்கும் அந்த நேரத்தில் “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்” என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய ஒரு கதையை கேட்கிறார். கதை ரொம்பவே பிடித்துப் போக, அதுவரை அவர் செய்யாத ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்த போலீஸ் கதையில் 4 மாதங்கள் பிச்சைக்காரனாகவே வாழ்ந்து ஒரு என்கவுண்டரை முடிக்கிறார். அதன் பின் சிவகங்கையில் பெரும் புள்ளியாக இருக்கும் சஞ்சீவை என்கவுண்டர் செய்ய சொல்லி உத்தரவு வர, அவரை அருண் என்கவுண்டர் செய்தாரா? கண்ணா ரவிக்கும், சஞ்சீவுக்கும் என்ன தொடர்பு? அந்த என்கவுண்டர்கள் அவர் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டிப் போட்டன? என்பதே மீதிக்கதை.
நாயகன் கண்ணா ரவி. சினிமா நடிகர் சூரஜாக கொஞ்சம் வெற்றி கிடைக்காமல், விமர்சனங்களை சந்திக்கும் வாழ்க்கை வாழ்வதாகட்டும், அதே அருண்மொழி என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் இருக்கும் இடத்துக்கு ஏற்ப எப்படி எல்லாம் தன் நடை உடை பாவனையை மாற்றிக் கொண்டு வாழ்கிறார் என்பதாகட்டும் கண்ணா ரவிக்கு இந்த வேடுவன் மறக்க முடியாத ஒரு பெயரை பெற்றுத் தரும். குற்ற உணர்வில், குழம்பிப் போன சூழலில் எல்லாம் அவரது தேர்ந்த நடிப்பால் கதாபாத்திரத்தை மேலும் சிறப்பாக்குகிறார். சஞ்சீவ் ஆதிநாதன் என்ற மக்கள் செல்வாக்கு பெற்ற மிக நல்ல மனிதராக நம் மனதில் பதிகிறார். மனைவி மீது வைத்திருக்கிற அன்பாகட்டும், மரியாதை ஆகட்டும், மக்கள் நல்வாழ்வுக்கு அவர் வாழ்க்கையையே அர்ப்பணித்ததாகட்டும் அந்த கதாபாத்திரம் சஞ்சீவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
வினுஷா தேவி நல்ல ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது தோற்றமும், அவர் அதை ஏற்று நடித்த விதமுமே அந்த கண்ணியமான கதாபாத்திரத்தை மேலும் உயர்த்துகிறது. லாவன்யா, ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா ரகுபதி, ஜீவா ரவி, குழந்தை நட்சத்திரங்கள் என மற்ற நடிகர்களுமே அவர்கள் பங்கை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
விபின் பாஸ்கர் இசை இந்த தொடரின் மிகப்பெரிய ஹைலைட். துரோகம், காதல், டென்ஷன், சோகம், திரில்லர் என எல்லாவிதமான எமோஷன்களுக்கும் மிக அழகான இசையை தந்துள்ளார். ஒவ்வொரு எபிசோடும் முடியும்போது போட்டிருக்கும் இசை அடுத்த எபிசோடை பார்க்கும் ஆவலை தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ஸ்ரீனிவாசன் தேவராஜ் ஒளிப்பதிவு அந்தந்த ஊர்களை மிக அழகாக, இயல்பாக, அதே சமயம் அந்த காட்சிகளின் தன்மையையும் மிக சிறப்பாக படம் பிடித்து தந்திருக்கிறது. சுராஜ் கவியின் படத்தொகுப்பும் பக்க பலமாக அமைந்துள்ளது.
இயக்குனர் பவன் வெப் சீரீஸூக்கு ஏற்ற ஒரு கதையை மிக அழகாக திரைக்கதையாக்கி ஒரு தொடராக தந்திருக்கிறார். ஒரே கதையில் இரு கதை மாந்தர்களின் உணர்வுகளையும் ஒரே நடிகர் நடிக்க, அதை மிகச்சிறப்பாக நமக்கு திரையில் தந்திருக்கிறார். என்கவுண்டர் பின்னணியில் அதில் ஈடுபடும் அதிகாரிகளின் மனநிலை என்ன? கடமை, காதல், நம்பியவர்களுக்கு செய்யும் துரோகம் என அத்தனை உணர்ச்சிகளையும் கதையில் அழகாக சொல்லியிருக்கிறார். கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும், அதற்கு அவர்கள் கொடுக்கும் பெரிய விலை என கொஞ்சம் பொழுதுபோக்கை தாண்டியும் சிந்திக்க வைக்கிறது இந்த வேடுவன். மொத்தத்தில் ZEE5-ல் வெளி வந்திருக்கும் இன்னொரு நல்ல வெப் சீரீஸ், நிச்சயம் அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு தரமான படைப்பு இந்த “வேடுவன்”.

