ரைட் – விமர்சனம்!

எளிய மக்களுக்கு இந்த சமூகத்தில் மதிப்பில்லை, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் கூட அதை அதிகார வர்க்கம் கண்டு கொள்வதில்லை. அரசும், அரசு அதிகாரிகளும் கூட அதிகாரத்துக்கு மட்டுமே சலாம் போடுகிறார்கள். அப்படி எளிய மக்களுக்கு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தில் உதவி கேட்பார்கள். அந்த காவல் நிலையத்திற்கே ஒரு பிரச்சனை என்றால் என்னவாகும்? என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் “ரைட்” (Right). நட்டி, அக்ஷ்ரா ரெட்டி, யுவினா நடிக்க சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ளார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தன் மகனை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என வருகிறார் அருண் பாண்டியன். பிரதமர் சென்னை வருகையால் அவரின் பந்தோபஸ்து பணியில் பிஸியாக இருக்கிறார் நாயகன் நட்டி. அதே நேரத்தில் அருண் பாண்டியன் புகார் கொடுக்க வந்த காவல் நிலையத்தை மர்மமான நபர் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். உள்ளிருந்து யாரும் வெளியேற முடியாது, மீறினால் ஏற்கனவே வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டுகிறார். இதனால் ஒட்டு மொத்த காவல் நிலையமே பணய கைதியாக இருக்கிறது. அந்த மர்ம நபர் யார்? எதற்காக காவல் நிலையத்தை பணய கைதியாக பிடித்து வைத்துள்ளார்? பின்னணி என்ன? நட்டி இந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தாரா? என்பதே பரபரப்பான மீதிக்கதை.

நட்டி, வழக்கம் போல தன் திரை ஆளுமையால் ஸ்கோர் செய்கிறார். பல படங்களில் அவரை போலீஸ் அதிகாரியாக பார்த்து வந்தாலும் இந்த படத்தில் இன்னொரு கோணத்தில் தெரிகிறார். முதல் பாதி முழுக்க அருண் பாண்டியன் மேல் பயணிக்கும் கதை, இரண்டாம் பாதியில் நட்டி மீது பயணிக்க துவங்குகிறது. அருண் பாண்டியன் தாயில்லா மகனுக்கு தந்தையாக, காவல் நிலையத்தில் உதவி கேட்டு நிற்கும் கதாபாத்திரத்தில் பளிச்சிடுகிறார். அக்ஷரா ரெட்டியும் எஸ்.ஐ.யாக இருக்கிறார். ஆனால் போலீஸ் உடையில் இல்லாமல் புடவையில் படம் முழுக்க வருகிறார். அதற்கான காரணமும் படத்தில் தெளிவாக இருக்கிறது.

நீதிபதியாக வரும் வினோதினி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து ஆளுமை செலுத்தும் சிறந்த நடிப்பை தந்துள்ளார். வீரம் படத்தில் குழந்தையாக வலம் வந்த யுவினா இந்த படத்தில் கதையில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில், முதல் படத்திலேயே முத்திரை பதிக்கிறார். மூணாறு ரமேஷ், வழக்கு எண் முத்துராமன், தங்கதுரை, உதயபானு மகேஸ்வரன், ரோஷன் உதயகுமார், ஆதித்யா ஷிவக் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

குணா சுப்ரமணியன் இசையில் பாடல்கள் ஓகே ரகம், பின்னணி இசையிலும் ஓரளவுக்கு கதைக்கு உதவி புரிந்திருக்கிறார். பத்மேஷ் குறிப்பிட்ட பட்ஜெட்டில் குறைந்த நாட்களில் உருவான படம் என்பதே தெரியாத அளவுக்கு முடிந்தவரை மிக அழகாக ஒளிப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு படத்தை மேலும் விறுவிறுப்பாக்குகிறது.

அறிமுக இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமார் முதல் படத்திலேயே நல்ல ஒரு பரபரப்பான திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதையில் அசத்தலான கமர்ஷியல் அம்சங்களுடன் இரண்டு மணி நேரம் நம்மை சீட்டில் உட்கார வைக்கிறார். குறைவான லொகேஷன்கள் என்றாலும் அதை யோசிக்க விடாமல் நிறைவான அனுபவத்தை தந்திருக்கிறார். ஒரே இடத்தை பார்க்கும் அலுப்பை தராத வண்ணம் ஒளிப்பதிவாளருடன் சேர்ந்து நல்ல ஒரு மாயஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார். இந்த திரில்லர் விஷயங்களுடன் படத்தில் நல்ல ஒரு எமோஷனல் விஷயத்தையும் மிக அழகாக கோர்த்து நம்மை உருக வைக்கிறார். மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு படத்தை தந்து வெற்றி பெற்றிருக்கிறார் சுப்ரமணியன் ரமேஷ்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *