படையாண்ட மாவீரா – விமர்சனம்!

மாவீரன் குரு என வட மாவட்ட மக்களுக்கு பெயர் சொன்னாலே தெரியும் அளவுக்கு வாழ்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை தழுவி ஏற்கனவே திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த நேரத்தில் வ.கௌதமன் இயக்கத்தில் ‘படையாண்ட மாவீரா’ என்ற பெயரில் காடுவெட்டி குருவின் பயோபிக் திரைப்படம் உருவாகியிருக்கிறது. வ.கௌதமன் காடுவெட்டி குருவாக நடிக்க சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பின்னணி இசை சாம் சிஎஸ். காடுவெட்டி குரு இந்த சமூகத்துக்காக எப்படி எல்லாம் பாடுபட்டார்? மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார் என்பதை ஒரு பயோபிக் படமாக தந்திருக்கிறார் கௌதமன். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஜெயங்கொண்டத்தில் வளரும் காடுவெட்டி குரு இளம் வயதிலேயே அவரின் தந்தை ஜெயராமனை இழக்கிறார். ராணுவத்தில் பணிபுரிந்து விட்டு பின் சொந்த ஊருக்கு வந்து சொந்த பணத்தில் சேவை செய்யும் அவரை கொன்று விடுகிறார்கள். தந்தை இந்த ஊர் மக்களுக்காகவே சேவை செய்வது அரும்பணி என சொல்லிக் கொடுத்ததை தான் வளர்ந்த பின்பும் பின்பற்றுகிறார் காடுவெட்டி குரு. அந்த ஊரில் பெண்களை சீரழிக்கும் கொடியவர்களை, எளிய மக்களை சூறையாடும் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் ஆகியவற்றை எதிர்த்து மக்களுக்காக களத்தில் நின்று அவர்களின் வாழ்வுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார். பொது வாழ்வில் இருக்கும் அவரை அரசியல் அழைக்க அங்கும் நுழைந்து எம்எல்ஏ ஆகி சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேசுகிறார். மக்களுக்காகவே வாழ்ந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டும் உயிரையும் விடுகிறார். சுயநலம் இன்றி மக்களுக்காகவே மறைந்த ஒரு தலைவன் காடுவெட்டி குரு என்பதை, மொத்தத்தையும் திரைக்கதையாக்கி திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கௌதமன்.

காடுவெட்டி குருவாக நடித்துள்ள கௌதமன் நல்ல தமிழ் முகமான, தமிழ் மண்ணின் மைந்தனாக நம் முன் நிற்கிறார். குருவாக அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துகிறார். விஜயகாந்த், சரவணன் ஆகியோரை தொடர்ந்து அந்த வழியில் கௌதமனும் பார்ப்பதற்கு கலையாக இருக்கிறார். வசன உச்சரிப்பிலும், புன் சிரிப்பிலும், ஆக்ஷனிலும், ஆக்ரோஷத்திலும் கதாபாத்திரமாக உருவாறி நிற்கிறார். சமுத்திரகனி சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் காடுவெட்டி குருவின் தந்தை ஜெயராமனாக வந்து மனதில் பதிகிறார். சரண்யா பொன்வண்ணன் அவரது தாயாக வழக்கம் போல ஸ்கோர் செய்கிறார். பூஜிதா பொன்னடா நாயகியாக சில காட்சிகளே வந்தாலும் நன்றாகவே இருக்கிறார்.

இவர்களை தவிர ஏகப்பட்ட பிரபலமான நடிகர்கள் திரையை நிறைக்கின்றனர்.  இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா, அழகப்பன் என அனைத்து நடிகர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு வடமாவட்டங்களை மிக யதார்த்தமாக படம் பிடித்திருக்கிறது. முந்திரி காடுகளையும் டாப் ஆங்கிள் காட்சிகளில் சிறப்பாக காட்டியிருக்கிறார். ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் பாடல்கள் எல்லாமே கேட்கும் ரகம். சில பாடல்கள் வட மாவட்டங்களில் காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களுக்கு ரிங்டோனாக மாறும் என்பதிலும் ஐயமில்லை. பின்னணி இசையில் சாம் சி.எஸ். தெறிக்க விட்டிருக்கிறார்.

வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதை என எடுக்க ஆரம்பித்தபோதே ஆங்காங்கே சில சலசலப்புகள் எழுந்தன. ஆனால் அதையும் மீறி தான் எடுத்துக் கொண்ட கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஒரு படமாக தந்திருக்கிறார் கௌதமன். காடுவெட்டி குரு ஒரு சாதியின் அடையாளம் இல்லை, அவர் அனைத்து மக்களுக்கும் சேர்த்து தான் போராடினார் என சொல்லியிருக்கிறார். அத்துடன் காசு பணம் சேர்க்கும் நோக்கம் இன்றி அரசியலிலும், சமூக சேவையிலும் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார் எனவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். காடுவெட்டி குருவின் வாழ்க்கையை பற்றி தெரியாமல் வெளியில் பரவும் செய்திகளை மட்டுமே வைத்து அவர் மீது ஒரு பிம்பம் நம் மனதில் பதிந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு அது அப்படியே மாற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனாலும் அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என பார்வையாளனுக்கு ஒரு ஆர்வத்தை தூண்டியிருப்பதே இயக்குனர் கௌதமனுக்கு கிடைத்த வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *