நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் வழங்க, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், வின்சு சாம், ரித்விகா, ஷபீர் மற்றும் பலர் நடித்துள்ள படம் “தண்டகாரண்யம்”. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட ஒரு அழுத்தமான கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா மாநில எல்லைப்பகுதிகளை உள்ளடக்கிய காட்டுப் பகுதிகளை தண்டகாரண்யம் என்று அழைக்கின்றனர். இப்பகுதிகளில் நக்சலைட்ஸ் நடமாட்டம் அதிகம் உண்டு. வெளி உலகுக்கு தீவிரவாதிகள் போல சித்தரிக்கப்படும் அந்த குழு, உண்மையில் தங்கள் உரிமைக்காக போராட்டத்தை கையில் எடுக்கும் ஒரு இனக்குழு. அந்த தண்டகாரண்யம் பகுதிக்கு ISGS பயிற்சிக்கு வருகிறார் நாயகன் கலையரசன். கிருஷ்ணகிரி வனப்பகுதி கிராமத்தை சேர்ந்த பழங்குடி மனிதரான தினேஷின் தம்பி தான் கலையரசன். வனத்துறையில் தற்காலிக காவலராக பணியாற்றும் அவர் வேலையை பெர்மனெண்ட் ஆக்கி விட கடுமையாக உழைக்கிறார். 7 ஆண்டு உழைப்பு அவரின் உயர் அதிகாரியால் பறிபோக, காதலியை கரம் பிடிப்பதிலும் அவருக்கு பிரச்சினை. அந்த நேரத்தில் ISGS பற்றி கேள்விப்பட்டு நிலத்தை விற்று அந்த சிறப்பு பாதுகாப்பு படையில் பணிக்கு சேர, பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் சொந்த ஊரில் அனுபவித்ததை விட அதிக பிரச்சினைகளை அங்கு அனுபவிக்க நேர்கிறது. அங்கு நடக்கும் பிரச்சினைகள் என்ன, அதன் பின்னணியில் உள்ள அரசியல், மோசடி ஆகியவைகளை பேசும் படமே இந்த “தண்டகாரண்யம்”.
பழங்குடியின இளைஞராக தங்கள் இன மக்களுக்காக நிற்கும், அவர்களின் தேவைகளை, உரிமைகளை வாங்கிக் கொடுக்கும் இளைஞராக தினேஷ் வழக்கம் போல நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். ஒரு புள்ளியில் இருந்து வேறொரு மனிதராக மாறும்போது அப்படியே அதை பிரதிபலிக்கிறார்.
அரசு வேலைக்காக பல அவமானங்களை, வலியை பொறுத்துக் கொண்டு வாழும் இளைஞராக கலையரசன் நம்மைப் போல எளிய மனிதர்களை கண் முன் நிறுத்துகிறார். காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். அந்த கேம்ப்பில் குழப்பத்திலேயே வாழும் காட்சிகளிலும், தெளிவு கிடைத்த போதும் அதை திட்டமிடுகிற இளைஞராக மனதில் நிற்கிறார். அவரின் காதலியாக வரும் வின்சு சாம் அழகு, அதே சமயம் அந்த கிராமத்துப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். ரித்விகா தினேஷின் மனைவியாக கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக தினேஷூக்கு சாப்பாடு கொடுத்து விட்டு செல்லும் காட்சியில் அவரது எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்திய விதம் அழுத்தம்.
கலையரசன் உடன் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் ஷபீர் கல்லரக்கல் ஒரு கட்டத்தில் நண்பனாக மாறும் காட்சிகள் எல்லாம் நெகிழ்ச்சி. பாலசரவணன், அருள்தாஸ், முத்துகுமார், யுவன் மயில்சாமி என மற்ற நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் இசை படத்திற்கு பலம். பாடல்கள் நிச்சயம் படம் பார்ப்பவர்களை உலுக்கி எடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. பின்னணி இசையிலும் தனி உலகத்துக்கு நம்மை கூட்டிச் செல்கிறார். பிரதீப் கலைராஜா ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம். அந்த காட்டுப் பகுதிகளில் மிக அழகாக காட்டியதோடு மிக நெருக்கமாக உண்மைக்கு அருகில் வைத்து காட்டியிருக்கிறார்.
குண்டு படத்துக்குப் பின் மீண்டும் ஒரு அழுத்தமான கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. ஒரு சில இடங்களில் விடுதலை படத்தை ஞாபகப்படுத்தினாலும் இதுவரை சொல்லப்படாத ஒரு கதையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சொந்த மண்ணில் வஞ்சிக்கப்படும் எளிய மக்கள், வேறு மண்ணிலும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் இந்த படத்தினூடே தெரிந்து கொள்ள முடிகிறது. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வேறு வேறு அல்ல, இருவருமே போலி முகமூடிகளை நேரத்துக்கு தக்க அணிபவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. வட இந்தியாவில் நடந்த ஒரு மோசடியை உண்மைச்சம்பவத்தை துணிச்சலோடு சொல்லி கவனம் ஈர்த்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.

