‘ஹரிஹர வீரமல்லு’ பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட படம், பின்னர் பவன் கல்யாண் அரசியலில் தீவிரமாகி துணை முதல்வர் ஆகி விட, தற்போது ஜோதி கிருஷ்ணா இயக்கி முடிக்க சில ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டு ஒரு வழியாக இன்று திரைக்கு வந்திருக்கிறது. 16ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் ஆண்டு வந்த காலத்தில் நடக்கும் ஒரு கதையாக உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஒரு புயல் மழைக் காலத்தில் மக்கள் ஆற்றைக் கடக்கும்போது ஒரு தாய் தன் குழந்தையை ஆற்றில் தவற விடுகிறார். அந்த குழந்தையை மீட்டெடுத்து ஹரிஹரவீரமல்லு என பெயர் சூட்டி வளர்க்கிறார் சத்யராஜ். பலம் வாய்ந்த, சகல கலைகளையும் கற்ற ஒரு போர் வீரனாக வளர்கிறார் ஹரிஹர வீரமல்லு (பவன் கல்யாண்). ஆனால் மக்களுக்கு நன்மை செய்ய திருட்டுகளில் ஈடுபடுகிறார். குறிப்பாக நம் நாட்டின் பொக்கிஷங்களான வைரங்களை அதிகாரத்தை பயன்படுத்தி கையகப்படுத்தும் பிரிட்டிஷாரிடம் இருந்தும், மன்னர்களிடம் இருந்தும் திருடுகிறார்.
மற்றொருபுறம் முகலாய மன்னர் ஔரங்கசீப் (பாபி தியோல்) மதமாற்றத்திற்கு மக்களை கட்டாயப்படுத்துகிறார். மதம் மாற மறுப்பவர்கள் மீது ஜிஸ்யா வரி விதிக்கிறார். இந்த நிலையில் ஜமீன்தார் ஒருவர் ஒரு வைர திருட்டு வேலையை வீரமல்லுவுக்கு கொடுக்க, அங்கு சென்ற இடத்தில் நாயகி பஞ்சமி (நிதி அகர்வால்) மீது காதல் வயப்படுகிறார் வீரமல்லு. அப்போது வைரத்தை திருடும்போது வீரமல்லுவிடம் இருந்து அந்த வைரத்தை திருடிச் செல்கிறார் பஞ்சமி. வீரமல்லு குதுப்ஷாவிடம் கையும் களவுமாக பிடிபடுகிறார். இவரை தண்டிக்காமல் டெல்லியில் உள்ள கோஹினூர் வைரத்தை எனக்கு திருடிவர வேண்டும் என ஒரு வேலையை தந்து தன் ஆட்களையும் அவருடன் அனுப்பி வைக்கிறார். டெல்லி நோக்கிச் செல்லும் வீரமல்லு என்னென்ன சவால்களை சந்தித்தார்? அந்த கோஹினூர் வைரத்தை திருடினாரா? இந்துக்களை மதம் மாற்றும் ஔரங்கசீப்பை சந்தித்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் பவன் கல்யாண். வழக்கம் போல அவரது ஸ்டைல், ஆட்டிட்யூட், பாடி லாங்குவேஜ் என அசத்துகிறார். சண்டைக்காட்சிகளிலும் அவர் பயற்சி எடுத்து சண்டை போட்டது நன்றாகவே தெரிகிறது. அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸே படத்தில் நம்மை உட்கார வைக்கிறது. பவன் கல்யாண் எனர்ஜி நமக்கும் தொற்றிக் கொள்கிறது.
நாயகியாக நிதி அகர்வால். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கான வலுவான கதாபாத்திரம் இல்லை. மற்றுமொரு துணைக் கதாபாத்திரமாகவே வந்து போகிறார். பாடல் காட்சிகளில் அசத்தல். ஔரங்கசீப்பாக பாபி தியோல், வில்லனாக தனது அழுத்தமான நடிப்பை தந்துள்ளார். சத்யராஜ், சுனில், நாசர், சச்சின் கடேகர், சுப்பாராஜூ, தணிகலபரணி, கோட்டா சீனிவாசராவ், ஈஸ்வரி ராவ், அனசுயா பரத்வாஜ், புஜிதா பொன்னடா, வெண்ணிலா கிஷோர், ரகு பாபு என திரும்பும் திசையெல்லாம் நன்கு பரிச்சயமான நடிகர்கள். ஆனால் அவர்கள் சாதாரணமாக வந்து செல்கிறார்கள், அந்தக் காட்சிகள் எதுவும் மனதில் பதியவில்லை. முழுக்க பவன் கல்யாண் ஷோவாகவே முடிகிறது.
பாகுபலி கீரவாணியின் பின்னணி இசை முடிந்தவரை படத்தை தூக்கி நிறுத்துகிறது. குறிப்பாக சௌக்கிதானா காட்சியில் அந்த இசைக் கருவிகள் ஒலிக்கும் காட்சியிலும், இடைவேளை காட்சியிலும் மிரட்டுகிறார். ஒளிப்பதிவு, தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு என அனைத்தும் இது ஒரு வரலாற்று காலகட்ட படம் என்பதை நியாப்படுத்துகிறது. ஞானசேகர், மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவும், தோட்டா தரணியின் அரங்க அமைப்புகளும் பீரியட் படம் என்பதை திரையில் காட்ட பெரிதும் உதவி புரிந்திருக்கின்றன.
பீரியட் படங்களுக்கு மிக முக்கியமான விஷயம் செட் மற்றும் கிராஃபிக்ஸ். ஆனால் இந்த படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை. காரணம் பட்ஜெட்டா? அல்லது நேரம் போதாமையா? என்பது தெரியவில்லை. ஆனால் பல காட்சிகளில் நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் அதை விஷூவலாக காட்டிய விதம் கொஞ்சம் மைனஸ்.
கிருஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கம். ஆனால் இந்த படத்தில் யாருடைய பங்கு எவ்வளவு இருந்தது என்பது தெரியவில்லை. முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைப்படம், இரண்டாவது பாதியில் மிக மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் முழுக்க அட்வெஞ்சர் பயணம், அதை இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருந்தால் ரசிக்கும்படி இருந்திருக்கும். கிளைமாக்ஸ் காட்சியையும் அந்த சௌக்கிதானா காட்சியுடன் முடித்திருந்தால் இரண்டாம் பாகத்துக்கு இன்னும் பொருத்தமாக, எதிர்பார்ப்பை அதிகரிக்க உதவியிருக்கும். படம் முழுக்க பல சண்டைக் காட்சிகள், ஹீரோ எப்போது சண்டை செய்ய வேண்டும் என்பதற்கான பில்டப் காட்சிகளும் நன்றாகவே அமைந்தது. இரண்டாவது பாதியில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

