தமிழில் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள இணைய தொடர்களை தருவதில் முன்னிலையில் உள்ளது ZEE5. அவர்களின் அடுத்த தொடர் “சட்டமும் நீதியும்”. கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த சீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வாரம் வெளியாகும் இந்த தொடர் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
கதைப்படி, கோர்ட் வாசலில் நோட்டரி பப்ளிக்காக இருக்கும் சரவணனை அவர் குடும்பத்தினர் கூட பெரிதாக மதிப்பதில்லை. மகனுக்கு அப்பா சொன்னபடி வழக்கறிஞருக்கு படிக்கக் கூட விரும்பவில்லை. அவரிடம் ஜூனியராக சேர ஆசைப்பட்டு வருகிறார் நம்ரிதா. அந்த நேரத்தில் தன் மகளை கடத்தி விட்டார்கள், கண்டுபிடித்து தாருங்கள் என கோரிகை வைத்து, தனக்கு நீதி கிடைக்காததால் கோர்ட் வாசலில் தீக்குளித்து உயிரிழக்கிறார். அதை வைத்து பொதுநல வழக்கு போடுகிறார் சரவணன். அந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் விஷயம் என்ன? தீக்குளித்து இறந்தவரின் பின்னனி என்ன? அதன் பிறகு நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்களும், திடுக்கிடும் சம்பவங்களுமே 7 எபிசோடுகளாக சொல்லப்பட்டிருக்கும் மீதிக்கதை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்த சீரிஸ் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். யாரும் பெரிதும் மதிக்காத போதிலும் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கும்போதும் சரி, வழக்கில் வாதாடி நீதியை பெற்றுத் தர போராடும் போதும் சரி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
சரவணனிடம் ஜூனியராக சேர்ந்து அவருக்கு பக்க பலமாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நல்ல உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த ஒரு கதாபாத்திரத்தில் நம்ரிதா MV ஸ்கோர் செய்கிறார். அவரின் குரல் கணீர் என ஒலிக்கிறது. நடிப்பிலும் மற்ற நடிகர்களுக்கு இணையாக நடித்து தன் இருப்பை பதிவு செய்கிறார். அரோல் ஷங்கர் சரவணன் எதிர்தரப்பில் பிபியாக அவரின் மிரட்டலான நடிப்பால் நம் கவனத்தை பெறுகிறார். சண்முகம், திருசெல்வம், இனியா ராம், விஜயஸ்ரீ என மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
பாவனா கோவர்தன் அரங்க அமைப்பில் அது உண்மையாக கோர்ட்டில் எடுக்கப்பட்டதோ என நம்மை நினைக்க வைக்கிறது. ராவணன் படத்தொகுப்பு 7 எபிசோடுகளையும் கச்சிதமாக செதுக்கி இருக்கிறது. கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு தொடருக்கு தேவையான ஒளிப்பதிவை எந்த குறையும் இல்லாமல் சிறப்பாகவே வழங்கியிருக்கிறது. அதுவும் 13 நாட்களில் எடுக்கப்பட்ட தொடர் என்பதை நம்பவே முடியவில்லை. விபின் பாஸ்கர் இசை திரில்லர் அம்சத்தையும் அழகாக நமக்கு உணர வைக்கிறது. கதையின் மையமான அந்த எமோஷனையும் அழகாக நமக்குள் கடத்துகிறது.
சூர்யா பிரதாப் எழுதிய இந்த கதையை மிக நன்றாகவே இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாலாஜி செல்வராஜ். கதாபாத்திர தேர்வு, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அத்தனையும் இந்த தொடருக்கு பலமாக அமைந்துள்ளது. 7 எபிசோடுகள் ஓடினாலும் மொத்த நேரம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தான். இதை தொடராக எடுக்க வேண்டிய அவசியம் என்ன, திரைப்படமாகவே எடுத்திருக்கலாமே என எண்ண வைக்கிறது. ஆனாலும் வார இறுதியில் binge watch செய்ய ஏற்ற ஒரு தொடராக அமைந்திருக்கிறது. நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

