சமீப காலங்களாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோ படங்கள், ஆக்ஷன் படங்கள், பிரமாண்ட படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட சின்ன பட்ஜெட்டில் உருவாகி மனதைத் தொடும் படங்கள் வெளியாகி பெரிய படங்களுக்கு இணையான வணிக வெற்றியையும், சிறந்த படம் என்ற பெயரையும் பெற்று விடுகின்றன. அதனாலேயே கதையை மையமாக வைத்து நிறைய ஃபீல் குட் படங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றது. அப்படி இந்த வாரம் வெளியாகியுள்ள படம் தான் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள ‘லவ் மேரேஜ்’. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 33 வயதாகும் ஹீரோ விக்ரம் பிரபுவுக்கு இன்னமும் திருமணம் கை கூடவில்லை. சொந்தத்தில், சொந்த ஊரான மதுரையில் கூட பெண் கிடைக்காததால் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நாயகி சுஷ்மிதாவை பேசி நிச்சயிக்க உறவினர்களுடன் பஸ்ஸில் கிளம்புகிறார்கள். போன இடத்தில் பஸ் ரிப்பேர் ஆக பெண் வீட்டிலேயே ஓரிரு நாட்கள் தங்க வேண்டிய சூழல். பின் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாக கொரோனா லாக்டவுன் போடப்படுகிறது. காலவரையரையின்றி பெண் வீட்டிலேயே தங்க நேரிடுகிறது. லாக் டவுனிலேயே திருமணத்தையும் முடிக்க முடிவெடுக்கிறார்கள். அந்த நேரத்தில் நாயகி தான் காதலித்த பையனுக்காக வீட்டை விட்டு ஓடுகிறார். இடிந்து போன நாயகன் விக்ரம் பிரபுவும், அவரது குடும்பத்தினரும் என்ன முடிவெடுத்தார்கள்? ஓடிப்போன நாயகி திரும்ப வந்தாரா? விக்ரம் பிரபு நாயகியை கரம் பிடித்தாரா? அல்லது வேறு பெண்ணை மணந்தாரா? என்பதை காமெடி, எமோஷன் கலந்து சொல்லியிருக்கும் படம் இந்த லவ் மேரேஜ்.
நாயகனாக விக்ரம் பிரபு. தன் கேரியரின் ஆரம்பத்திலேயே ஆக்ஷன் படங்கள் வரை எல்லாம் நடித்து முடித்து விட்ட விக்ரம் பிரபு இந்த படத்தில் 30 வயதை தாண்டியும் திருமணம் ஆகாத இளைஞன் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். மிக இயல்பான, யதார்த்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார். நாயகியாக சுஷ்மிதா பட் எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாமல் ஒரே மாதிரி படம் முழுக்க இருக்கும் ஒரு கதாபாத்திரம். அவரது தங்கையாக வரும் மீனாக்ஷி தினேஷூக்கு நடிக்க ஸ்கோப் உள்ள கதாபாத்திரம். யாரடி நீ மோகினி சரண்யாவை நினைவுபடுத்தும் துடுக்கான ஒரு கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
மிக முக்கியமான கெஸ்ட் ரோலில் சத்யராஜ் ஒரு காட்சியில் வந்தால் கைதட்டல் பெறுகிறார். அருள் தாஸ், கஜராஜ், ரமேஷ் திலக், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு என மற்ர நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை ஓரளவு செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை மிகப்பெரிய பலம். மிஷ்கின் பாடிய எடுடா பாட்டில பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் தன் மாயாஜாலத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். மதன் ஒளிப்பதிவு கோபிசெட்டிப்பாளையத்தை மிக அழகாக காட்டியுள்ளது.
இயக்குனர் சண்முகபிரியன். இன்றைய இளைஞர்கள் உட்பட எல்லோரையும் ஒன்ற வைக்கும் ஒரு விஷயத்தை கதைக்களமாக எடுத்திருக்கிறார். 30 வயதுக்கும் மேல் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு ஆண் படும் வேதனையையும், சமூகம் அவர்கள் மேல் போடும் அழுத்தத்தையும் கதையில் காட்டியிருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்யம் போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. ஒரே இடத்தில் கதை சுற்றிக் கொண்டே இருப்பதும், தாமதமான திருமணங்களில் இன்னும் நிறைய விஷயங்களை கலகலப்பாகவும் எமோஷனலாகவும் சொல்லியிருக்கலாம். அதை தவற விட்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மற்றபடி நடிகர்களின் நடிப்பு மற்றும் குடும்பத்தோடு பார்க்கும் அம்சங்களுக்காக நிச்சயம் போய் பார்க்கலாம்.

