மார்கன் – விமர்சனம்!

நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக அறிமுகம் ஆனதில் இருந்தே அவருக்கு வலுவான ஒரு பாதை அமைத்து கொடுத்தது திரில்லர் படங்கள் தான். கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர் என அவர் கையில் எடுத்த எல்லா படங்களுமே அவருக்கு வெற்றி வாகை சூடிக் கொடுத்துள்ளன. அந்த வகையில் எப்போதும் புதுவித கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தன்னை விட கதையின் மேல் அதிகம் நம்பிக்கை வைத்து நடிக்கும் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘மார்கன்’. எடிட்டராக இருந்த லியோ ஜான் பால் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். விஜய் ஆண்டனிக்கு இன்னொரு வெற்றிப் படமாக அமைந்ததா? லியோ ஜான் பால் இயக்குனராகவும் சாதித்தாரா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, மும்பையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி மகளை இழந்து, எதிரிகளால் ஒரு விஷ ஊசி குத்தப்பட்டு பாதி உடல் கருப்பாகி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட அவரது மகளை கொலை செய்த pattern-லேயே அந்த கொலையும் நடக்க, அதை விசாரிக்க சென்னை வருகிறார். வந்த இடத்தில் அந்த கொலையை விசாரிக்கும்போதே அடுத்தடுத்த கொலைகளும் அரங்கேறுகிறது. ஆரம்பத்திலேயே வினோதமான நடவடிக்கைகளுடன் சுற்றும் அஜய் திஷானை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கிறார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல திடுக்கிடும் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தெரிய வருகிறது. அந்த இளைஞன் அஜய் யார்? அந்த கொலைகளுக்கான பின்னணி என்ன? விஜய் ஆண்டனி எப்படி அதை கண்டுபிடித்தார்? எப்படி அதை தடுத்து நிறுத்தினார் என்பதே மீதிக்கதை.

விஜய் ஆண்டனி தனக்கு மிகவும் தோதான திரில்லர் ஜானரில் அலட்டல் இல்லாத அதே சமயம் கதைக்கு என்ன தேவையோ அதை மிகச்சரியாக கொடுத்திருக்கிறார். படம் முழுக்க கதைக்கு தேவை என்பதாலேயே அந்த பாதி கருப்பான அந்த தோற்றத்துடன் நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரிக்கே உரிய அந்த தோரணையை கச்சிதமாக காட்டியுள்ளார்.

அறிமுக நடிகர் அஜய் திஷான், விஜய் ஆண்டனிக்கு இணையான, சில இடங்களில் விஜய் ஆண்டனியை விட முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு அறிமுக நடிகருக்கு கிடைக்காத கதாபாத்திரம். தண்ணீரில் அவர் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் அதீதம். நடிப்பை விட நீச்சல் திறமையை அவர் காட்டிய விதம் மிகச்சிறப்பு. காவல்துறை அதிகாரியாக பிரிகிடா சகா தன்னுடைய தேர்ந்த, தெர்ந்தெடுத்த நடிப்பால் கச்சிதமாக செய்து முடித்துள்ளார். சமுத்திரகனி ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக இரண்டு இளம்பெண்களாக வரும் நடிகைகள்.

யுவா ஒளிப்பதிவு படத்துக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறது. குறிப்பாக நீருக்கடியில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் படத்தில் பார்க்கும்போது ஒரு ஆழமான உணர்வை கொடுத்திருக்கிறது. விஜய் ஆண்டனி படங்களில் சமீப காலங்களில் குறையாக தெரிந்த விஷயம் இசை. அந்த குறை இந்த படத்தில் இல்லை. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அருமை. குறிப்பாக உலகையே முழுவதும் வெறுக்கிறேன் பாடல் ஆரம்பத்தில் உபயோகப்படுத்தியதும், கிளைமாக்ஸில் உபயோகப்படுத்தியதும் மிகச் சிறந்த அம்சம். சொல்லிடும்மா பாடல் இளமை துள்ளல். அதை காட்சிப்படுத்திய விதமும் கண்களுக்கு இதம். பின்னணி இசை திரில்லர் உணர்வை மிக மிக அதிகமாக்கியிருக்கிறது.

இயக்குனராக லியோ ஜான் பால். நல்ல ஒரு அறிமுகம். சீரியல் கில்லர், இன்வெஸ்டிகேஷன் அந்த கதையில் சித்தர் கதையை இணைத்த விதம் என சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார். அத்தோடு படத்தில் நிற அரசியலையும் அழகாக சொல்லியிருக்கிறார். யார் அந்த கொலையாளி என்பதை ரசிகர்களை யூகிக்க விடாமல் காட்சிகளை பரபரவென நகர்த்தி நம்மை கட்டிப் போட்டிருக்கிறார். மொத்தத்தில் நல்ல ஒரு திரில்லர் இயக்குனராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் லியோ ஜான் பால். திரில்லர் ரசிகர்களுக்கு நல்ல தீனி, நிச்சயம் எல்லோரும் பார்க்கக் கூடிய படமாகவே அமைந்திருக்கிறது இந்த “மார்கன்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *