தமிழ் இன வரலாற்றில் இப்படி ஒரு புலவர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வான் புகழ் கொண்டவர் திருவள்ளுவர். அவர் இயற்றிய 133 அதிகாரங்களை கொண்ட 1330 திருக்குறள் இன்றுவரை உலகப் பொதுமறையாக போற்றப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட திருவள்ளுவர் வாழ்வை சொல்லும் ஒரு படமாக உருவாகியுள்ளது இந்த “திருக்குறள்” திரைப்படம். செம்பூர்.கே.ஜெயராஜ் அவர்கள் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுத A.J.பாலகிருஷ்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை எப்படி இருக்கு? சூப்பரா? சுமாரா? பார்க்கலாமா? வேணாமா? என்பது போல விமர்சனம் செய்வது ஏற்பல்ல. நாம் பார்த்த வரை நம்முடைய அனுபவங்களை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.
படத்தின் கதைப்படி, மனைவி வாசுகியுடன் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் திருவள்ளுவர். அய்யன் என எல்லோராலும் மிகுந்த மரியாதையோடு அழைக்கப்படும் திருவள்ளுவர் திருக்குறளை கொஞ்சம் கொஞ்சமாக எழுதி சேர்த்து வருகிறார். இலக்கியங்களை அங்கீகரிக்கும் மதுரை தமிழ் சங்கம் நாலடிக்கும் குறைவாக உள்ள வெண்பாக்களை அனுமதிப்பதில்லை என சொல்லி திருக்குறளை அங்கீகரிக்க மறுக்கிறது. இதற்கிடையில் குமண நாட்டின் மன்னனை சூழ்ச்சி செய்து பதவியில் இருந்து இறக்கி நாட்டை ஆள்கிறார் அவரது தம்பி. அந்த நாட்டுக்கும் பக்கத்து நாட்டுக்கும் இடையே போர் நிகழ, அந்தப் போரில் நியாயத்தின் பக்கம் நிற்கிறார் திருவள்ளுவர். அந்த போரின் முடிவு என்ன? திருக்குறள் எப்படி அங்கீகரிக்கப்பட்டது? என்பதே மீதிக்கதை.
திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்பதே தெரியாத நமக்கு, வெறும் ஓவியத்தில் பார்த்த நமக்கு திருவள்ளுவராக நடித்திருக்கும் கலைச்சோழனை முதலில் பார்க்கும்போது ஏற்றுக் கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறது. அவரும் வசன உச்சரிப்பு, உடல் மொழி என நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரது மனைவி வாசுகியாக தனலட்சுமி. பார்க்கும்போதே அவ்வளவு கண்ணியம், அழகிய தமிழ் முகம் என நம்மை வசீகரிக்கிறார். காதல் காட்சிகளில் கசிந்து உருகும் காட்சிகளிலும் மனதில் நிற்கிறார்.
படைத் தளபதி பரிதியாக குணா பாபு. வீரத்தை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், காதக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். அவரது காதலி பவளக்கொடியாக பாடினி குமார் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். இவர்களுடன் சுகன்யா, சந்துரு, ஓ.ஏ.கே.சுந்தர், சுப்ரமணிய சிவா, கொட்டாச்சி, அரவிந்த் ஆண்டவர், நாற்காலி கார்த்தி, யாசர், ஹரிதா ஸ்ரீ உள்ளிட்ட மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
பாரதி படத்துக்கு இசையமைத்த இளையராஜா இந்த படத்துக்கு அதைப் போலவே நல்ல இனிமையான இசையை கொடுத்திருக்கிறார். மேலும் நம்மை அந்த காலத்துக்கே பயணிக்க வைத்திருக்கிறது இசை. ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே ஒளிப்பதிவும் படத்துக்கு பலம். சின்ன பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை கொஞ்சம் மெருகேற்றிக் காட்டுகிறது ஒளிப்பதிவு. கலை இயக்கமும் முடிந்தவரை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
திருவள்ளுவர் பயோபிக் என்பதாக இல்லாமல் படத்தில் மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை தந்திருக்கிறார்கள். பீரியட் செட்டப் படத்தை இந்த பட்ஜெட்டில் கொடுத்திருப்பதே ஆச்சர்யப்படுத்துகிறது. அதற்கேற்ப காட்சிகளை மினிமலாக அமைத்திருக்கிறார்கள். படத்தின் சங்க காலத் தமிழை அழகாக பேசுகிறார்கள். ஆனால் இடையிடையே வழக்கு தமிழ் வந்து போவது ஏன் என்பது தான் புரியவில்லை.
ஆனாலும் நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படைப்பு தான். பெரியார், பாரதி படங்கள் வெளிவந்த போது பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு காண்பித்தது போல இந்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ படத்தையும் திரையிட்டு காட்டினால் மாணவர்களுக்கு நல்ல ஒரு அனுபவமாக இருக்கும்.

