பாரதிராஜா, பாக்யராஜ் பெயரில் தமிழக அரசு விருது வழங்கணும் – பேரரசு கோரிக்கை!

வி.ஆர். கம்பென்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம், M.A., B.Ed. தயாரிப்பில், சி.ஆர். ராஜேஷ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘வஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தமிழ்த் திரைப்பட பி.ஆர்.ஓ. சங்க செயலாளர் விஜய் முரளி கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குனர் பேரரசு பேசும்போது, “பிரசாத் லேப் மேடை, இப்போது ஓர் இசை வெளியீடு என்றாலும் மனது ஏனோ கனத்துப் போய்தான் இருக்கிறது. இதற்குமுன் இந்த மேடையில் `மக்கள் தலைவா’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் நான் நடித்திருந்தேன், அந்த இசை வெளியீட்டு விழாவுக்கு இயக்குநர், திரைக்கதை மன்னர், எங்கள் மானசீக குரு கேபாக்யராஜ் அவர்களும் கலந்துகொண்டார். அதுதான் அவர் கலந்துகொண்ட கடைசித் திரை நிகழ்வு. அவரை இப்போது இழந்துவிட்டோம்.

கடந்த ஒரு மாதத்திலேயே பெரும் இமயங்கள், பெரும் கலைஞர்களின் இழப்பு நிகழ்ந்து விட்டது. அது எங்கே போனாலும் பாரமாகவே இருக்கிறது. பாரதிராஜா, பாக்யராஜ் என்பது வெறும் பெயரல்ல, வரலாறு. இந்த திரையுலகில் இன்னும் எத்தனை தலைமுறை இயக்குநர்கள் வந்தாலும் சரி, அவர்களை மறக்க முடியாது, மறக்கவும் கூடாது. பாரதிராஜா என்ற ஓர் இயக்குநர் வெற்றியடையவில்லை என்றால், கிராமத்திலிருந்து பல இயக்குநர்கள் கிளம்பி வந்திருக்க மாட்டார்கள். பாக்யராஜ் சாரின் படங்கள் வெற்றி பெற்றதும்தான் எதார்த்தமான படங்கள் வெற்றி பெறும் என நம்பிக்கை வந்தது.

தமிழக முதல்வர் விஜய்க்கு ஒரே வேண்டுகோள்தான். இயக்குநர் எனச் சொன்னாலே பாரதிராஜா பெயரும், திரைக்கதை என்று சொன்னாலே பாக்யராஜ் பெயரும்தான் நினைவுக்கு வரும். ஒரு சினிமாக்காரனாக எங்களுடைய கோரிக்கை, தமிழக அரசு சார்பில் விருது வழங்கும்போது சிறந்த இயக்குநருக்கான விருதை பாரதிராஜா சார் பெயரிலும், சிறந்த திரைக்கதைக்கான விருது கே பாக்யராஜ் பெயரிலும் வழங்கப்பட வேண்டும். இதுதான் அவர்களுக்கு நாம் காட்டும் நன்றிக்கடனாக இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *