டாடா திரைப்பட இயக்குனர் கணேஷ் கே பாபு கதை எழுதி, மாறன் உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் கல்யாண் கே ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி, அர்ச்சனா நேத்ரன், நட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் தான் “டார்க்”. படம் எப்படி இருக்கு? என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பாக்யராஜ் வீட்டின் மாடியில் இருக்கும் 3 இளைஞர்களில் ஒரு இளைஞர் இரண்டு பேரை கொன்று விட்டு, தனக்குத் தானே நெருப்பு வைத்து எரித்துக் கொண்டு இறந்து போகிறார். சில ஆண்டுகள் கழித்து அதே வீட்டில் வீட்டின் ஓனர் பாக்யராஜூம், நாயகன் அஜய்-யும் இறந்து போயிருக்க, அதை விசாரிக்கும் அதிகாரியாக வருகிறார் நட்டி. திடீரென அஜய் எழுந்து உட்கார நட்டியும், போலீஸ் அதிகாரிகளும் அதிர்ச்சியாகிறார்கள். என்ன நடந்தது? அந்த வீட்டில் இருக்கும் மர்மம் என்ன? நட்டி ஏன் அந்த வழக்கை தனித்துவமான ஒன்றாக பார்க்கிறார்? அஜய் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.
நாயகன் அஜய். அவர் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது திரைப்படம். சீரியஸான ஒரு கதாபாத்திரம், நல்ல உயரமான, வாட்ட சாட்டமான இளைஞராக மனதில் பதிகிறார். ஒருவிதமான மனநிலையில் படம் முழுக்க அந்த இளைஞராகவே வாழ்ந்திருக்கிறார். நாயகன் நட்டி. ஒரு போலீஸ் அதிகாரியாக நல்ல நடிப்பு. அஜய் எழுந்து உட்காரும் காட்சி, மருத்துவமனை காட்சியில் நட்டி நன்றாகவே ரெஜிஸ்டர் ஆயிருக்கிறார்.
மறைந்த பாக்யராஜ் ஒரு உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை ஒரு நடிகராக இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது இருந்தது. அஞ்சனா நேத்ரன் ஆங்காங்கே வந்தாலும் அவர் கதாபாத்திரத்தை மிக அழகாக செய்திருக்கிறார். மற்ற நடிகர்களும் நல்ல சாய்ஸ்.
டெக்னிக்கலாகவும் படம் நல்ல தரமாகவே இருக்கிறது. ரவி சக்தி ஒளிப்பதிவில் பல காட்சிகள் நம்மை ரொம்பவே திகிலூட்டுகிறது. அதிலும் அந்த வீட்டை காட்டிய விதம் எல்லமே டெரர். அஜய் ஆஃபீஸிலும் ஒரு காட்சியில் சிதற விட்டிருக்கிறார். மனு ரமேசன் பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார்.
கணேஷ் கே பாபு இந்த மாதிரி ஹாரர் திரில்லர் படத்தையும் எழுதுவாரா என நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இயக்குனர் கல்யாண் கே ஜெகன் அதை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். காட்சிகளை படமாக்கிய விதமும், பதட்டத்தை தணியாமல் படம் முழுக்க தக்க வைத்ததும் சிறப்பு. படத்தின் முதல் காட்சியே அதிர வைக்கிறது. முதல் பாதியில் திகிலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் எமோஷனும் கலந்து நன்றாகவே தந்திருக்கிறார். மொத்தத்தில் திரில்லர் விரும்பிகள் நிச்சயம் பார்க்கலாம்.

