பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம்.கோபி இயக்கத்தில் அறிமுக நடிகர் தினேஷ் கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக பிரானா நடித்திருக்கும் படம் ‘யாதும் அறியான்’. இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நாயகன் தினேஷ், ஆனந்த் பாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள். காதலில் அடுத்த கட்டத்துக்கு செல்லும் ஆசையில் உள்ள நாயகன் தினேஷ் அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் நண்பன் ஆனந்த் ஒரு ரிசார்ட்க்கு அழைக்க, இந்த சந்தர்ப்பத்தை கையில் எடுக்கும் நாயகன் தினேஷ் அவரது காதலியை அழைக்கிறார். தங்கள் தோழிகளுடன் சேர்ந்து அடர்ந்த காட்டிற்குள் நுழைகிறார்கள். காட்டுக்குள் இருக்கும் ஒரு பங்களாவில் தங்குகிறார்கள். அப்புக்குட்டி அந்த விடுதியை பராமரிக்கிறார். நாயகன் அவரது காதலியுடன் ரொமான்ஸ் செய்ய, கொஞ்ச நேரம் கழித்து வந்து பார்க்கும்போது அவர் இறந்து விடுகிறார். மர்மமான முறையில் அவர் இறந்து எப்படி? அவர் நண்பர்களை, விடுதி காப்பாளரை எல்லாம் எப்படி சமாளித்தார்? அதன் பின் என்ன முடிவெடுத்தார்? என்பதே மீதிக்கதை.
கதையின் நாயகனாக தினேஷ். நடிக்க ஸ்கோப் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் தன்னால் முயன்ற நடிப்பை வழங்கியிருக்கிறார். காதலனாக, கொலைகாரனாக, சைக்கோ போன்ற ஒரு கதாபாத்திரத்திலும் முடிந்தவரை நடித்திருக்கிறார். நண்பராக வரும் KPY ஆனந்த் பாண்டி துணைக் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். நாயகியாக பிரானா ஒரு குடும்பப் பாங்கான ஒரு கதாபாத்திரத்தில் மனதில் பதிகிறார். ஆனந்த் காதலியாக வரும் நடிகையும், விடுதி காப்பாளரான அப்புக்குட்டியும் கதாபாத்திரத்துக்கு மிக பொருத்தம். தம்பி ராமையா ஒரு கேமியோ ரோலில் வந்தாலும் அவரது இருப்பு படத்துக்கு பக்கபலம்.
எல்.டி. ஒளிப்பதிவில் அந்த காட்டு பங்களா காட்சிகள் பிரமாதம். ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கிய விதமும், சைக்கோ காட்சிகளை படமாக்கிய விதமும் சிறப்பு. தர்ம பிரகாஷ் பின்னணி இசை படத்துக்கு பக்க பலம்.
நாயகன் தினேஷூக்காகவே எழுதிய கதை போலவே தோன்றுகிறது இந்த கதை. ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையை கொஞ்சம் குழப்பமாகவே தந்திருக்கிறார் எம். கோபி. 2024, 2026 என கதையில் மர்மமான விஷயங்களை சொன்ன விதமும், கனவு என்ற விஷயத்தை சொன்ன விதமும் கொஞ்சம் அனைவராலும் புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்தை தர வாய்ப்பு இருக்கிறது. அதில் மிக அழகாக விஜய் கட்சி மாநாடு, முதல்வர் விஜய் என காட்டிய விதமும் ஸ்கோர் செய்யும் காட்சிகள். மொத்தத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளை விரும்பும் ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

