சியா புரடக்க்ஷன்ஸ் சுபா & சுரேஷ் ராம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் S. விஜய் சுகுமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் “மாண்புமிகு பறை “. எல்லா இசையும், இசைக்கருவிகளும் ஒன்று தான். இசையில் உயர்வு தாழ்வு என்பதே இல்லை. ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்கு கிடைக்கும் மரியாதையும், புகழும் பறை இசைக்கு கிடைப்பதில்லை. அந்தப் பறை இசையின் உன்னதத்தை சொல்லும் படம் தான் “மாண்புமிகு பறை”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, லியோ சிவக்குமார், ஆர்யன் இருவரும் பறை இசைக் கலைஞர்கள். விழாக்களுக்கு பறை இசை வாசிப்பது தன அவர்களின் தொழில். ஆனாலும் பறையை அவமதிப்பதற்கு மூலக் காரணமாக இருப்பதால் கோவில் பூஜை மற்றும் சாவு வீட்டில் இசைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் இவர்கள் வாழ்க்கையில் சில எதிரிகள் ஆங்காங்கே வந்து போகிறார்கள். அதே நேரத்தில் சிவக்குமார் காயத்ரியை சந்தித்து காதலில் விழுந்து திருமணமும் செய்கிறார். இந்த சூழலில் ஒரு விழாவுக்கு வாசிக்கச் சென்ற இடத்தில் சிவக்குமாரின் நண்பன் ஆர்யன் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? என்று தெரிவதற்கு முன்பே லியோ சிவக்குமாருக்கும் எதிரிகளால் ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தில் இருந்து மீண்டாரா? அவரது திருமண வாழ்க்கை என்ன ஆனது? பறை இசையின் பாரம்பரியத்தை மீட்டெடுத்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகனாக லியோ சிவக்குமார் அந்த கிராமத்து இளைஞராக, அதே சமயம் நடக்கும் சமகால அரசியல், தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என எல்லாவற்றையும் அறிந்து வைத்து அதை எதிர்க்கும் நாயகனாக ஸ்கோர் செய்கிறார். நாயகி காயத்ரி ரெமா முதல் பாதியில் காதல், ரொமான்ஸ் என அழகாக வந்து போகிறார். இரண்டாம் பாதியில் முக்கியமான காட்சிகளில் எல்லாம் நம்மை அசர வைக்கிறார். அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார். லியோ சிவக்குமார், காயத்ரி ரெமா ஜோடியின் ரொமான்ஸ் காட்சிகளும் நன்றாகவே இருக்கிறது.
நாயகனின் நண்பனாக ஆர்யன், கனமான கதாபாத்திரத்தில் ரசிகர்களுக்கு மிக நல்ல அறிமுகமாக அமைகிறார். இடைவேளைக் காட்சியில் நம் மனதை கனமாக்குகிறார். கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக் ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், நந்தகுமார், சரவணன் என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள் உட்பட எல்லோருமே ஓரளவு நல்ல நடிப்பையே தந்திருக்கிறார்கள்.
கொலஞ்சி குமார் ஒளிப்பதிவில் அந்த எளிய மக்களின் வாழ்வு மிக அழகாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்திருக்கிறார். எளிய மக்களின் வாழ்வின் இசையை வழங்கும் தேனிசைத் தென்றல் தேவா வாழ்வியலுடன் கலந்த இசையை வழங்கியுள்ளார். பறை இசை இசைக்கும் காட்சிகளிலும் நேரடியாக அந்த இசையை கேட்ட அனுபவத்தை வழங்குகிறார்.
அறிமுக இயக்குநர் விஜய் சுகுமார் படத்தின் ஆரம்பத்திலேயே பறை இசையின் பின்னணியை மிக அழகாக விளக்கிச் சொல்லி சொல்ல வந்த கருத்தை அழகாக மனதில் ஏற்றியிருக்கிறார். அதன் பின் பறை இசையை யாரும் பொருட்படுத்தாத வலியை சொல்வதாகட்டும், அதன் பெருமையை அடுத்தடுத்த காட்சிகளில் சொல்வது என தலைப்புக்கு நியாயம் சேர்க்கிறார். அதே வேளையில் இதை ஒரு ஆணவப் படுகொலை படமாகவும் தந்து நம்மை உலுக்குகிறார். இப்படி தான் கதை போகுமோ என நினைக்கும்போது வேறு ஒரு திசையில் பயணிக்கிறது. இது படத்தில் வியாபாரத்துக்காக சேர்த்திருக்கிறார்களோ என நினைக்கும் விஷயம் படத்தின் மையக்கதையாக மாறுவதும் எதிர்பாராத ஒன்று. மொத்தத்தில் இயக்குனர் சொல்ல வந்த கருத்தை சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

