தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான சினிமாக்களுக்கு மத்தியில் எப்போதாவது அரிதாக வரும் unconventional சினிமாக்கள், நம் மனதின் ஆழம் வரை சென்று நம்மை ஏதோ செய்யும. பல கேள்விகளுடன், Self exploration உடன், Self realisations உடன், நம்மை நாமே புரிந்து கொள்ள உந்தும் படங்கள் வரும். எது Good எது Bad என சமூகம் கட்டமைக்கும் விஷயங்களில் இருந்து விலகி, உன் life உன் decisions உன் experiences என சொல்லும் படங்கள் வெளிவரும். அத்துடன் நமக்கு நம் வாழ்வின் அனுபவங்களை நினைவுக்கு கொண்டு வரும் படங்கள் வரும். அப்படி எல்லாவற்றையும் ஒரே படத்தில் தந்த படமாக வெளியாகியிருக்கிறது அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கியிருக்கும் “Bad girl” திரைப்படம்.
ட்ரைலர் சர்ச்சைகளை கிளப்பியிருந்தாலும் இயக்குனர் எடுத்துக் கொண்ட விஷயத்துக்கு 100% நியாயம் சேர்க்க எடுக்கப்பட்ட படம் என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரியும். இந்த படம் நிச்சயமாக நல்லா இருக்கா? சூப்பரா? சுமாரா? என்ற விமர்சனங்களுக்குள் அடங்காத ஒரு படம். சிலருக்கு ஆழ் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும், சிலருக்கு இதெல்லாம் படமா என்ற கேள்வி கூட எழும். என்னுடைய பார்வையில் எனக்கு படம் என்னவாக இருந்தது என்பதே இந்த கட்டுரை.
படத்தின் கதைப்படி, அம்மா ஆசிரியராக வேலை செய்யும் பள்ளியிலேயே படிக்கும் நாயகி ரம்யாவுக்கு படிப்பு வரவில்லை. பள்ளியில் படிக்கும்போதே புதிதாக வந்து சேர்ந்த மாணவன் ஹ்ருது ஹாரூன் உடன் காதல். பள்ளி நிர்வாகத்துக்கும், பெற்றோர்களுக்கும் இது தெரிய வர, ரம்யா வேறு பள்ளியில் சேர்க்கப்படுகிறார். ஹாரூன் சிங்கப்பூர் சென்று விட்டதாக சொல்கிறார்கள். காதல் பிரிந்த கோபத்தில் இனிமே நான் வீட்டில் இருக்க மாட்டேன், ஹாஸ்டல் தான், எனக்கு பிடித்ததை தான் செய்வேன், உனக்கு பிடிக்காததை உன்னை வெறுப்பேற்றவே செய்வேன் என அம்மாவிடம் செல்கிறார். அதன் பின் வீட்டை விட்டு பிரிந்து சுதந்திரமாக வளரும் ரம்யாவின் வாழ்வில் வந்து போன காதல், நட்பு, குடும்பத்தினர் மீதான புரிதல் என ரம்யாவின் வாழ்க்கை அனுபவங்களை சொல்லும் படமே இந்த “பேட் கேர்ள்”.
நாயகி அஞ்சலி சிவராமன் ரம்யாவாகவே வாழ்ந்திருக்கிறார். முகப்பருவுடன் உலா வரும் பள்ளி நாட்களில் ஆரம்பித்து, கல்லூரி, ஆஃபீஸ் வரை அவரின் கால மாற்றங்களையும், வயது முதிர்ச்சி மற்றும் தோற்ற முதிர்ச்சி என அத்தனையிலும் கச்சிதம். படம் முடிந்தாலும் சில நாட்கள் அந்த ரம்யா கதாபாத்திரம் நம்மை விட்டு அகலாது, அப்படி ஒரு சிறந்த நடிப்பு. அவரது அம்மாவாக நடித்திருக்கும் சாந்தி பிரியா அப்படி ஒரு அனுபவ நடிப்பு. சூழ்நிலைக் கைதியாக இருக்கிறார் என்பதையும் அவ்வளவு அழகாக பிரதிபலித்திருக்கிறார்.
தோழி செல்வியாக வரும் சரண்யா தேர்ந்தெடுத்த சிறப்பான நடிப்பு. இதற்கு முன் பார்த்திராத மாடர்ன் பெண்ணாக, எந்த சூழலிலும் தோழிக்கு உண்மையான தோழியாக இருந்து நம் மனதில் நிற்கிறார். ஹ்ருது ஹாரூன், டீஜே அருணாசலம், அப்பா, பாட்டி, மற்ற தோழிகள் என படத்தின் நடிகர்கள் தேர்வு கச்சிதம். வர்ஷா வரதராஜனுக்கு பாராட்டுக்கள்.
ப்ரீத்தா ஜெயராமன், ஜகதீஷ், பிரின்ஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. அமித் திரிவேதி இசை இந்த காட்சி மொழிக்கு சிறப்பு சேர்த்துள்ளது. பாடல்களும் படத்தின் உணர்வுகளை நமக்குள் கடத்த பேருதவி புரிந்துள்ளது.
இயக்குனர் வர்ஷா பரத் எடுத்துக் கொண்ட கதையை தனித்துவமான கதை சொல்லல், காட்சி மொழி மூலம் ஒரு சிறப்பான படைப்பாக தந்திருக்கிறார். சுதந்திரமாக இந்த உலகத்தில் வாழ நினைக்கும் ஒரு பெண்ணை இந்த வாழ்க்கை எங்கெங்கு கொண்டு செல்கிறது, ஒவ்வொரு கட்டத்திலும் அவள் முடிவுகளை உடன் இருந்து பார்ப்பவர்கள் யார்? மனதில் சின்ன சின்னதாக பூட்டி வைத்திருக்கும் விஷயங்களை வெளிப்படையாக சொல்வதால் நடப்பவை என்ன? பெண் சுதந்திரத்துக்கு பெண்களே தடையாக இருந்தது எப்படி? என்பனவற்றை காட்சிகள் மூலமும் வசனங்கள் மூலம் மிக இயல்பாக, மிக அழகாக சொல்லியிருக்கிறார். இயல்பாக பேசிக் கொள்ளும் விஷயங்களை எந்தவித ஒளிவுமறைவும் இன்றி வெளிப்படியாக கதாபாத்திரங்கள் பேசுவதை பார்க்கும்போது அவ்வளவு யதார்த்தம். நாயகி ரம்யா மற்றும் வழி தவறிய பூனை தாயை தேடி வரும் காட்சிகள் படத்தின் அழகான அம்சங்களில் ஒன்று. மொத்தத்தில் வர்ஷா பரத் போன்ற இயக்குனர்களின் தனித்துவமான குரல்கள் அடிக்கடி ஒலிக்க வேண்டும் தமிழ் சினிமாவில்.

